வாஷிங்டன் செரினேட் கோரஸ் திருவிழாவில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ள மாணவர்கள்!

0

இதுவரை விமானத்தில் கால் பதிக்காத நலிந்த பின்னணியைச் சேர்ந்த 23 குழந்தைகள் வாஷிங்டனில் நடக்கவிருக்கும் உலகளவில் பிரபலமான செரினேட் கோரஸ் திருவிழாவில் இந்தியா சார்பில் பங்கேற்க உள்ளனர். நகராட்சி மற்றும் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த இந்த மாணவர்கள் இசைப் பயணம் மூலம் அமைதி மற்றும் சகோதரத்துவ கருத்தினை பரப்புவதற்காக நெல்சன் மண்டேலாவின் 100-வது பிறந்த நாளை ஒட்டி இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.

”இசை எப்போதும் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. வருத்தமாக இருக்கும் நேரங்களில் தனி அறைக்குச் சென்று பாடுவேன். எனக்கு பிடித்தப் பாடலைப் பாடும்போது அது எனக்கு மகிழ்ச்சியளிக்கும். அங்கு எப்படி இருக்கப்போகிறது என எனக்குத் தெரியவில்லை,” என்றார் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவரான கணேஷ்.

Nalandaway அமைப்பின் தலைவர் ஸ்ரீராம் ஐயர் தலைமையில் இயங்கும் சென்னை குழந்தைகள் குழுவைச் (Chennai Children’s Choir) சேர்ந்த இந்த குழந்தைகளுக்கு கிட்டார் வாசிப்பவரும் பாடகரும் இசைக்கலைஞருமான வேதாந்த் பரத்வாஜ் பயிற்சியளிக்கிறார். இசைக்கலைஞர், இசைக் கல்வி ஆலோசகர் மற்றும் குரல் பயிற்சியாளரான மஞ்சுளா பொன்னபள்ளி அவர்களும் இந்த மாணவர்களுக்கு பயிற்சியளிக்கிறார்.

”எங்கள் குழுவில் பார்வை குறைபாடுள்ள மாணவர்கள், சிறப்புத் தேவை உள்ள மாணவர்களும் அடங்குவர். பொருளாதார ரீதியில் பின் தங்கிய சமூகத்தில் உள்ளவர்களிடம் இருந்தே முன்மாதிரிகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன் இந்தக் குழந்தைகளுக்கு இசையை கற்கவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், அவர்களது திறனை வெளிப்படுத்த உலகளவிலான மேடையை வழங்கவும் வாய்ப்பளிக்க விரும்புகிறோம்,” என்று பெருமையாக குறிப்பிட்டார் ஸ்ரீராம்.

சென்னையையும் தமிழ்நாட்டையும் தாண்டி சாதனை படைப்பதில் இக்குழு கவனம் செலுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள கலாச்சாரத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் சென்று பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவதே இவர்களது நோக்கமாகும்.

நீதி, அமைதி, நம்பிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட வலுவான கருத்துக்களும் பண்பாடும் நிறைந்த பாடல்களை தேர்ந்தெடுத்தோம். இந்தக் குழந்தைகள் பல்வேறு இந்திய மொழிகளைக் கற்கவும் சகிப்புத்தன்மையை உருவாக்கிக்கொள்ளவும் வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறோம்,” என்றார் ஸ்ரீராம்.

அமீர் குஷ்ரோ, பாரதியார், மீரா பாய், மைக்கேல் ஜாக்சன், ஏஆர்.ரஹ்மான், கபீர் என இந்தக் குழந்தைகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாடல்களைப் பாடி பெங்காலி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மார்வாடி, உருது, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் வாயிலாக இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்துவார்கள்.

Nalandaway துவக்கம்

தமிழகத்தில் இன்று 42,000 குழந்தைகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ’நலந்தா வே’-வின் பயணம் 2002-ம் ஆண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உயிரை பலி வாங்கி சுமார் 98,000 மக்களை இடம்பெயறச்செய்த குஜராத் மதக்கலவரத்தின் போது துவங்கியது.

தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் எம்பிஏ பட்டதாரியான ஸ்ரீராம், குஜராத் கலவரம் ஏற்பட்ட சில நாட்களிலேயே அந்த இடத்திற்குச் சென்றிருந்தார். அங்கே அவர் சந்தித்த விஷயங்கள் அவர் வாழ்க்கையிலேயே ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவர் தனக்குள்ளே சில கேள்விகளை எழுப்பிக்கொண்டார்.

எது வன்முறையைத் தூண்டுகிறது? மக்களால் சக மனிதர்களின் மீது எவ்வாறு வெறுப்பும் வன்முறையும் காட்டமுடியும்? சுயபரிசோதனை செய்த பிறகு பயமும் அறியாமையுமே இதற்கான முக்கிய காரணங்கள் என்பதையும், வெறுப்பும் வன்முறையும் இதன் விளைவுதான் என்பதையும் புரிந்துகொண்டேன்.

பயத்தை போக்குவதற்கும் பிற கலாச்சாரங்களையும் பிற மனிதர்களையும் புரிந்துகொள்ளும் திறனை உருவாக்குவதற்கும் தேவை உள்ளது என்பதை அவர் உணர்ந்தார்.

”எல்லோரும் ஒன்றிணைந்து சிறப்பாக வாழ வாய்ப்புள்ளது. சகிப்புத்தன்மை அதிகரிக்கும். நீங்கள் அனைவரிடமும் அன்பு செலுத்தவேண்டிய அவசியமில்லை. அதே சமயம் நீங்கள் அனைவரையும் வெறுக்கவேண்டிய அவசியமும் இல்லை,” என்றார்.

இந்த காரணத்திற்காக உருவானதுதான் Nalandaway ஃபவுண்டேஷன். இது ஒரு சென்னையைச் சேர்ந்த லாப நோக்கமற்ற நிறுவனம். இந்நிறுவனம் நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் குறிப்பாக பாதிக்கப்பட்ட பின்னணியைச் சேர்ந்த குழந்தைகள் படைப்பாற்றலுடன் கூடிய ஊடகங்களான தியேட்டர், விஷுவல் ஆர்ட்ஸ், இசை, நடனம், ரேடியோ, திரைப்படங்கள் ஆகியவை வாயிலாக தங்களது பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்க உதவுகிறது.

பாதிப்புகளுக்கு ஆளாவதற்கு தீர்வு காணுதல்

12 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கிய பிரிவினைச் சேர்ந்த குழந்தைகளுடன் பணியாற்றுகிறது. இந்தக் குழந்தைகளின் பயம் மற்றும் உணர்ச்சி ரீதியான சிக்கல்களுக்கு காட்சி மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றைக் கொண்ட கலை வாயிலாக இந்தக் குழு தீர்வு காண முற்படுகிறது.

மாணவர்கள் சுயமாக மதிப்பீடுகளை உருவாக்கக் கலை உதவும். அத்துடன் ஒரு பிரச்சனைக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட தீர்வுகள் இருக்கலாம் என்பதையும் கற்றுக்கொடுக்கும். குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றுவதைத் தவிர்த்து குழந்தையின் மூளை எப்படி, ஏன் போன்றவற்றை ஆராயும். 

”கற்றலுக்கான அணுமுறையிலேயே குறைபாடு உள்ளது. பள்ளியில் மாணவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். ஆரம்பப் பள்ளி என்பது பாதுகாப்பற்ற உணர்வை உருவாக்கி தவறான அபிப்ராயத்தை ஏற்படுகிறது,” என்றார் ஸ்ரீராம்.

ஆரம்பத்தில் Nalandaway இந்தியா முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுடன் பணிபுரிந்து மாணவர்களின் உணர்வு ரீதியான சிக்கல்களுக்கு குறுகிய கால பட்டறைகள் வாயிலாக தீர்வுகாணும் விதத்தில் செயல்பட்டது. பீஹார், காஷ்மீர், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் செயல்பட்டது. எனினும் 2009-ம் ஆண்டு மாணவர்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட கால தொடர்பில் இருக்கவேண்டும் என்பதை உணர்ந்தார். ஆகவே இந்தக் குழு ஒரு சில பகுதிகளில் கவனம் செலுத்தி அதே குழுவைச் சேர்ந்த மாணவர்களுடன் அவர்களுக்கு 18 வயதாகும் வரை இணைந்திருக்க தீர்மானித்தது.

இந்தக் குழு கதை சொல்லுதல், கலை, கைவினை ஆகியவை மூலம் அரசுப் பள்ளிகளுடன் இணைந்து செயல்பட்டது. அங்குள்ள மாணவர்களின் ஆங்கிலம், கணிதம், அறிவியல் ஆகியவற்றை கற்கும் திறனை மேம்படுத்துவதுடன் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் போகும் விகிதத்தை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டது.

”தமிழ்நாடு மற்றும் டெல்லி இடையே 130 ஆரம்பப் பள்ளிகளுடன் பணிபுரிகிறோம். ஆசிரியர்கள் படைப்பாற்றலுடன் மாற பயிற்சியளிக்கிறோம். சுய கற்றலை ஊக்குவிக்கும் பாடத்தொகுப்பை வடிவமைக்கிறோம். இதனால் குழந்தைகள் கற்கவும் படைப்பாற்றலும் இருக்கவும் உதவும். அத்துடன் இதற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் நாங்களே வழங்குகிறோம்,” என்றார் ஸ்ரீராம்.

Nalandaway நான்கு திட்டங்களை வடிவமைத்துள்ளது :

1. கல்வியில் கலை : தங்களது மாணவர்களின் படைப்பாற்றலை விரிவடையச் செய்யவும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் அனுபவத்தை வழங்கவும் ஆசிரியர்களை தயார்படுத்துகிறது.

2. கலை ஆய்வகங்கள் : நுண்கலை, கைவினை, இசை, நடனம், நாடகம், ஃபோட்டோகிராஃபி போன்றவற்றில் திறன் கொண்ட நலிந்த பின்னணியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு சிறப்பு பாடங்களை வழங்க அரசுப் பள்ளிகளில் சிறப்பு இடங்கள் உருவாக்கப்படும். இன்று சென்னையில் 8 ஸ்டூடியோக்களும், டெல்லியில் இரண்டு ஸ்டூடியோக்களும், கோயமுத்தூரில் இரண்டு ஸ்டூடியோக்களும் உள்ளன. சென்னையில் உள்ள ஒரு ஸ்டூடியோ ஆட்டிசம், டவுன் சிண்ட்ரோம், மனநல பாதிப்பு உள்ளிட்ட சிறப்பு தேவை இருக்கும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக செயல்படுகிறது. தொழில்வழி சிகிச்சை வழங்கும் கற்றல் மற்றும் மறுவாழ்வு மையமாகவே இந்த கலை ஆய்வகங்கள் செயல்படுகிறது.

3. கலை வாயிலாக குணமடையச் செய்தல் : மன அழுத்தம் மற்றும் ஒத்துழைக்காத நடத்தை கொண்ட இளம் பருவ நிலையில் இருப்போருக்கென மூன்று நாட்கள் அங்கேயே தங்கி பயிற்சியெடுத்துக்கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் கலை முகாம்தான் ‘கனவு பட்டறை’. இது சுய மதிப்பை மேம்படுத்த உதவுகிறது. நேர்மறையான நபர்களாக வளர உதவுகிறது. தமிழகம் மற்றும் ஆந்திராவில் 70-க்கும் அதிகமான கலை முகாம்கள் முடிவடைந்துள்ளன.

4. சென்னைக் குழந்தைகள் குழு : உலகத்தரம் வாய்ந்த குழுவை உருவாக்க பொருளாதார ரீதியில் பின் தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளை ஒன்றிணைக்கிறது சென்னைக் குழந்தைகள் குழு. 2015-ம் ஆண்டு கோடையின் போது இந்தக் குழு 250 அரசு மற்றும் ட்ரஸ்ட் தலைமையிலான பள்ளிகளில் இருந்து 600-க்கும் அதிகமான மாணவர்களின் திறன் மதிப்பிடப்பட்டது. இந்தக் குழுவில் பங்கேற்க 60 மாணவர்களை தேர்வு செய்யப்பட்டனர். குழுவின் ஆறு குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு உள்ளது. இரண்டு குழந்தைகள் சிறப்புத் தேவை உள்ள குழந்தைகள். சென்னை மயிலாப்பூரில் உள்ள Children’s Club-ல் ஒவ்வொரு வாரமும் ஒத்திகை பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு The Hindu Literature Festival அறிமுகப்படுத்தப்பட்டது.

எங்கள் குழந்தைகளால் தமிழில் மட்டுமே உரையாட முடியும் என்றாலும் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், உருது, பெங்காலி ஆகிய மொழிகளில் அந்தந்த மொழியைச் சேர்ந்தவர்களுக்கு நிகராகப் பாடுவார்கள்,” என்று பெருமையுடன் குறிப்பிட்டார் ஸ்ரீராம்.

வாஷிங்டன் டிசி நிகழ்ச்சி

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், 15 ஆண்டுகளாக வாஷ்ங்டன் டிசியில் நடந்து வரும் செரினேட் கோரஸ் திருவிழாவிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஸ்ரீராமிற்கு உதித்தது. அதற்காக விண்ணப்பித்தார். ஆனால் இவரது குழு தேர்வாகுமா என்பது உறுதியாக தெரியாத காரணத்தால் இது குறித்து மாணவர்களிடம் தெரியப்படுத்தவில்லை.

இக்குழுவிற்கு பல்வேறு சுற்று நேர்காணல் நடைபெற்றது. பயிற்சி வீடியோ பதிவுகளையும் தேர்வு செய்யும் கமிட்டியிடம் பகிர்ந்துகொண்டனர்.

”தேர்வான பிறகும் டிசி-க்கு அனுப்புவதற்காக 23 குழந்தைகளை ஒன்று திரட்டமுடியுமா என்பது நிச்சயமில்லாமல் இருந்தது. எனினும் நாங்கள் முயற்சி செய்ய தீர்மானித்து லாஜிஸ்டிஸ் தொடர்பான உதவி பெற கூட்டு நிதி பிரச்சாரத்தை துவங்கினோம்,” என்றார் ஸ்ரீராம்.

வாஷிங்டன் டிசியில் பல இடங்களில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இறுதியாக ஜூலை 4-ம் தேதி 15-க்கும் மேற்பட்ட பாடல்களை குழந்தைகள் பாடுவார்கள்.

”என் அப்பா பேக்கரியில் விற்பனையாளராக இருக்கிறார். என் அம்மா இல்லத்தரசி. தமிழ்நாட்டிற்கு வெளியே எங்கேயும் பயணம் செய்ததில்லை. நான் அமெரிக்கா செல்லப்போவதை அறிந்து என்னால் நம்பவே முடியவில்லை. செய்தியைக் கேட்டபோது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. இந்த விழாவில் பங்கேற்று என் பெற்றோரைப் பெருமைப்படுத்தப் போகிறேன்,” என்றார்  முத்துச்செல்வன் என்கிற மாணவர்.

தற்போது கார்பரேட் சமூக பொறுப்பு நடவடிக்கை நிதி, அமெரிக்க உதவி, மற்ற பலதரப்பட்ட நிறுவனங்கள் நிதி வழங்கியுள்ளது. ஸ்ரீராம் ஸ்பான்சர்ஷிப் வாயிலாக வாஷ்ங்டன் டிசி நிகழ்ச்சிக்கு நிதி உயர்த்த திட்டமிட்டுள்ளார்.

”குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நிகழ்ச்சியைக் காட்டிலும் விமானத்தில் பயணம் செய்யப் போவதை நினைத்து குதூகலமாக உள்ளனர். அவர்கள் ஏமாற்றமடைய விட மாட்டோம் என நம்புகிறேன்,” என்றார் ஸ்ரீராம்.

உலக அரங்கில் இந்தியா சார்பாக சிறப்பாக பங்கேற்கவும் நம்மை பெருமைப்படுத்தவும் சென்னைக் குழந்தைகள் குழுவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா

Related Stories

Stories by YS TEAM TAMIL