BREXIT: உலகுக்கு உணர்த்தும் பாடங்களில் சாமானியர்கள் அறிய வேண்டியவை! 

0

உலகை திரும்பிப் பார்க்கவைத்த நிகழ்வு ஒன்று அண்மையில் நிகழ்ந்துள்ளது. பிரிட்டன் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளிவரவேண்டும் என பொது வாக்கெடுப்பில் முடிவெடுக்கப்பட்டது. மயிரிழையில் கிடைத்த இந்த வெற்றியின் படி, பிரிட்டன் இனி பழைய பிரிட்டனாக இருக்கப்போவதில்லை. இது நிச்சயமாக உலக பொருளாதாரத்தை பாதிக்கக் கூடியதாக இருக்கப்போகிறது. புதிய ஒரு பின்னடைவு சூழ்நிலையை உருவாக்கப் போகிறது. உலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது, வல்லுனர்கள் ஒரு பெரிய எரிமலையை எதிர்நோக்கி உள்ளனர். வருங்காலம் கடுமையான நிலையில்லா சூழலுடன் இருப்பதை காண முடிகிறது. இது நடந்துள்ள சமயமும் சாதகமாக இல்லை. பொதுவாக நிலையான சீன பொருளாதாரம் முப்பதாண்டுகளுக்குப் பிறகு வீழ்ச்சியை சந்தித்து வருகிறது, பிரேசில் கடுமையான அரசியல் நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் இந்தியா உயரிய வாக்குறுதிகளின் மத்தியில் எந்தவித வளர்ச்சியும் இல்லாத நிலையில் தற்போது உள்ளது. 

இந்த பொது வாக்கெடுப்பின் முடிவுகள், பொருளாதார காரணங்களால் அல்லாமல் அரசியல் காரணங்களின் வெளிப்பாடாக உள்ளது. இந்த முடிவு மூன்று முக்கிய விஷயங்களை தெரிவிக்கிறது: 1. உலக இடம்பெயர்வை நாகரீக சமூகமும் ஏற்றுக்கொள்ளவில்லை, 2. ஏழை மற்றும் பணக்காரர் இடையிலான தெளிவான பிளவு; அதாவது லண்டன் ஐரோப்பிய யூனியனுடன் தொடரவேண்டும் என்றும், பொருளாதாரத்தில் பின்னடைந்த சிறிய ஊர்கள் வெளிவரவேண்டும் என்றும் வாக்களித்துள்ளனர், 3. தேசியவாத அரசியல் கொள்கை, உலகமயமாக்கலுக்கான வழிகளைவிட சக்தி வாய்ந்தது.  

வேகமாக வளர்ந்து வரும் இந்திய பொருளாதாரம் இதனால் நிச்சயமாக பாதிக்கப்படும். முக்கியமாக ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம் ராஜன் பதவி காலம் முடிந்துள்ள இந்த நேரத்தில் வந்துள்ள இந்த செய்தி நல்லதாக இல்லை. என்னை பொறுத்தவரை BREXIT பற்றி இந்தியா தீவிரமாக புரிந்து கொள்ள வேண்டும். இந்த முடிவு இந்திய பொருளாதாரச் சூழ்நிலைக்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. பல வல்லுனர்களின் கருத்துக்களை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை. சிக்கலான சமூக அரசியல் பிரச்சனைகளின் வெளிப்பாடு இது. இந்த வெளிப்பாடு உலகத்தை ஒரு கடுமையான சூழ்நிலைக்குத் தள்ளப்போவதற்கான அறிகுறியும் ஆகும். 

BREXIT மட்டும் உள்ளார்ந்த பிரச்சனைகளின் வெளிப்பாடு அல்ல, அமெரிக்காவின் ரிப்பப்ளிகன் பார்ட்டியின் தீவிர எதிர்ப்புகளை மீறி வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்பின் வளர்ச்சியும் இந்த பிரச்சனையில் ஒரு அங்கம். பிரான்சில் தீவிர வலதுசாரியான மரெயின் லெ பென், அதிர்ஷ்டம் இருந்தால் அடுத்த குடியரசுத்தலைவராக வெற்றிபெற வாய்ப்பு பிரகாசிக்கிறது. இந்தியாவை ஆளும் அரசும் தீவிர வலதுசாரிகளான ஆர் எஸ் எஸ்  இன் பின்புலம் கொண்டு இந்து நாட்டை உருவாக்கப் பார்க்கிறது. உலகமே வெறிகொண்ட ஐஎஸ்ஐஎஸ் மற்றும் மத்திய கிழக்கு ஆதரவாளர்களைக் கண்டு பயத்தில் உள்ளது. எந்த நாடும் எந்த குடிமகனும் பாதுகாப்பாக இல்லை. ஆனால் எல்லாருக்கும் ஒன்று பொதுவாக உள்ளது. 'பன்மைத்துவத்துவத்தை பலரும் வெறுக்கின்றனர்', சமத்துவம், சுதந்திரம் மற்றும் சகோதரத்துவம், இந்த மூன்றின் விளக்கமாக திகழ்கிறது இருபதாம் நூற்றாண்டு. 

குடிபெயர்வு மனித இனத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது. மலிவான கூலி ஆட்களைக் கொண்டு வந்துள்ள குடிபெயர்வு புதிய சிந்தனைகளை உலகின் பிற இடங்களில் இருந்து பெறவும் உதவியுள்ளது. புதிய எண்ணங்கள் புத்துணர்வை தந்ததோடு சமூகத்தில் பல புதிய சாதனைகளை நிகழ்த்த வழி செய்துள்ளது. இதனால் போட்டி மற்றும் சவால்கள் உருவாகி சமூக மேம்பாடு நடந்துள்ளது. குடிபெயர்வு இருவகைப்படும். ஒன்று- உள் குடிபெயர்வு, அதாவது நிலப்பகுதிக்குட்பட்டது, மற்றொன்று வெளி குடிபெயர்வு. தங்களது பாதுகாப்பு இடங்களில் இருந்து புதிய மற்றும் பசுமையான தடத்தை தேடி இந்தியர்கள் குடிபெயர்ந்தனர். உத்தர பிரதேசம், பிஹார் மாநிலத்தோரை லக்னோ, பாட்னா, ஏன் கேரளா, பெங்களூரில் கூட நீங்கள் பார்க்க நேரலாம். மும்பை மற்றும் டில்லியை ஆக்கிரமித்துள்ளனர் அவர்கள். அதேப்போல் கேரளா, மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தோர் பலரும் டில்லி, கான் மார்க்கெட், மற்றும் மும்பையில் வட பாவ் சாப்பிடுவதை காணமுடியும். 

சத்ய நாடெல்லா மற்றும் சுந்தர் பிச்சை போன்றோர் இன்று உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் உள்ளனர். இந்திரா நூயி பெப்சியை தலைமைவகித்தும், சில தினங்கள் முன்புவரை ஜப்பான் நிறுவனத்தில் நிகேஷ் அரோரா அதிக சம்பளம் வாங்கிய மூன்று பேர்களில் ஒருவராக இருந்துள்ளார். இவையெல்லாம் குடிபெயர்வால் சாத்தியமானவை. கிழக்கும்  மேற்கும் இதனால் லாபமடைந்துள்ளது. கடந்த நூற்றாண்டை அமெரிக்கா ஆண்டது. அமெரிக்கா குடிபெயர்வால் உருவான ஒரு நாடு. ஆனால் BREXIT ஒரு புதிய கதையை உருவாக்கி வருகிறது. குடிபெயர்வு தவறு என்றும் இனி அதை வரவேற்கப்போவதில்லை எனும் செய்தியை சொல்லுகிறது. ஐரோப்பிய யூனியனில் குடிபெயர்வு குறித்து இருந்த தளர்ந்த கொள்கைகளே பிரிட்டன் மக்களின் அடிப்படை மனக்குறையாக இருந்து வெளியே வர முக்கியக் காரணியாக இருந்துள்ளது. உலகமே லண்டனுக்கு ஒரு இஸ்லாமிய மேயர் நியமிக்கப்பட்டதை கொண்டாடிக் கொண்டிருந்தபோது அச்சமூகத்தின் சிலர் ஆத்திரத்துடன் இருந்துள்ளனர்.  

இப்போது நடந்துள்ளது, சிவ சேனா மற்றும் எம் என் எஸ் தலைவர் ராஜ் தாக்ரேவின் கொள்கைகளின் சாயலில் உள்ளது. 60, 70 களில் பாலா சாஹிப் தாக்ரே தென்னிந்தியர்கள் மீது நடத்திய தாக்குதல் பின்னர் வட இந்தியர்கள் என்று தொடர்ந்தது. ராஜ் தாக்ரேவின் ஆதரவாளர்கள் வெளிப்படையாகவே வன்முறையில் ஈடுபட்டனர். இந்திய அரசியல் சட்ட அமைப்பின் படி எந்த ஒரு ஆணும் பெண்ணும் இந்தியாவிற்குள் எங்குவேண்டும் என்றாலும் சுதந்திரமாக நடமாடலாம் குடிபெயரலாம் என தெளிவாக உள்ளது. ஆனால் அவ்வப்போது 'நாம், அவர்கள்' என விவாதங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. டில்லியில் உள்ள வட இந்தியர்கள் பலமுறை அங்கு நடக்கும் சட்ட மீறல் செயல்களுக்கு அரசியல்வாதிகளால் கண்டிக்கப்பட்டு வருகின்றனர். வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கும் பிற இந்தியர்களுக்குமான பிளவு அதிகரித்து வருவதும் ஒரு புதிய பின்னடைவு. இதை பிற்போக்கு எண்ணம் என்று நாம் சொல்லிக்கொண்டாலும் இதை பலரும் அவரவர் அளவில் செய்து கொண்டேதான் உள்ளனர். 

உலகமயமாக்கப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் "நாட்டின் மீதான அன்பு, குடிமக்கள் மீதான மரியாதை" இவை இரண்டும் மனித இனத்தின் 'அடையாளம்' எனும் உண்மையை வலியுறுத்துவதாகவே உள்ளது. கூடிவாழ்வது நல்ல செயல் என்றாலும் அதுவே ஒரு சமூகத்தையோ தனிநபருக்கோ அச்சத்தை விளைவிக்கத்தக்கதாக இருத்தல் கூடாது. பன்மைத்துவம் பெரும்பாலான சமூகத்துக்கு சாபக்கேடாக மாறியுள்ளது. பன்முகத்தன்மை இந்தியாவின் மிகப்பெரிய பலம். ஆனால் சில சக்திகள் அதை ஒரு சாபமாக மாற்றவல்லது, குறிப்பாக அரசியல் காரணங்கள் அல்லது உளவியல் காரணங்களுக்காக. எனவே ஒரு நாடாக நாம் இணைந்து BREXIT வெளிப்படுத்தியுள்ள இந்த முக்கிய அம்சத்தை எதிர்த்து போராட வேண்டும். 

கட்டுரையாளர்: அசுடோஷ்

(பொறுப்பு துறப்பு: இது தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ள கட்டுரை. ஆங்கில கட்டுரையாளர் அசுடோஷ், இவரின் கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். கட்சியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)