நாட்டில் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கீடு! 

0

2017 – ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் கட்டமைப்புத் துறைக்கு ரூ.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்தார்.

மதராஸ் மேலாண்மை சங்கம் ஏற்பாடு செய்த கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசிய அவர் இந்தியா சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் கட்டமைப்புத்துறையை மேம்படுத்தவும் விரிவுபடுத்தவும் அரசு ஒதுக்கிய தொகையில் இதுவே மிக அதிகமானது என்று குறிப்பிட்டார்.

நாட்டிலுள்ள அனைவரும் சம வாய்ப்பு, அனைவருக்கும் வீடு மற்றும் அனைத்து தரப்பு மக்களுக்கும் பொருளாதார வளர்ச்சியில் பங்கு என்பதே நடப்பு பட்ஜெட்டின் முக்கிய நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.

ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரத்து செய்த மத்திய அரசின் முடிவு குறித்து விளக்கிய அமைச்சர் நாட்டில் கருப்பு பணத்தை முற்றிலுமாக ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். குறுகிய காலத்தில் மக்கள் அவதிக்கு உள்ளானாலும் நீண்டகால அடிப்படையில் இந்த முடிவு பலன் அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

நாட்டில் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கணக்கில் வராத தொகை 23.5 சதவீதம் என்று மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மூலம் இந்த தொகை இந்தியப் பொருளாதாரத்தில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதாகவும் இதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என்று அவர் கூறினார்.

மக்களின் கருப்பு பணம் தொடர்பாக மக்களிடையே நிலவி வந்த பொதுக் கருத்தின் அடிப்படையிலேயே பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார். குறைந்த ரொக்க பொருளாதாரம் ஆகியவற்றை ஊக்குவிக்க மத்திய அரசு எடுத்த பல்வேறு முன் முயற்சிகளை அமைச்சர் பட்டியலிட்டார்.

கணிணி மூலம் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து ரொக்க கடன் பெறுவதற்கான உச்சவரம்பு 20 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும் இதே போல் வரி விதிப்பிலும் இந்நிறுவனங்களுக்கு 2 சதவீதம் சலுகை வழங்கப்பட்டிருப்பதாகவும், கார்ப்பரேட் வரியும் 5 சதவீதம் குறைக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேக்வால் தெரிவித்தார்.

இந்தியா வல்லரசு நாடாக மாற வேண்டும் என்றால் உலகெங்கும் பின்பற்றப்படும் நிதி மேலாண்மை ஒளிவு மறைவற்ற நிதி மேலாண்மை முறையை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் அமைச்சர் நிதி மற்றும் வங்கிகளின் இந்திய நிறுவனம் மற்றும் சைபர் சொசைட்டி ஆப் இந்தியா ஏற்பாடு செய்த வங்கிகளில் இணைய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றினார்.