சாய்னா முதல் சிந்து வரை: பேட்மின்டன் நட்சத்திரங்களை உருவாக்கும் 'கோபிசந்த்'தின் அகாடமி!

1

சாய்னா நெய்வால், ஸ்ரீகாந்த் கிடாம்பி, பருபல்லி கஷ்யப், பி.வி.சிந்து, அருந்ததி பன்டவனே, குருசாய் தத், அருண் விஷ்ணு மேலும் பலர்... இந்த பேட்மின்டன் நட்சத்திரங்களை உருவாக்கிய பெருமை ஹைதராபாத்தில் உள்ள 'கோபிசந்த் பேட்மின்டன் அகாடமி'யைத் தான் சேரும். விளையாட்டிற்கு குறைந்த ஆதரவு உள்ள நம் இந்தியாவில், விளையாட்டிற்கு என தனியாக அகாடமி அமைத்து, கடுமையாக உழைத்து, வீரர்-வீரங்கனைகளுக்கு பயிற்சி அளித்து இன்று உயர்ந்த ஒரு பெயரை பெற்றுள்ளது இந்த அகாடமி. 

முன்னாள் 'அகில இங்கிலாந்து ஓபன் சாம்பியன்' புல்லேலா கோபிசந்தின் வெற்றியை பாராட்டி, ஆந்திர அரசு அவருக்கு 5 ஏக்கர் நிலத்தை பரிசாக வழங்கியது. அந்த இடத்தில் அகாடமி ஒன்றை நிறுவினார். நிதானமான வளர்ச்சியுடன், சுமார் 10 ஆண்டுகள் கடும் முயற்சிகளின் பலனாக, நிதியுதவிகள் பெற்று, இந்த அகாடமி இன்று இந்த நிலைக்கு வளர்ந்துள்ளது. 

கோபிசந்த், அவருடைய தூரத்து சொந்தக்காரரும், தொடர் தொழில்முனைவருமான நிம்மகட்டா பிராசாத் என்பவரை அணுகி, 5 லட்சம் டாலர் நிதியை முதலீடாக பெற்றார். மேலும் அவர் கோபிசந்துக்கு 2 மில்லியன் டாலர் கூடுதல் நிதி முதலீடு பெறவும் உதவி இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டு அளவு பிரபலமில்லாத இந்த பேட்மின்டன் விளையாட்டிற்கு, நிதியுதவிகள் மெதுவாகத் தான் கிடைத்தது. அந்த நேரத்தில் தான், கோபிசந்த் தனது வீட்டை அடமானம் வைத்து, அகாடமிக்கு தேவையான மீதி நிதியை சேர்த்து இந்த அகாடமியை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த அகாடமியில் தற்போது சுமார் 120 மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கின்றனர். கோபிசந்த், தன்னிடன் இருக்கும் பட்ஜெட்டைக் கொண்டு, இந்திய பேட்மின்டன் உலகில் பெரிய சாதனைகளை ஏற்படுத்த போராடி வருகிறார். 

"என்னுடைய சீன கோச்கள் வாங் ஜியோ, சூ யான், இருவரும் மிகவும் கண்டிப்பான பயிற்சியாளர்கள். எனக்கு அவர்கள் ஒழுக்கத்தை பரிசாக அளித்துள்ளனர். அவர்களின் வழிகளை பின்பற்றியே இன்று நானும் இந்த அகாடமியில் எனது மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன்," 

என்று அவுட்லுக் இதழ் பேட்டியில் தெரிவித்துள்ளார் கோபிசந்த்.  

இன்று இந்த அகாடமி சர்வதேச அளவிற்கு உயர்ந்துள்ளது. சாய்னா நெய்வால் (பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 5ஆவது இடத்தில் உள்ளார்), ஸ்ரீகாந்த் கிடாம்பி (ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 3ஆவது இடத்தில் இருந்தவர்) பருபல்லி காஷ்யப் ( ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 6ஆவது இடத்தில் இருப்பவர்) பி.வி.சிந்து (பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 9ஆவது இடத்தில் உள்ளார்), மற்றும் ப்ரனாய் குமார் (ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் 14ஆவது இடத்தில் இருப்பவர்) ஆகியோர் இந்த அகாடமியில் இருந்து பயிற்சி பெற்று இன்று கோபிசந்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

கோபிசந்த் பேட்மின்டன் அகாடமி இன்று இந்தளவு உயர்ந்து உலக தரம் மிக்க பேட்மின்டன் வீரர்களை அளித்திருந்தாலும் அது தொடங்கப்பட்டபோது நிதி பற்றாக்குறையால் போராடியதை மறுக்கமுடியாது. அதற்கு, விளையாட்டின் மீது நாம் வைத்துள்ள அவநம்பிக்கையே ஒரு காரணம் என மக்களாகிய நாமும் சிந்திக்க வேண்டும். ரியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் மிக சுமாரான செயலாக்கம், நம் விளையாட்டு வீரர்களுக்கு சரிவர அளிக்கப்படாத பயிற்சி, அதற்குத் தேவையான கட்டமைப்பு வசதியின்மை மற்றும் குறைந்த ஆதரவே காரணம் என்பதை நாம் உணரவேண்டும்.   

ஆங்கில கட்டுரை: Think Change India