குடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா!

2

மனிஷா கிரோத்ரா மும்பையின் இண்டியாபுல்ஸ் டவரின் 15வது மாடியில் உள்ள Moelis அலுவலகத்தின் கான்ஃப்ரன்ஸ் அறையில் மிடுக்காக நுழைந்தார். நான் அவரை முறையாக வரவேற்க ஆயத்தமானேன். 10 விநாடிகளுக்குள் நான் அநாவசியமாக என்னை தயார்படுத்திக்கொண்டேன் என்பதை உணர்ந்தேன்.

எங்களிடையே இருந்த பதட்டத்தைப் போக்கி ஒரு உரையாடலை துவங்கச் செய்ய UBS வங்கியின் நிலை, அவரது துறை சார்ந்த M&A ஒப்பந்தம், கோல்ஃப், ஆலோசகர், பெண்கள் உரிமைக்கான சாம்பியன் போன்ற எதுவும் மையப்பொருளாக இருக்கவில்லை. அது என்னைப் பற்றியதாகவும் என்னுடைய கனவுகள், ஆர்வம் போன்றவை நிரம்பியிருந்ததாகவும் இருப்பதுபோல் நான் உணர்ந்தேன்.

மனிஷா ஒரு தலைவராக, தான் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணையும் தனது தனிப்பட்ட வளர்ச்சிப் பாதையில் உடன் இணைத்துக்கொள்கிறார். 


இந்திய வணிக சுற்றுசூழல் மாறி வருகிறது. இதில் பல சிறு மற்றும் பெரு நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த தலைமுறையைச் சேர்ந்த வெற்றியாளர்கள் எப்படி வருவாய் ஈட்டுவது என்பதை நன்கறிந்தவர்கள் என்றே விவரிக்கப்படுகிறார்கள். எங்களது உரையாடல் மனிஷாவின் தொழில்முறை வலிமையை மையமாகக் கொண்டிருந்தாலும் அவரது சாதனைகளும் போராட்டங்களும் இணைந்தே உரையாடலில் இடம்பெற்றிருந்தது.

நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தார்

46 வயதான மனிஷாவின் அப்பா அவரது வளர்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவளித்தார். அவரது குடும்பத்தில் உள்ள அனைத்து பெண்களுமே பணிக்குச் சென்றனர். எனவே வீட்டில் அவருக்கு ஆதரவான சூழலே நிலவியது. டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் முதுகலை பட்டம் பெற்ற பிறகு க்ரிண்ட்லேஸ் வங்கி பணிக்கு 50 பேரில் ஒருவராக இவரும் தேர்வானார். அவர்களது முதலீட்டு வங்கி பிரிவில் நியமிக்கப்பட்டார்.

”டிஎஸ்ஈ-யில் கோல்ட் மெடலிஸ்டாக உலகின் பொருளாதார சூழலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என நினைத்தேன். ஆனால் நிறுவனங்களுக்கு பொருட்களின் இருப்பு குறித்த அறிக்கையை உருவாக்குவதே என்னுடைய முதல் பணியாக இருந்தது. 2,000 பென்சில்கள், 200 டேபிள்கள், 30 ஃபேன்கள் ஆகியவை உள்ளதா என சரிபார்த்து பதிவுசெய்யவேண்டும்,” என நினைவுகூர்ந்தார். 

அடுத்ததாக க்ரிண்ட்லேஸ் நிறுவனத்தில் பொருட்களின் இருப்பு அறிக்கைகளை தயார் செய்வதுடன் பீட்சா டெலிவர் செய்யும் பணியையும் சேர்த்தே மேற்கொண்டுள்ளார்.

”வணிகத்தின் அத்தனை அம்சங்களிலும் உங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். சுற்றியுள்ளவர்களுக்கு உங்கள் மீது நம்பிக்கை உருவாகும் வரை நீங்கள் கடினமான சூழல்களிலும் தொடர்ந்து நிலைத்திருக்கவேண்டும்,” என்றார்.

தொடர்ந்து நிலைத்திருத்தல்

இதுதான் மேஜிக் வார்த்தை. கல்வியில் பாலின விகிதம் முறையாக இருப்பதாகவும் அவர் படித்த DSE பிரிவில் 40 சதவீதம் பெண்கள் இருந்ததாகவும் மனிஷா தெரிவித்தார். கல்லூரிப் படிப்பு முடித்ததும் ஆசிரியர் பணி, செவிலியர் பணி போன்றவற்றையே பெண்கள் அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். ”பல பெண்கள் திருமணம், கணவருக்கு வெளியூரில் பணிமாற்றம் செய்யப்படுவது போன்ற காரணங்களால் பணி வாழ்க்கையை கைவிடுகின்றனர். நான் விநோதமாக நடந்துகொள்வது போல் என்னைப் பார்ப்பார்கள். என்னை செயலாளர் என்றே பலர் நினைத்துக்கொண்டனர்,” என்று நினைவுகூர்ந்தார்.

மேலும் “மக்கள் உங்களை பொருட்டாக கருதுவதில்லை. நிறுவனங்கள் ஒன்று சேருதல், கையகப்படுத்துதல், நிதி உயர்த்துதல் ஆகியவை குறித்து பெண்களுடன் சிக்கலான உரையாடல்களில் ஈடுபடுவது இரு தரப்பினருக்கும் எப்போதுமே ஒரு அசௌகரியமான அனுபவத்தையே ஏற்படுத்துகிறது,” என்றார்.

டெல்லி மற்றும் லண்டன் இடையே மாறி மாறி பயணம் செய்யும் விதத்தில் அவரது பணிச்சூழல் அமைந்திருந்தது. நல்ல தருணங்கள் மோசமான நாட்கள் இரண்டையுமே கடந்து வந்தார். ”வாடிக்கையாளர்களில் சிலர் கைகுலுக்க மாட்டார்கள். கைகளை கூப்பி வணக்கம் என்பார்கள். எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என்பது போன்ற தர்ம சங்கடமான கேள்விகளை கேட்பார்கள். நான் அந்த இடத்தில் அது குறித்து பேச வரவில்லை என்பது போலவே நடந்துகொள்வேன்,” என்றார்.

சிஇஓ ஆனார்!

மனிஷாவிற்கு திருமணம் நடந்தபோது அவரது வயது 24. தொடர்ந்து நீண்ட நேரம் பணிபுரிவது அவரது கணவர் சஞ்சய் அகர்வாலுக்கு புதிதல்ல. சஞ்சய் அகர்வால் இன்று Deutsche வங்கி, இந்தியாவின் கார்ப்பரேட் நிதி வணிகப் பிரிவின் தலைவராக உள்ளார். மனிஷா சில காலம் மும்பையில் பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். அப்போது அவரது கணவர் டெல்லியில் பணியாற்றி வந்தார். ”கணவனும் மனைவியும் அதிக தூரத்தில் வசிப்பதை யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பதவி உயர்வு கிடைக்கும் என்பதால் சஞ்சய் என்னை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தினார்,” என்றார்.

மும்பையில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றினார். சில ஆண்டுகள் க்ரிண்ட்லேஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். இது மீண்டும் முதலீட்டு வங்கியான UBS வங்கியில் இணைந்திருக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தது. இங்கு 20 ஆண்டு காலம் பணியாற்றினார்.

மனிஷாவிற்கு 33 வயதாகும் போது அவர் சிறப்பாக முன்னேறி UBS-ன் சிஇஓ ஆனார். 

“வகுப்பில் இரண்டாவது இடம் பிடித்தாலும் ஆழமான சுயபரிசோதனைக்கு உட்படுத்தும் சூழலில் வளர்ந்தேன். அத்துடன் என்னிடம் நிலைத்தன்மை இருந்தது. உறவுமுறைகளை உருவாக்கிக்கொண்டு என் பணியை இடைவெளி ஏதுமின்றி தொடர்ந்தேன். இவையே நான் இந்த நிலையை எட்ட காரணமாக அமைந்தது,” என்றார்.

சிக்கல் இரட்டிப்பானது


இந்த முக்கிய நிகழ்வுடன் சேர்ந்து மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயமும் அரங்கேறியது. அவரது மகள் தாரா பிறந்தார். இருப்பினும் மனிஷா தகுந்த முன்னேற்பாடுகளுடன் இந்தச் சூழலை திறம்பட ஏற்றுக்கொண்டார்.

“ஆரம்பத்தில் பணியில் இருந்த சவால்களும் 20 மணி நேர பணிநேரமும் குழந்தை வளர்ப்பை பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் பத்தாண்டுகள் பணிவாழ்க்கைக்காக அதிக நேரம் ஒதுக்கியதும் நிச்சயிக்கப்பட்ட பணி நேரமாக மாறியது,” என்றார்.

இருப்பினும் அவரது ஒட்டுமொத்த 25 ஆண்டு கால பணிவாழ்க்கையில் அதுதான் அதிக சவால் நிறைந்த காலகட்டமாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டார். 

”அந்த நாட்களில் மகப்பேறு விடுப்பு 3 மாதங்களாகவே இருந்தது. நான்கு மாதங்களுக்குப் பிறகு நான் பணிக்கு தயாராகும்போது என் மகளும் தயாராகிவிடுவார். அலுவலகத்திற்கு அருகில் இருந்த ஒரு ஹோட்டலில் குழந்தையை பாதுகாப்பாக விட்டுவிட்டு அலுவலகத்திற்கும் ஹோட்டலுக்கும் மாறி மாறி செல்வேன்,” என்றார்.

அந்த நாட்களில் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் குறித்து யாரும் அறிந்திருக்கவில்லை. அது தேவையற்றதாகவே கருதப்பட்டது. மனிஷா இது குறித்த பேச்சுவார்த்தையை துவங்கினார். அவர் பணிபுரிந்த நிறுவனங்களில் பராமரிப்பு மையங்களை உருவாக்கும் பணியில் தீவிரம் காட்டினார். மெல்ல மெல்ல அவரது பணியிடத்திலுல்ம் வீட்டிலும் ஒரு ஆதரவான அமைப்பு உருவாக்கினார். இதன் மூலம் அவருக்கு உதவி தேவைப்படும்போது அவர்கள் கைகொடுத்தனர். இதுவே அவர் இந்த நிலையை தக்க வைத்துக்கொள்ள முக்கிய காரணம் என்று குறிப்பிட்டார்.

அவரது தீர்மானங்களைக் கண்டு அவருக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. குடும்பத்தில் சிலருக்கு அவருடைய செயலில் விருப்பமில்லை. “நான் பணிபுரிவதை என் மாமியார் ஆதரித்தார். இருப்பினும் ஒரு குழந்தையின் அம்மாவாக நல்ல இல்லத்தரசியாக இருக்கவேண்டும் என்பதே பொதுவான கருத்து என்பதால் அந்தப் பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.

“நான் ஒருமுறை 18-20 பில்லியன் டாலர் வர்த்தகம் குறித்து வெற்றிகரமாக பேசிவிட்டு வீடு திரும்பினேன். என்னுடைய மகள் மறு நாள் பள்ளிக்கு ஏதோ பொம்மை தயார் செய்து எடுத்துச் செல்லவேண்டியிருந்தது. என் அம்மா அந்த பொம்மையை நான் செய்தே தீரவேண்டும் என்றார். அதிகாலை 3 மணி முதல் 7 மணி வரை நேரம் செலவிட்டு செய்து முடித்தேன். இதை ஏன் சஞ்சய் செய்யக்கூடாது என நான் கேள்வியெழுப்பியதற்கு அவர் களைப்பாக இருப்பதாக தெரிவித்தார். நான் களைப்பின்றி உல்லாசப் பயணம் சென்றுவிட்டு திரும்பியது போல் அவர் பேசினார்,” என்றார்.

உங்கள் மகளுக்கு காய்ச்சல் இருக்கும் நேரத்தில் நீங்கள் நியூயார்க் செல்லவேண்டி இருந்தால் அப்போது ஏற்படும் குற்ற உணர்ச்சியானது உங்களை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கும் என்றார். ஆனால் அதை எப்படிச் சரிசெய்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். 

அது உங்கள் மனநிலையைப் பொருத்ததுதான். ஒருவேளை குழந்தை மீது அக்கறை கொண்ட யாரேனும் உடன் இருந்தால் அவர்கள் சரியாகிவிடுவார்கள். உங்கள் மனதை அதற்கேற்றவாறு தயார்படுத்திக்கொள்ளவேண்டும். எப்படி ஒரு அப்பா குடும்பத்திற்காக உழைப்பது அவரை சிறந்த அப்பாவாக உருவாக்குகிறதோ அதேபோல் உங்கள் பணி உங்களை சிறப்பான அம்மாவாக உருவாக்கும் என்பதைத் தொடர்ந்து உங்கள் மனதிற்குள் கூறிக்கொள்ளுங்கள். 

Moelis நிறுவனத்தை அமைத்தல்


20 ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பிறகு மனிஷா UBS பணியைத் துறந்தார். அவரது முன்னாள் முதலாளி Moelis நிறுவனத்தை அமைக்க உதவினார். அந்த சமயத்தில் கடன் பெறுவோருக்கு அதிக வட்டி விதிக்கப்பட்டு பல மிகப்பெரிய வங்கிகள் குழப்ப நிலையில் இருந்தது. எனவே இந்த வாய்ப்பினை அவர் பயன்படுத்திக்கொண்டார். UBS பிரபலமான நிறுவனம். ஆனால் Moelis நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகள் புதிதாக துவங்கப்பட்டது. எனவே சற்று தயக்கம் ஏற்பட்டது. “ஆனால் நான் என்னை புதுப்புத்துக்கொள்ள விரும்பியதால் இந்த வாய்ப்பினை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தேன்,” என்றார்.

அவர் உற்சாகமாக இருந்தபோதும் முடிவெடுப்பது கடினமாக இருந்தது. UBS நிறுவனத்துடனான 20 ஆண்டு காலத்தில் அவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. ஆனால் மனிஷாவிற்கு கண் இமைக்கவும் நேரம் இல்லாமல் போனது. குறிப்பாக பெண்களுக்கு ஒரு பணியில் இருந்து மற்றொரு பணிக்கு மாற்றலாவது கடினமாகவே இருக்கும் என்றார். 

“ஒரு பெண் ஊழியர் தங்களை பணியிலமர்த்துவோரிடம் அதிக விசுவாசமாக இருப்பார்கள். அவர்கள் பணியையும் நிறுவனத்தையும் அவர்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக கருதுவதே இதற்குக் காரணம்,” என்றார்.

மனிஷா ஆரம்பத்தில் இருந்தே பணியைத் துவங்கினார். 15,000 ஊழியர்கள் அடங்கிய நிறுவனத்தைத் தலைமை தாங்கிய பிறகு ஒரு செயலாளர், ஒரு கம்ப்யூட்டர் ஆகியவற்றை மட்டுமே கொண்டு பணியைத் துவங்கினார். ”நாங்கள் Moelis நிறுவனத்தை அமைத்தபோது பொருளாதார ரீதியாக மோசமான சூழலே நிலவியது. சந்தை மந்தநிலையில் இருந்தது. இதனால் நாங்கள் கால் பதிக்க போதுமான நேரம் கிடைத்ததால் இந்தச் சூழலும் எங்களது சாதகாமவே அமைந்தது,” என்றார்.

வெற்றிப்பாதைக்கு மற்றவர்களையும் வழிநடத்தினார்

Moelis நிறுவனத்தில் நிதிச் சேவைப் பிரிவில் பணியாற்றியத் துவங்கிய காலகட்டத்தில் பெண்கள் பணிக்கு செல்வதைப் பார்ப்பது அரிதான விஷயமாக இல்லை. “தகவல் தொழில்நுட்பம், பத்திரிக்கை, வங்கி, சில்லறை வர்த்தகம் என பல பிரிவுகள் பெண் ஊழியர்களுக்கு ஆதரவான கொள்கைகளையே கொண்டிருந்தது வரவேற்கத்தக்கதாக இருந்தது. ஏனெனில் பெண்களுக்கு EQ மற்றும் IQ அதிகமாகவே இருக்கும். ஆனால் பெண்கள் உயர் பதவியில் இருப்பது பரவலாக காணப்படுவதில்லை. உங்கள் வீட்டில் இன்னமும் பாரபட்சம் இருப்பதை உணரமுடியும். குடும்பத்தின் பொறுப்புகளை ஒரு ஆண் சுமப்பது போலவே நீங்களும் சுமக்கிறீர்கள் என்பதற்கான அங்கீகாரம் கிடைக்க போராடவேண்டியிருக்கும்,” என்று மனிஷா குறிப்பிட்டார்.

வேகமாக மாறி வரும் பொருளாதாரமானது சேவை சார்ந்த பொருளாதாரமாக மாறி வருகிறது. இதனால் இதில் பெண்கள் சிறப்பாக செயல்படமுடியும். ஏனெனில் அவர்கள் இயற்கையாகவே அடுத்தவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளக்கூடிய திறன் கொண்டவர்கள். எனவே ஒரு பெண்ணைக் கையாள்வது இனிமையான அனுபவமாகவே இருக்கும். 

”பெண்கள் ஆண்களைப் போன்ற குணாதிசயங்களைக் கொண்டவர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நிறுவனங்கள் உணர்ந்துள்ளது என நம்புகிறேன். பெண்கள் அவர்களது இயற்கையான குணாதிசயங்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிதக்கவேண்டும். அந்த குணங்களைக் கொண்டே தலைவர்களாக உருவாகவேண்டும். அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டு மதிக்கப்படவேண்டும்,” என்று அவர் விவரித்தார்.

அத்துடன் பெண்கள் தலைமைப் பொறுப்பு வகிப்பதால் மற்றவர்களுக்கு உந்துதலளிக்கப்படும் என்கிறார். வீட்டிலிருந்து பணிபுரிவது, மகப்பேறு விடுப்பு, ஆண்களுக்கான மகப்பேறு விடுப்பு என பல பிரச்சனைகள் குறித்து ஆணகளைக் காட்டிலும் பெண்கள் தெளிவாக பேசுவார்கள். “பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்காக செல்லவேண்டும் என்பதை தெரிவிக்க ஆண்கள் தயக்கம் காட்டுவார்கள். ஆனால் பெண்கள் தயங்கமாட்டார்கள். பெண் முதலாளிகள் இதை தாழ்வான செயலாக கருதமாட்டார்கள். என் மகளுக்கு 102 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டால் என் கணவரைக் காட்டிலும் நான்தான் முதலில் உடைந்து போவேன். அந்த சமயத்தில் என் முதலாளி என் உணர்வுகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என எதிர்பார்ப்பேன். இல்லையெனில் மனமுடைந்து போவேன். எனவே பெண்களால் ஒரு முழுமையான சிறப்பான சூழலை உருவாக்கமுடியும்,” என்று குறிப்பிட்டார்.


பெண்களுக்கு உத்வேகமளிக்கப்பட்டால் அவர்கள் பல நூறாண்டுகளாக இருந்த பின்னடைவுகளை அழித்து வெற்றி வாய்ப்புகளில் சமத்துவத்தை மலரச்செய்வார்கள் என மனிஷா நம்புகிறார். 

“பெண்களுக்கு பதவு உயர்வு வழங்கப்படவேண்டும். இது குடும்பத்தின் பார்வையில் உங்களது மதிப்பை உயரச் செய்யும். என் மகளிடம் சாதிக்கவேண்டும் என்கிற லட்சியத்தை வரவழைக்கும். அதிகாரத்துவ மனநிலையை தகர்த்தெறிந்து பெண்கள் உயர்வு பெறுவதற்கான உதவி கிடைக்கப்படவேண்டும். இதற்கு அனைவரும் பொறுப்பேற்கவேண்டும். பெண் ஊழியர்களின் நிலை சிறப்பாக உணரப்படும் சூழல் அமைந்து அவர்களுக்கு உந்துதலளிக்கப்பட்டால் அவர்கள் விசுவாசமான ஊழியர்களாக இருப்பார்கள். இது ஒரு பொது நலன் கருதிய செயல் அல்ல இது ஒரு சிறந்த பொருளாதார அணுகுமுறையாகும்,” என்று கருத்து தெரிவித்தார்.

மனிஷா குறித்து அதிகம் அறியப்படாத தகவல்கள்

Moelis அதன் ஐந்தாம் ஆண்டில் உள்ளது. இந்தியாவில் M & A நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. உள்ளுர் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் வரத்துவங்கியுள்ளனர். இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாட்டு நிறுவனங்களை வாங்க விரும்புகின்றனர். Hutchison Essar நிறுவனத்தை வோடஃபோன் கைப்பற்றுவது, யுனைடெட் ஸ்பிரிட் நிறுவனம் Whyte & Mackey நிறுவனத்தை வாங்குவது, Novelis நிறுவனத்தை கைப்பற்ற Hindalco-வின் ஒப்பந்தம் அல்லது பொதுத்துறையைச் சேர்ந்த பெட்ரோகெமிக்கல் நிறுவனமான இந்தியன் பெட்ரோகெமிக்கல்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் முதலீடுகள் திரும்பப்பெறப்பட்டு அதன் பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உடன் இணைந்தது போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு நடுவே மனிஷா இயங்கி வருகிறார்.

அசோக் லேலண்ட், மைண்ட் ட்ரீ பிரைவேட் லிமிடெட், பாரீஸ் சார்ந்த கட்டுமான நிறுவனமான Technip போன்ற நிறுவனங்களின் ஆலோசகர் குழுவில் மனிஷா இடம்பெற்றுள்ளார். இவற்றுள் அவர் பங்களிக்கும் உற்பத்தி நிறுவனமானது ஆண்களைத் திரளாகக் கொண்ட நிறுவனமாகும். அங்குள்ள பெண்களுக்கு இவர் வழங்கும் ஆலோசனைகளும் வழிகாட்டலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். “இளம் பெண்களான நீங்கள் அமைப்பிலிருந்து வேறுபடுத்தப்பட்டவர்களாக உணரக்கூடாது. கடினமாக இருப்பதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். வேறு வழியில்லை என்பதையும் வருவதை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து முன்னேறவேண்டும் என்பதையும் உங்கள் மனதில் பதியவைத்துக் கொள்ளுங்கள். இதுவரை இல்லாத ஒரு புதிய பாதையை உங்களுக்கென வகுத்துக்கொள்ளுங்கள்,” என்றார்.

மனிஷா கோல்ஃப் விளையாட்டில் ஆர்வமுள்ளவர். அவரது கணவரும் மகளும் டென்னிஸ் பிரியர்கள். அவரது மகள் மனிஷாவிற்கு மற்றொரு முதலாளி போன்றவராகவும் ஆலோசகராவும் உள்ளார். கடந்த முறை விடுமுறையின்போது அவர் மிகவும் அதிகார தொணியுடன் Moelis நிறுவனத்திற்காக தயாரிக்கும் P&L குறித்து கேட்டறிந்தார். “அவர் அனைத்தையும் கேட்டறிவார். நான் பணிவாழ்க்கையில் வெற்றிகரமாக செயல்படுவதைக் கண்டு பெருமை கொள்வார். பணிவாழ்க்கையையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் நான் முறையாக சமன்படுத்த பெரிதும் உதவியுள்ளார். நான் பணியில் ஈடுபடாமல் வீட்டில் இருந்திருந்தால் அவர் தான் பெரிதும் மனம் வருந்தியிருப்பார்,” என்றார் மனிஷா.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜால் ஷா | தமிழில் : ஸ்ரீவித்யா