பெற்றோரையும்- பள்ளிகளையும் இணைக்கும் 'ஸ்கூடாக்ஸ்'

0

நம்மில் பலர், வாழ்க்கையில் நாம் செய்ய விரும்பிய செயலுக்கான பாதையை தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் நின்றுரிக்கிறோம். பகுல் சந்திராவும் இத்தகைய நிலையை எதிர்கொண்டிருக்கிறார். தனது முயற்சியின் மூலம் உருவான டாட்ஸ்கெயர்.காம் (Dotsquare.com) நிறுவனம் மூலம் யு.கே, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இரணடாயிரம் வாடிக்கையாளர்களை கொண்டு, 1000 இணைய அமைப்புகள் மற்றும் 2,000 செயலிகளை உருவாக்கிய அனுபவம் உள்ளவர் பகுல். இந்நிலையில் அவர் தான் விரும்பிய பாதையில் பயணிக்கத முடிவு செய்து தன் புது முயற்சியை துவங்கினார்.

2015 கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, பகுல் மற்றும் பிரசாந்த், ஜெய்பூரில் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்தனர். அப்போது மதிய உணவு நேரத்தின் போது பகுலுக்கு ஒரு அழைப்பு வந்தது. அது அவரது மகனின் வகுப்புத்தோழனின் பிறந்தநாள் விருந்தில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பு. மகன் மற்றவர்களுடன் கலந்து பழகுவதற்கான நல்ல வாய்ப்பு என்றாலும், இந்த நண்பர் பற்றி அவருக்கு சரியாக நினைவில்லை என்பதால் தன் மகனை அனுப்ப சற்று தயக்கமாகவும் இருந்தது.

இந்த சிக்கல் இருவரையும் யோசிக்க வைத்தது. பெற்றோர்கள் மற்ற பெற்றோர்களுடன் தொடர்பு கொண்டு கருத்துக்களை பரிமாறிக்கொள்ள எந்த வழியும் இல்லாமல் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். கலந்துரையாடலுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதுடன், சக பெற்றோர்களுக்கு இடையிலான உரையாடல் பெரும்பாலும் தேவை அடிப்படையிலானதாகவே அமைகிறது என்பதை உணர்ந்தனர். இதற்கு தீர்வாக தான் பெற்றோர்களுக்கான வலைப்பின்னல் சேவையான ஸ்கூடாக்ஸ் (ScooTalks) தளத்தை துவக்குவதற்கான எண்ணம் உண்டானது.

ஸ்கூடாக்ஸ் குழு
ஸ்கூடாக்ஸ் குழு
"இந்த எண்ணம் உண்டானதும் ஒரு சில பெற்றோர்களுடன் பேசிப்பார்த்த போது பெரும்பாலும் அம்மாக்கள் தான் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி விவாதிக்க வாட்ஸ் அப் குழுக்கள் கொண்டிருப்பதை தெரிந்து கொண்டோம். அப்பாக்களின் பங்கு மிகவும் குறைந்து வருவதையும் தெரிந்து கொண்டோம். எனவே ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவும், டயரி கலாச்சாரத்துக்கு விடை கொடுத்து தகவல் பரிமாற்றத்தை எளிதாக்கவும் தீர்மானித்தோம்”என்கிறார் மூன்று மற்றும் ஏழு வயது குழந்தைகளுக்கு தந்தையான பகுல் சந்திரா.

ஸ்கூடாக்ஸ் உதயம்

2015 ஜூன் மாதம் துவக்கப்பட்ட ஸ்கூடாக்ஸ், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை இணைக்கும் தகவல் தொடர்பு சாதனங்கள் கொண்ட ( இணைய, ஆண்ட்ட்ராய்ட், ஐ.ஓ.எஸ் செயலி) சேவையாகும். பெற்றோர்கள் வலைப்பதிவு மூலம் தொடர்பு கொண்டு புரிதலை வளர்த்துக்கொள்ளும் நிலையில், ப்ளாக்ஸ், கருத்து பரிமாற்றம் போன்ற பல கூடுதல் சேவைகளும் கைகொடுப்பதாக, இணை நிறுவனர்கள் பிரசாந்த் குப்தா மற்றும் பகுல் சந்திரா கூறுகின்றனர்.

அவர்கள் தளத்தில் முதலில் இணைந்தது ஜெய்பூரின் செயிண்ட்.சேவியர்ஸ் பள்ளி. அதன் பிறகு தற்போது ராஜஸ்தானில் உள்ள 19 பள்ளிகள் இதை பயன்படுத்துகின்றன. தற்போதுள்ள 6,000 கட்டண உறுப்பினர்களை, வரும் காலத்தில் 2.3 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

1.5 கோடி ரூபாய் அளவிலான சுய முதலீட்டில் துவக்கப்பட்டுள்ள இந்த சேவை எட்டு பிரிவுகளை கொண்டுள்ளது. நிகழ்ச்சிகளுக்கான தகவல் திரட்டி, குழந்தை நல வல்லுனர்கள், உள்ளூர் பயிற்சியாளர்கள், விவாத குழுக்கள் மற்றும் குழந்தைகளுக்கான செய்திகள் இதில் அடங்கும். இப்போதைக்கு வல்லுனர்களில், குழந்தை நல மருத்துவர்களே அதிகம் இருந்தாலும் விரைவில் குழந்தை நல அலோசகர்களையும் சேர்க்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் பெற்றோர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்க உள்ளனர்.

”புதிதாக இணையும் ஒவ்வொரு பள்ளியும் வளர்ச்சியின் ஒரு படியாகிறது. உதாரணத்திற்கு ஒரு பள்ளியில் ஒரு வகுப்பு இணைந்தாலும் கூட 70-80 பெற்றோர் சேரும் வாய்ப்பு இருக்கிறது. ஒவ்வொரு மூன்று வாரத்திற்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. 5மில்லியன் பயனாளிகள் என்பது எங்கள் இலக்காகும்” என்று வளர்சிக்கான திட்டத்தை விவரிக்கிறார் பகுல்.

சந்தா அடிப்படையிலான வருவாய் முறையை கொண்டிருப்பதால் ஸ்கூடாக்ஸ் பெற்றோர்களிடம் இருந்து ஒரு மாணவருக்கு ஆண்டு கட்டணமாக ரூ.499 வசூலிக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் ரூ.5 கோடி வருவாயை தொட முடியும் என அவர் நம்புகிறார்.

எதிர்கால திட்டம்

தற்போது 40 பேர் கொண்ட குழுவாக செயல்பட்டு வருகின்றனர். இணைய வடிவமைப்பாளர்கள், தரவுகள் மற்றும் தகவல்களை சரிபார்க்கும் ஆய்வாளர்கள், சமூக ஊடக வல்லுனர்கள் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் இதில் அடங்கும். வரும் மாதங்களில் சிறப்பு பிரிதிநிதிகள் மூலம் இணையத்திற்கு வெளியேவும் தொடர்பு கொண்டு சேவையை பிரபலமாக்க உள்ளனர்.

40 க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துடன், மும்பை, தில்லி மற்றும் குர்கோன் உள்ளிட்ட நகரங்களிலும் வர்த்தக வளர்ச்சியை விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த ஆறு மாதங்களில் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்க கருத்தரங்கு போன்றவற்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். புதிதாக இணையும் ஒவ்வொரு பள்ளியும் 3,500 மாணவர்கள், 7,000 பெற்றோர்கள் மற்றும் 200 ஆசிரியர்கள் சேர்ந்து எங்கள் சேவையை அதிகரிக்கச்செய்கின்றனர். நிதி திரட்டுவதற்காக முதலீட்டாளர்களுடனும் பேசி வருகின்றானர்.

பகுல் சந்திரா (இடம்), பிரசாந்த் குப்தா (வலது)
பகுல் சந்திரா (இடம்), பிரசாந்த் குப்தா (வலது)

கற்ற பாடங்கள்

இந்த முயற்சி, நிறுவனர்களுக்கு சில பாடங்களை கற்றுத்தந்துள்ளது. ஸ்கூடாக்ஸ் சேவையை ஒவ்வொரு பிரிவாக அணுகியிருக்கலாம் என்று நிறுவனர்கள் கருதுகின்றனர். எல்லா பிரிவுகளையும் ஒரே நேரத்தில் உருவாக்கியதால் பயனாளிகள் எந்த ஒரு சேவையையும் முழுவதுமாக பயன்படுத்த வாய்ப்பில்லை என உணர்ந்துள்ளனர். இதன் காரணமாக பயனாளிகளுக்கு விரிவாக எடுத்துச்சொல்லும் நிலை இருக்கிறது. இதன் காரணமாக பிரிவுகளை சீரமைத்து மேலும் சிக்கல் இல்லாத அனுபவத்தை அளிக்க வேண்டிய தேவை உள்ளது.

இந்தியாவில் உள்ள கே-12 பள்ளி அமைப்புத்திட்டமே ( 1.4 மில்லியன் பள்ளிகள், 250 மில்லியன் மாணவர்கள்) உலகிலேயே மிக பெரிய திட்டம் என்று ஈ.ஒய்-எஃப்.ஐ.சி.சி ஐ (EY-FICCI Report) அறிக்கை கூறுகிறது. 20 மாநிலங்களில் உள்ள தனியார் பள்ளிகள், உயர்நிலை அளவில் 55 சதவீத மாணவர்கள் சேர்க்கைக்கு காரணமாக இருக்கின்றன.

இந்த சேவையின் பெரும்பாலான பயனாளிகள் தனியார் பள்ளி பிரிவில் இருப்பதால் வளர்சிக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

இணையதள முகவரி: https://www.scootalks.com/