பள்ளிப் புத்தகத்தை தாண்டி இதர பண்புகளை வளர்க்க உதவும் சென்னை அமைப்பு!

2

கல்வி என்பது அனைவரின் வாழ்க்கையிலும் முக்கியமான ஒன்றுதான் ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் அது புத்தகத்தில் இருக்கும் பாடங்களுடன் முடிந்து விடுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது புத்தகத்தில் இருப்பதை படித்து தேர்வில் தேர்ச்சி பெறுவதோடு நின்றுவிடாமல் எதிர்காலத்தில் சமூகத்தை சந்திக்கும் திறனை வளர்ப்பதற்கும் தான். அந்த வகையில் இங்கு இரண்டு நண்பர்கள் இணைந்து படிப்பைத் தாண்டி பள்ளிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த முயன்று  வருகின்றனர்.

நிறுவனர்கள் ரெஜிலா மற்றும் ராம் பிரகாஷ் 
நிறுவனர்கள் ரெஜிலா மற்றும் ராம் பிரகாஷ் 

ரெஜிலா மற்றும் ராம் பிரகாஷ் ஆகிய இருவரும் ’வித்யா விதை’ என்னும் அமைப்பை துவங்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அப்பளிகளின் மாணவர்களின் முன்னேற்றதிற்காக ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருடனும் இணைந்து பணிபுரிகின்றனர்.

“நாங்கள் இணையும் பள்ளிகளில் எங்களுடைய கருத்துக்களை திணிக்காமல் பள்ளிகளின் நெறிமுறைக்கு ஏற்றவாறு ஆசரியர்கள் மற்றும் மாணவர்களின் திறனை மேம்படுத்துகிறோம். ஒரு பள்ளியுடன் குறைந்தது இரண்டு வருடம் சேர்ந்து உழைக்கிறோம்,” என்கிறார் நிறுவனர் ரெஜிலா.

ரெஜிலா மற்றும் ராம் பிரகாஷ் இருவரும் கல்வித் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள். தங்கள் கல்லூரி காலத்திலே தற்போது பின் தங்கி இருக்கும் பள்ளிகளுடன் இணைந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர். படிப்பு முடிந்தவுடன் கடந்த மே மாதம் இந்த அமைப்பை துவங்கிவிட்டனர்.

தற்பொழுது சென்னை மற்றும் ஈரோட்டில் ஒவ்வொரு பள்ளிகளுடன் இணைந்துள்ளனர். ராம் பிரகாஷ் ஒரு பள்ளியை ஈரோட்டிலும், ரெஜிலா சென்னை பள்ளியையும் பார்த்துக்கொள்கிறார்.

“இப்பொழுது நாங்கள் இணைந்துள்ள பள்ளியில் மாணவர்களின் பங்களிப்பு எதிலும் இருப்பதில்லை. இதனால் மாணவர்கள் பாராளுமன்றம் ஒன்றை துவங்கி அதில் ஆசரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்தது தங்கள் பிரச்சனைகளை, தேவைகளை தீர்த்து கொள்கின்றனர்...”

இதன் மூலம் மாணவர்களுக்கு தலைமைத்துவம் வளர்கிறது, மேலும் சுயமாக தீர்வு காணும் திறன் வருகிறது என்கிறார் ரெஜிலா. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து செயல்படும் வாய்ப்பும் இதன் மூலம் அமைகிறது. 

மாதம் குறைந்தது 20 முறையாவது இவர்கள் பள்ளிக்கு சென்று தங்கள் அமர்வுகளை நடத்துகின்றனர்.

 "ஆண் பெண் என வேறுபாடுடன் நடத்தப்பட்டது அதை மாற்ற பள்ளி நிர்வாகத்துடனும் ஆசிரியர்களுடனம் ஓர் அமர்வை நடத்தினோம்.”

பள்ளி சீருடையிலும் வேறுபாடு இருந்தது, மாணவிகளின் சீருடை அவர்களுக்கு வசதியாக இல்லாததால் விளையாட்டு மற்றும் இதர போட்டிகளில் கலந்துக்கொள்ள மாணவிகள் தயங்கினர். இதையெல்லாம் மாற்ற வேண்டிய தேவை இருந்தது.

மேலும் அங்கு கற்பிக்கும் முறையை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இருந்தது, அதனால் எவ்வாறு எளிமையாக மற்றும் மாணவர்களுக்கு பிடித்தவாறு பாடத்தை எடுக்க முடியும் என செய்து காட்டியுள்ளனர். பல மாணவர்களுக்கு சில பாடங்கள் மீது பயம் இருந்தது முக்கியமாக தமிழ். அங்கு அவர்களது திறனை வளர்க்க பல அமர்வுகளை நடத்தியதாக தெரிவிக்கிறார் ரெஜிலா.

இவர்கள் இதற்காக பள்ளிகளால் முடிந்த கட்டணத்தையே வசூலிக்கின்றனர். நன்கொடை மூலமாகவும் இந்த அமைப்பை நடத்தி வருகின்றனர். கூடிய விரைவில் தங்கள் குழுவில் சில ஊழியர்களை அமர்த்த உள்ளனர். அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து இன்னும் சில பள்ளிகளுடன் இணையும் முயற்சிகளை எடுத்து வருகிறது வித்யா விதை. தமிழகத்தில் இந்த அமைப்பே பள்ளி நெறிமுரையக்கான முதல் பிரத்தியேக அமைப்பாகும்.

“ஆசிரியர்கள் இடையே நட்புறவை ஏற்படுத்தவும், அனைத்து ஆசிரியர்களுடன் இணைந்து தங்கள் வகுப்புக்கு ஏற்ற பிரத்தியேக கற்றல் முறையை உருவாக்கவும் ஓர் அமர்வை நடத்தினோம்,” என்கிறார்.

இது போன்ற பல சிறிய முயற்சிகளும் அமர்வுகளும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பல மடங்கு மாற்றுகிறது என நம்புகின்றனர். இது கற்றல் முறையை எளிதாக்கி மாணவர்களை படிப்பிலும் இதர கல்வி செயல்களிலும் அதிக கவனம் செலுத்த செய்கிறது. மேலும் படிப்பைத் தாண்டி தன்னம்பிக்கை, தைரியம், திறன், தீர்வுகாணும் திறன் என அனைத்தும் மேம்படுகிறது. பள்ளிக்கு பின் சிறந்த முடிவுகளை எடுக்கவும் நேர்த்தியாக வழிநடக்கவும் இது உதவும்.