நகைச்சுவை அரசர் கவுண்டமணி...

0

100 ஆண்டுகால வரலாற்றை கொண்டுள்ள தமிழ் சினிமாவை கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகாலம் தன்னுடைய சிரிப்பு ராஜ்ஜியத்தால் ஆட்சிபுரிந்தவர் கவுண்டமணி. வயது பேதம் இல்லாமல், எதிர்பாளர்கள் இல்லாமல் எல்லாராலும் கொண்டாடப்பட்ட வெகு சில கலைஞர்களில் ஒரு அதிசயக் கலைஞன் கவுண்டமணி.

ப்ப்பா.... நின்னா கவுண்டரு, உக்கார்ந்தா கவுண்டரு.... இந்த கவுண்டரு அடிக்கிறதையும், களாய்க்கிறதையும் யாருதான் கண்டுபிடிச்சா...? எப்படி யோசிச்சாலும், நம்ம தமிழ் சினிமாவிற்கு கிடைச்ச கவுண்டமணிக்கு நிகரான ஒரு பொக்கிசத்த யாரும் மறுபடியும் கொண்டு வர முடியாது. அந்தப் பெருமை படைத்த கவுண்டமணிக்கு இன்று பிறந்த நாள்.

தன்னுடைய 15 வயதில் சென்னையில் உள்ள ஒரு பிரபல நாடக கம்பெனியில் இணைந்த கவுண்டமணி, 26 வயதில் சினிமாவில் அறிமுகமானார். படத்துக்கு படம் பஞ்ச்களை பறக்கவிடும் கவுண்டமணிக்கு அவரது முதல் படத்தில் வசனமே இல்லையான்றால் நம்ப முடிகிறதா? ஆம். அதுதான் காலத்தின் முரண். நாகேஷ் நாயகனாக நடித்த ’சர்வர் சுந்தரம்’ படம்தான் கவுண்டமணியின் முதல் படம். அதில் கூட்டத்தில் ஒருவராக வந்துபோகும் கதாபாத்திரத்தில் நடித்த கவுண்டமணி, பின்னர் சிவாஜி நடித்த ’ராமன் எத்தனை ராமனடி’ படத்தின்மூலம் திரையில் தனது முதல் வசனத்தை பதிவு செய்தார்.

தொடர்ந்து தேனும் பாலும், அன்னக்கிளி போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்த கவுண்டமணிக்கு பாரதிராஜாவின் ’16 வயதினிலே’ மிகப்பெரிய பிரேக் கொடுத்தது. கமல் ஹாசன், ரஜினிகாந்த் என தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களை புகழ் வெளிச்சத்துக்கு கொண்டுவந்த அந்த படம்தான் கவுண்டமணியையும் தமிழ் உலகுக்கு அடையாளம் காட்டியது. அதில் அவர் பேசிய ’பத்த வெச்சிட்டியே பரட்ட’ எனும் வசனம் எல்லோராலும் கொண்டாடப்பட்டது.


1970-ம் ஆண்டு திரையுலகில் கால் பதித்த இவரை இன்று வரை இந்த திரையுலகமே கொண்டாடுகின்றது. இன்றைக்கும் என்றைக்கும் அவருக்கு நிகர் அவரே..

இவருக்கு நிகர் இவரே.. இதை யாராலும் மாற்றவும் திருத்தி எழுதவும் முடியாது. அந்த அளவிற்கு புகழ் பெற்றவர். கவுண்டமணி என்றாலே செந்திலும் அடைமொழி பெயரினை போல் ஒட்டிக்கொண்டுகூடவே வரும். அது அன்பின் மொழி. ஆம். செந்திலுக்கு கவுண்டமணியின் மேல் ஓர் அலாதி பிரியம். கவுண்டமணிக்கு அழைப்பு ஏதும் போகாமல் செந்திலுக்கு கரகாட்டக்காரன் படவாய்ப்பு வந்தபோது, கவுண்டர் நடிக்கவில்லை என்றால் நானும் நடிக்கபோவதில்லை என்று அடம் பிடித்து கங்கை அமரனை சம்மதிக்க வைத்தவர் செந்தில். அன்று அவர் அடம்பிடிக்கவில்லை என்றால், இன்று வரை புகழ் பெற்ற "வாழைப்பழம் - நகைச்சுவை நாதஸ்" ஆகியவற்றை நாம் இழந்திருப்போம்.


படப்பிடிப்பு காரணமாக சிறிது நாள் வெளியூர் சென்று தங்கிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஒரு நாள் என் மனசு சரியில்லை. யாராவது கவுண்டமணியின் நகைச்சுவை கேசட்டை வாங்கி வாங்கப்பா.. கவுண்டரின் காமெடியை கேட்டால், எந்த கவலையாக இருந்தாலும் பறந்தோடிவிடும் என்று கூறியுள்ளார். இதனை கேள்வியுற்ற கவுண்டர் கேட்ட மறுநிமிடமே கண்கலங்கி விட்டாராம்.. !

சின்சியர் கவுண்டர் நம்ம கவுண்டருக்கு டைமிங் ரொம்ப முக்கியம். காலைல 10 மணிக்கெல்லாம் டான்னு அவரோட ஆபிஸ்க்கு வந்துருவாராம். வந்ததும் இருக்கிற எல்லா செய்திதாளையும் ஒன்று விடாமல் படித்துவிடுவார். அதன் பின் மாலை வேளையில் ஒன்று மணி நேரம் நடைபயிற்சி, முடித்ததும் நண்பர்களுடன் அரட்டை என்று தன் பொழுதினையும் தன்னை சுற்றியுள்ளவர்களின் பொழுதினையும் மகிழ்ச்சியாகவே களிப்பார். இவரது பெஸ்ட் நண்பர் சத்யராஜ்தான். கோயம்பத்தூர் குசும்புனா சும்மாவா..? இவரும் சத்யராஜும் இணைந்தாலே போதுமே... நல்ல நண்பர்கள்.. இவர்களின் நட்பு திரையில் மட்டுமில்லை. திரைக்கு பின்னும் இவர்கள் நல்ல நண்பர்கள்.

தமிழ் சினிமாவின் பந்தா பண்ணாத முதல் நடிகர்.. இவர் பெரும்பாலும் ஆடம்பரங்களை விரும்பாதவர். இவர் வீதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது யாரவது தெருவில் கவுண்டமணி செல்கிறார் என்று வியந்து பார்த்தல், நின்று திரும்பி வந்து நடிகனும் மனுஷன்தான்யா.. கொஞ்சமாவது மனுஷன்னு மட்டும் மதிப்பு கொடுங்கையா என்று சொல்லி செல்வார்.

கவுண்டர் சந்தோசத்தில் இருந்தால் அப்பொழுது முழுக்க முழுக்க கருப்பு நிற உடையையே அணிந்து கொள்வார். உலகின் அனைத்து மிகுந்த மதிப்பான பிராண்டு சட்டை கலெக்க்ஷன் இவரிடம் உண்டு. சமீபத்தில் நடந்த ஒரு இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் கவுண்டமணியை இன்றைய அஜித்குமார் என்று சொன்னது பெரும் வைரலாக இணையத்தை பரவி சுற்றி வலம்வந்தது. ஆம். இவர் எந்த விழாவிலும், நிகழ்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார். அது ரஜினி, கமல் என்று எவ்வளவு பெரிய நடிகர்கள் அழைத்தாலும் சரி. எவரின் வெற்றி கொண்டாட்டத்திலும் இவர் பங்கேற்க மாட்டார். ஆனால், மிக நெருக்கமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் துக்க நிகழ்சிகளில், கவுண்டர் முதல் ஆளாக அங்கு சென்று துக்கம் விசாரிப்பார்.

1960-களில் ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கியவர் அன்றைய நகைச்சுவையாளர் சந்திரபாபு. அதன் பின்பு முன்னணி நடிகர்களுக்கு அளித்த சம்பளத்தை விட அதிக சம்பளம் கவுண்டமணிக்கே வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இவரின் நிர்வாகம் அனைத்துமே இவரின் மனைவி தான். ஒரு டெபிட், கிரெடிட் கார்ட் கூட இன்று வரை இவரது கையில் இல்லை. இவர் நடித்து புகழ் பெற்ற காலத்திலிருந்து இன்று வரை நாளாக நாளாக இவருக்கான ரசிகர்கள் கூட்டம் பெருகிக்கொண்டே தான் செல்கிறது.

இன்று மீம் நாயகனாகவும் வலம் வருகிறார் கவுண்டமணி. இணையதளத்தில் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் கவுண்டமணி படத்தையும், வசனத்தையும் வைத்து வராத மீம்ஸ்களே இல்லை. விரைவில் வெளியாக உள்ள இவரின், எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் இவரும் செம்ம அப்டேட்டாக வருகிறார்.


தற்போது டைமிங்கில் கலக்கி வரும் சந்தானம் மற்றும் பல நகைச்சுவை கலைஞர்களின் முன்னோடி மற்றும் காமெடிக்கே டிக்ஸ்னரியாக இருக்கும் கவுண்டமணிக்கு இன்று வரை டைமிங் காமெடிக்கு பஞ்சம் இல்லை. அவரின் ரசிகர்களுக்கும் அவரை சுற்றி இருப்பவர்களின் மகிழ்ச்சிக்கும் பஞ்சம் இல்லை. என்றும் இவரது நகைச்சுவைக்கு இணையாக இனிவரும் யாரும் இவருக்கு ஈடுஇணை கொடுக்க முடியாது.. என்றுமே இவர்தான் காமெடி கிங். என்பதில் சந்தேகமே இல்லை.

ஒரு அரசியலோ இல்லை மிகவும் சர்ச்சைக்குரிய நிகழ்சிகளை திரைப்படங்கள் மூலமாக எந்த பயமும் இன்றி மக்களிடம் தைரியமாக கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவர் மறைந்த நடிகர் மணிவண்ணன். அவரை அடுத்து கவுண்டர் தான். இவர்களை தவிர யாரும் சர்ச்சைகளான விஷயங்களையும் விழிப்புணர்வுகளையும் நகைச்சுவையாக மக்களிடம் சேர்ப்பது மட்டுமில்லாமல் மக்களின் ஆழ்மனதிலும் பதியவைக்க முடியாது.

ஹேப்பி பர்த்டே நகைச்சுவை அரசர் கவுண்டமணி ….

Related Stories