பீகார் தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு உணர்த்தும் முக்கிய செய்தி!

0

பீகார் தேர்தல் முடிவுகள் பற்றி நாடு கொஞ்சம் பதற்றமாக தான் இருக்கிறது. இந்தியா ஒரு தீவிரமான நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதாக ஒரு கருத்து மீது காரசாரமான விவாதம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தல் நடந்திருக்கிறது. பரந்த இந்திய தேசத்தின் கருத்து சுதந்திரம் மிக்க, நவீனமான, மதச்சார்பற்ற, பன்முகம் கொண்ட தன்மை ஆபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்தியா கருத்து சுதந்திரம் மிக்க சமூகமாக தொடருமா அல்லது மரபார்ந்த, பாரம்பரியத்தன்மை மிக்க, கருத்துக்களுக்கு தடை போடும் சக்திகளின் கைகளில் சிக்கி கொள்ளுமா? எனும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த தாக்குதல் மோசமாக இருக்கிறது. கவலைகள் நிஜமானவை. இந்தியாவில் முதல் முறையாக, மக்கள் தங்கள் உணவு பழக்கத்திற்காக அல்லது ஒருவரது கருத்துக்கள் இன்னொருவருக்கு பிடித்தமானதாக இல்லை என்பதறாக கொல்லப்படுகின்றனர்.

ஜனநாயக நாடாக நாம் பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். ஆனால் இந்தியா அதன் அமைப்பு மற்றும் இயல்புபடி மதச்சார்ப்பற்றது மற்றும் வேறுபாடுகளை கொண்ட தன்மையுடன் தழைப்பது என நம்பி வந்திருக்கிறோம். பன்முகத்தன்மை தான் இந்தியாவின் முக்கிய அம்சமாக இருந்திருக்கிறது. இந்திய அரசு ஒருபோதும் மதவாத நோக்கத்தை ஆதரித்ததில்லை. இந்தியா எனும் அடிப்படையான கருத்துக்களை ஏற்க மறுத்த சக்திகளுடன் அது ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. ஆனால் கடந்த சில மாதங்களில் அரசு, ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் நிலை அல்லது இந்தியாவை பழங்காலத்திற்கு கொண்டு செல்ல முற்படும் சகதிகளுடன் கைகோர்த்திருப்பது போல தோன்றுகிறது. இந்தியா எப்போதுமே அதன் சகிப்புத்தன்மைக்காக போற்றப்பட்டு வருகிறது. மிகந்த வேறுபாடுகளை கொண்ட ஒரு நாட்டில் வெற்றிகரமாக ஜனநாயகத்தை செயல்படுத்தி வருவதாக பாராட்டப்படுகிறது. ஆனால் சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிமக்களாக்கும் அபாயம் நிதர்சனமாகும் நிலை உண்டாகத் துவங்கினால் இது போன்ற முயற்சிக்கு மக்களின் ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என அறிவது இன்னமும் முக்கியமானதாகிறது.

பீகார் தேர்தல் இதற்கு உறுதியான பதிலை தந்திருக்கிறது. அதன் பதில் தெளிவாக இருக்கிறது. மதச்சார்பற்றத்தன்மையை அதன் அடிப்படையில் இருந்து அகற்றுவதை அது ஆதரிக்கவில்லை. இந்தியா நவீனமான கருத்துச்சுதந்திரம் மிக்க சமூகம், அது அவ்விதமே தொடர வேண்டும். 21 ம் நூற்றாண்டில் தடை போடும் தன்மைக்கு இடமில்லை. இந்த பின்னணியில் நிதீஷ்-லாலு கூட்டணி வென்றிருக்கிறது. இது மகத்தான வெற்றி. ஆனால் இதன் சமூக அடித்தளம், அமைப்பு மற்றும் இயல்பு மனிதகுலத்திற்கான நாகரீக பரிசான இந்தியாவின் கருத்துச்சுதந்திரம் மிக்க தன்மைக்கு ஆதரவாக இருக்கிறது. இந்த சக்திகளுக்கு தான் இந்திய அரசியல் சாசனப்படி புதிய வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்த பிரிவினர் சமமாக நடத்தப்படவில்லை, ஆனால் ஒரு பட்டனை அழுத்தியதன் மூலம் அவர்கள் நாட்டின் செல்வாக்கு மிக்க பிரிவினருடன் சமூகரீதியாக சமமாகி வந்துள்ளனர். தலித்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் எண்ணிக்கை அளவில் பெரிதாக இருக்கலாம், ஆனால் அவர்கள் ஒருபோதும் அடக்குமுறை சக்திகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. சமூகத்தின் இயங்கு சக்தியாக மாறி தங்களுக்கான சொந்த பிரதான நடைமுறையை உருவாக்கி கொள்ள முற்படும் சமூகரீதியாக சமமில்லாதவர்களின் வெற்றியாக பீகார் தேர்தல் அமைந்துள்ளது.

லாலுவை பார்த்து ஒருவர் அவரை கேலி செய்யலாம். அவர் ஒரு கேலியான பாத்திரம் தான். ஆனால் இந்த தன்மைக்கு பின்னே குரல் இல்லாதவர்களின் குரலாக இருக்கும் புரட்சிகரத்தன்மை இருக்கிறது. மண்டல் கமிஷன் அறிக்கைக்குப்பிறகு அவர், பல நூற்றாண்டுகளாக விளிம்பு நிலையில் இருந்த, புறக்கணிக்கப்பட்ட மக்களை அவர் எழுச்சி பெற வைத்தார். மேல் சாதியை சேர்ந்தவர்களாகிய நாம் நம்முடைய கருத்துசார்பு காரணமாக இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் அவரை கேலி செய்தோம். புறக்கணிக்கப்பட்டவர்கள் சமூகத்தின் உள்ளே வராமல் இந்திய ஜனநாயகம் முழுமை பெறாது. இதில் லாலு முக்கிய பங்கு வகித்தார். ஆனால் பிரச்சனை என்ன என்றால் இந்த பிரிவினரை பொருளாதார நோக்கில் சக்திமிக்கவர்களாக ஆக்குவதில் அவருக்கு தொலைநோக்கு இல்லாமல் போய்விட்டது. அவர் நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதில்லை. புரட்சிகரமான சக்திகளை கட்டவிழித்து விடுவதில் மகிழ்ச்சி அடைந்தார் என்றாலும் அவர்களை சமூக நோக்கில் முக்கியமானவர்களாகவும், துடிப்பானவர்களாகவும் ஆக்கும் தொலைநோக்கி இல்லாமல் இருந்தார். இப்போது இந்த பணியை நிறைவேற்ற வரலாறு நிதீஷ் குமாரை தேர்வு செய்திருக்கிறது.

நிதீஷ் புதிய மாதிரியை கொண்டு வந்துள்ளார். புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் எண்ணிக்கையைத் தவிர நிதி ஆற்றலும் தேவை என அவர் உணர்ந்து கொண்டார். இந்த பிரிவினர் நேரடியாக பயன்பெற்ற திட்டங்களை அவர் கொண்டுவந்தார். 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நிலையிலும் அவருக்கு எதிராகவோ அல்லது அரசுக்கு எதிராகவோ எந்தவித எதிர்ப்பு தன்மையோ இல்லை என்பது ஆச்சர்யம் தான். அவர் தான் மகா கூட்டணியின் முகம். லாலுவுடன் இணைந்திருந்தது மற்றும் அவரது கூட்டாட்சி பின்னணியை மீறி பீகார் மக்கள் நிதீஷின் ஆற்றலை நம்பி அவருக்கு ஆதரவு அளித்தனர். மாறாக பாஜாகவுக்கு இது போன்ற முகம் இல்லை.அவர்களைப்பொறுத்தவரை வளர்ச்சி திட்டங்களுக்கு பதிலாக மதவாத முழக்கங்களே இருந்தன. மோடி வழிநடத்தினாலும், பிரதமராக அவரது செயல்பாடு நிதீஷை விட சிறந்த ஆட்சியை அவரது கட்சியால் அளிக்க முடியும் எனும் நம்பிக்கையை அளிக்கவில்லை.

பீகார் மக்கள் ஏழையாக, அதிகம் படிக்காதவர்களாக இருகலாம். ஆனால் இந்த மண் எப்போதுமே புரட்சிகரமானதாக இருந்து வழிநடத்தியிருக்கிறது. 1970 களில் இந்திரா காந்தியின் அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலை வகித்தது. இங்கு தான் அத்வானியின் ரத யாத்திரை தடுத்து நிறுத்தப்பட்டது. இங்கு தான் கடந்த 30 ஆண்டுகளாக பெரிய அளவில் மதக்கலவரங்கள் நடைபெற்றதில்லை. இந்தியா வல்லரசாக வேண்டும் என்றால், இந்தியாவின் வேறுபாடுகளை கொண்ட தன்மையை, மதச்சார்பற்றத்தன்மையை அது மதிக்க வேண்டும், புறக்கணிக்கப்பட்ட மற்றும் ஏழை மக்களை தன்னுடன் அணைத்துச்செல்ல வேண்டும் எனும் செய்தியை இப்போது மீண்டும் ஒருமுறை வலுவாக சொல்லியிருக்கிறது. மக்கள் அச்சத்தில் வாழும் நிலையில், எண்ணங்கள் சுதந்திரமாக இல்லாத நிலையில் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் இல்லை. இது தான் பீகார் தேர்தலின் மைய செய்தி. தற்போது தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் தேசத்தை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்கள் மக்களின் தீர்ப்புக்கு ஏற்ப தங்கள் செயல்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.