பல சவால்கள், தோல்விகள் சந்தித்தும் தனக்கென ஒரு வெற்றிப் பாதையை கண்டெடுத்த தொழில்முனைவர்!

0

ஸ்டார்ட்-அப், அண்மையில் அதிகமாக நாம் கேட்கும் வார்த்தை. தற்போது பெரும் போக்காக வளர்ந்து வரும் இந்த ஸ்டார்ட்-அப் கலாச்சாரம், கடந்த 10 வருடங்களாக தான் வளர்ச்சியை கண்டு வருகிறது. அதற்கு முன் கல்லூரி முடித்த எவரும் நிரந்தர சம்பளத்துடன் வேலையை எதிர்பார்த்தார்களே தவிரே தொழில் வாய்ப்பை அல்ல. அதிலும் முக்கியமாக கல்லூரி படிக்கும்பொழுதே தொழில் முனைப்பில் இறங்க மாணவர்கள் தயக்கம் காட்டுவார்கள். 

ஆனால் இங்கு சென்னையைச் சேர்ந்த மகேஷ், கல்லூரியின் போதே தன் தொழில் பயணத்தை துவங்கி இன்று ’கிராயன் டி’ (Crayon'd) என்னும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

மகேஷ்; கிராயன் டி என்னும் தொழில்நுட்ப தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர். கடந்த 5 வருடங்களாக பல ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் யோசனைகளுக்கு உயிர் கொடுத்து வருகிறது இவரது நிறுவனம். இந்தத் தொழில் பயணத்தை இவர் அடைவதற்கு முன் பல தொழில் பாதைகளையும் தோல்வியையும் சந்தித்துள்ளார்.

“எனது தொழில் பயணம் நான் கல்லூரி படிக்கும்பொழுதே துவங்கிவிட்டது அதாவது 17 வருடங்களுக்கு முன். ஆனால் வெற்றிகரமான ஓர் தொழிலை சில வருடங்களுக்கு முன்புதான் கண்டறிந்தேன்,”

என தன் தொழில் அனுபவத்தை நம்முடன் பகிர்கிறார் மகேஷ். பொறியியல் கல்லூரியில் சேர்ந்தப்பின் கணினி நிரலாக்கத்தில் அதாவது ப்ரோகிராமிங்கில் விருப்பம் ஏற்பட்டு அதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் மகேஷ். அதோடு விடையை தேடும், பதிலை ஆராயும் ஆர்வம் கொண்ட மகேஷ் படிப்புக்கான சொல்லகராதியை சுலபமாக கற்க ஒரு நிரலாக்கத்தை உருவாக்க முயன்றார்.

அப்பொழுது ஓர் நுழைவு தேர்வுக்கு தயார் செய்துக்கொண்டிருந்த மகேஷ் அந்த பாடங்களில் ஈடுபாடு இல்லாததால் அதற்குத் தீர்வுக்கான ஓர் வாடிக்கையாளராக இருந்து அதற்கான நிரலாக்கக் கருவியை உருவாக்கினார். அப்பொழுது ஸ்மார்ட்போன் வலைத்தளங்கள் இல்லை அதனால் சிடி-கள் மூலம் தன் தயாரிப்பை விற்றார். இது அவரது முதல் தொழில் முயற்சி, இதன் பின் நிரலாக்கம் மீது அதிக ஈடுபாடு ஏற்பட்டு அதுவே தன் தொழில் பயணமாக மாறிவிட்டது என்கிறார்.

“முதலாம் ஆண்டில் தயாரித்த எனது தயாரிப்பை அடுத்த கல்லூரி ஆண்டுகளில் சந்தைப் படுத்த முயன்றேன். அப்பொழுது 2000ல் ஸ்டார்ட்-அப் என்ற வார்த்தைக் கூட இல்லை, அதனால் முதலீடு எதுவும் இல்லை...”

தனது முதல் தொழிலை தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற நினைத்தபோது போதிய சூழ்நிலை மற்றும் நிதி இல்லாததால் படிப்பு முடிந்தவுடன் ஒரு நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு பணிக்கு அமர்ந்தார். ஆனால் தொழில்முனைவு மேல் ஆர்வம் இருந்ததால் ஒன்றரை வருடத்தில் தன் பணியை விட்டு மற்றொரு தொழில் பயணத்திற்கு தயாரானார் மகேஷ். 

அடுத்த 6 மாதங்கள் மீண்டும் கல்வி நிரலாகத்தை செய்ய முயன்று அதுவும் சரியான பாதையில் அமையாததால் மீண்டும் மாத சம்பளத்திற்கு சென்றார். ஏற்ற இறக்கத்தோடு தனது தொழில் பயணம் அமைய, ஒரு நாள் ஒரு பொறியாளரை கொண்டு தன் தொழில் பயணத்தை மீட்கத் துவங்கினார்.

“ஒரு பொறியாளர் வேலை தேடி என்னிடம் பேசியபோது ஏன் அவருக்கான தொழில் வாய்ப்பை நாம் உருவாக்கக் கூடாது என்று தோன்றியது. அவரை வைத்து மீண்டும் கல்வி நிரலாக்கத்தை முயற்சி செய்து எனது வருமானத்தில் இருந்து ஒரு தொகையை சம்பளமாக கொடுத்தேன்.”

ஒரு வருடம் தான் நினைத்தது போல தன் நிறுவனம் அடி எடுத்து வைத்தாலும் சில காரணங்களால் அதை தொடர முடியவில்லை. பெங்களூரில் வேலை செய்துக்கொண்டு தன் சொந்த ஊரான கோவையில் தன் நிறுவனத்தை நடத்தி வந்தார். முன்னும் பின்னும் நடந்து கொண்டிருந்தால் முன்னேற முடியாது என்று முடிவு செய்து வேலையை விட்டு சென்னை வந்தார் மகேஷ்.

“பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு முதலீட்டார் என் தயாரிப்புக்கு முதலீடு செய்ய முன் வந்தார். 11 மாதம் வேறு எதிலும் கவனம் செலுத்தாமல் எனது ப்ரோகிராமிங்கில் மொத்த கவனத்தையும் செலுத்தினேன். ஆனால் முதலீட்டார் எங்கள் தயாரிப்பை முன் எடுத்து செல்ல விரும்பவில்லை.”

கிரயான் டி-ன் துவக்கம்

தன் உழைப்பு, கனவு நொறுங்கியதோடு நிதி நிலைமையும் சரிந்தது. 12 வருடமாக உருவாக்கி வந்த தன் கனவை உதரிவிட்டு பழைய வாழ்க்கைக்கு திரும்பி விடலாம் என்ற யோசித்தபோது ஏதோ ஒரு உந்துதலால் மீண்டும் முயற்சி செய்து 2012ல் கிரயான் டி-ஐ துவங்கினர்.

2 உதவியாளர்களுடன் ஒரு சிறிய இடத்தில் ஓர் பிராண்டை உருவாக்க வேண்டும் என்ற கனவோடு செப் 2012ல் கிரயான் டி செயல்படத் துவங்கியது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்காக ப்ராடக்ட் டெவெலப்மெண்டை சேவையாக வழங்க முடிவு செய்து வாடிக்கையாளர்களை பெறத் துவங்கினர். தற்பொழுது 80க்கும் மேலான ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப தயாரிப்பை வழங்கி வருகிறது இவரது நிறுவனம்.

குடும்பத்தினரிடம் இருந்து நிதி உதவியை பெற்று இந்த நிறுவனத்தை துவங்கியுள்ளார் மகேஷ். தனது ப்ரோகிராமிங் திறமையின் மீது நம்பிக்கை கொண்டும் தொழிநுட்ப தயாரிப்பில் உள்ள வளர்ச்சியை நோக்கியும் ஓர் நம்பிக்கையுடன் இதனை துவங்கியுள்ளார் இவர்.

லாபம் ஒரு புறம் முக்கியம் என்றாலும் லாபத்தை மட்டுமே தன் நோக்கமாகக் கொண்டு தன் பயணத்தை அமைக்கவில்லை என்கிறார். 

பல நிறுவனங்களுக்கு தொழில்நுட்ப சேவையை வழங்கினாலும் தமிழ்நாடு அரசின் அவசர 108 சேவை போன்ற பல சமூக தேவைகளுக்கும் சேவையை வழங்குகிறது இவரது நிறுவனம்.

துவக்கத்தில் பல தோல்விகளை சந்தித்தாலும் தொடர் முயற்சியால் இன்று நிலையான நிறுவனத்தை நடத்தி வரும் மகேஷ், அடுத்த 2 ஆண்டுகளுக்கு இன்னும் பல தயாரிப்புகளை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கிறார்.

Related Stories

Stories by Mahmoodha Nowshin