மாற்றுத் திறனாளி என்பது சோதனை அல்ல என சாதித்த ராகவி சங்கர்!

1

“வாழ்கையின் முடிவில் நாம் படித்த படிப்பு, சம்பாதித்த பணம் ஆகியவற்றை வைத்து நம்மை தீர்மானிக்க மாட்டார்கள் ஆனால் மற்றவர்களுக்கு செய்த உதவியை வைத்தே தீர்மானிப்பார்கள்,” என்ற அன்னை தெரேசாவின் கூற்றை முன்னிலைப் படுத்தி பேசுகிறார் ராகவி ஷங்கர்.

ஐந்து மாத குழந்தையில் போலியோவால் பாதிக்கப்பட்டார் ராகவி, மாற்றுத் திறனாளியான இவரின் வாழ்க்கை ஒரு சாகசப் பயணம். இருப்பினும் பெண் சாதனையாளர் ஆக தன் வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து சவால்களையும் சந்தித்து இன்று ஒரு சிறந்த தாயாக, மகளாக, ஆர்வலராக தனக்கு என்று ஒரு வெற்றிப் பயணத்தை உருவாக்கியுள்ளார்.

“மாற்றுத்திறனாளியாக நான் அனுபவித்தப் போராட்டங்களே ஒரு சக்திவாய்ந்த கதையாக அமையும். அனைவரின் வாழ்க்கையும் ஒரு சாகச பயணம்தான்,” என எளிமையாக பேசுகிறார் ராகவி.

The Headway Foundation என்னும் அரசு சாரா அமைப்பின் நிறுவுனர் ராகவி சங்கர். மாற்றுத்  திறனாளியான இவர் ஊனமுற்ற பலருக்கு உதவும் நோக்கில் இதைத் துவங்கியுள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு சமமான உரிமை, அவர்கள் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த அமைப்பை துவங்கியுள்ளார் இவர்.

“அரசு சாரா அமைப்பை தொடங்க வேண்டும் என்ற எண்ணம் 2030-ல் நடக்கும் என்று நினைத்தேன் ஆனால் மாற்றுத் திறனாளிகளுக்கான மனிதவள மேம்பாடு (HR) ஊழியராக பணிபுரிந்த அனுபவமே இதை அமைக்க உதவியாக இருந்தது,” என்கிறார் ராகவி.

ஹைதராபாத்தில் பிறந்து, கேளம்பாக்த்தைச் சேர்ந்த ராகவி வீட்டிற்கு ஒரே பிள்ளை, மேலும் தன் உடல் நிலை காரணமாக பள்ளி மற்றும் பட்டபடிப்பை தன் வீட்டின் பக்கத்தில் இருக்கும் பள்ளி கல்லூரிகளிலே படித்துள்ளார். பி.டெக் மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார், தற்பொழுது சத்யபாமா பல்கலைகழகத்தில் மனித வளத் துறையில் பி.எச் டி மேற்கொண்டு வருகிறார்.

தன் படிப்பை முடித்துவிட்டு முதலில் ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாடு ஊழியராக பணிபுரிந்தார். அதன் பின் அத்துறையில் பலவருடம் பெற்ற அனுபவத்தால் இன்று மனிதவள ஆலோசகராக இருக்கிறார். மேலும் தன் அமைப்பின் மூலம் ஊனமுற்ற பலருக்கு வேலை வாய்ப்பை தேடித் தருகிறார் ராகவி.

"சமமான வேலை வாய்ப்பு - வேலை வாழ்க்கை தரம் அதன் சூழலில்: ஊனமுற்ற வர்க்கத்தின் மீது ஒரு கருத்து ஆய்வு" மேற்கொண்டு அதற்கு சிறந்த ஆராய்ச்சி என்ற விருதையும் சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கல்வி நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளார்.

ஊனம் என்பது ஒரு குறை அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு எடுத்துக்காட்டாய் வாழ்ந்து வருகிறார் ராகவி.

“எனக்கு வழிகாட்டியாக பலரை நான் பார்க்கிறேன், எனக்கு கற்றல் மீது ஆர்வம் அதிகம். அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற தாகம் எனக்குள் இருக்கிறது அதனால் பல்வேறு துறையில் இருக்கும் பலரை என் முன் மாதரியாக நான் கொண்டுள்ளேன்,”

என உத்வேகமாக பேசுகிறார். ஹெலன் கெல்லர் மற்றும் அன்னை தெரசாவின் சொற்களை தன் பயணத்தின் ஊன்றுகோலாய் வைத்து முன்னேறுகிறார். நம்முடன் பேசுகையில் அவர்களின் கூற்றையே ஒப்பிடுகிறார்.

படித்தோம், ஏதோ ஒரு வேலை என பலர் இருக்கும் இந்த சூழலில், தான் ஒரு மாற்றுத் திறனாளி என்று எந்த ஒரு தடையும் இல்லாமல் தன் பணி வாழக்கையிலும் முன்னிலை வகிக்கிறார் இவர். தான் பணிபுரிந்த நிறுவனங்களிடம் இருந்து ’women achiever’ விருது, நட்சத்திர விருது என பல விருதுகளை வாங்கியுள்ளார்,

மேலும் இந்த வருடம் பிராண்ட் அவதார் நடத்திய சுயசக்தி விருது விழாவில் மாற்றுத் திறனாளி பிரிவில் Homepreneur விருதை பெற்றுள்ளார்.

“ஒரு மனிதனுக்காக பேச, உதவ, ஊக்கமூட்ட சக மனிதன் தேவை. தனிநபர்கள் அல்லது ஒதுக்கப்பட்டோர் என அனைவரும் வாழ்வில் முன்னேற வேண்டும். இந்த நோக்கத்திலே எங்களது ஹெட்வே அமைப்பு பணிபுரிகிறது,” என முடிக்கிறார் ராகவி.

பல கஷ்டங்களை தன் வாழ்வில் சந்தித்தாலும் அதைப் பற்றி பேசாமலும் அதை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் முன்னேருவதையும் தன்னை போன்றவர்களுக்கு உதவுவதையே இலக்காக கொண்டுள்ளார் ராகவி. தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தான் ஊனமுற்றவர்கள், இவர்கள் அல்ல.