30 கோடி இந்திய குடும்பங்களுக்கு மின் ஒளியேற்றப் போகும் சென்னை ஐஐடி மாணவர்களின் தொழில்நுட்பம்!

0

ராஜஸ்தான் தார் பாலைவனத்தின் கோடியில் இருக்கும் லிக்மசார் எனும் கிராமத்தில் வாழும் சைதன்ராம், தன் வாழ்நாளில் முதன்முதலாக தன் வீட்டில் மின்சார ஒளியை இந்த ஆண்டில்தான் பெற்றார்.  "எங்கள் குடும்பத்துக்கு வெளிச்சமே இப்போழுது தான் வந்துள்ளது," என்று என்டிடிவியின் பேட்டியில் கூறினார். ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் கண்டுபிடித்துள்ள புதிய தொழில்நுட்ப மின்சாரத்தின் பயனை பெற்ற முதல் பயனாளிகளில் ஒருவரே சைதன்ராம். மின்சாரமின்றி இருளில் வாழும் 300 மில்லியன் இந்தியர்களின் வாழ்வில் ஒளியை தரும்வகையில் மின்சாரத்தை அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது ஐஐடி மெட்ராஸ்.

நன்றி: DNA
நன்றி: DNA

சைதன்ராமின் வீடு உட்பட 58 குடியிருப்புகள் உள்ள ராஜஸ்தான் பலோடி கிராமத்தில் வெயில் சுட்டெறித்து 51 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் தகித்தது அண்மையில் செய்தியாக வெளிவந்தது. ஆனால் அதைத்தாண்டி அந்த சிறிய கிராமத்தில் மின்சாரப் புரட்சி ஒன்று நிகழ்ந்து வந்தது பலரும் அறிந்திராத விஷயம். சென்னை ஐஐடி மாணவர்கள் தங்கள் நேரடி மின்சாரம் முறையின் மூலம் அக்கிராமத்தின் வீடுகளில் ஒளியேற்றி வருகின்றனர். இந்த புதுமுறை மின்சார உற்பத்தி ஜோத்பூர் மாவட்டத்தின் மணற்குன்று நடுவில் வசிப்போர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

ஐஐடி மெட்ராஸின் இயக்குனர் பாஸ்கர் ராமமுர்த்தி கூறுகையில்,

"இதை தொழில்நுட்பத்தின் திருப்புமுனை எனலாம். இது ஒரு புதிய கண்டுபிடிப்பு இல்லை, உலகத்தால் கைவிடப்பட்ட, வீடுகளுக்கு நேரடி மின்சார இணைப்பைத் தரும் ஒரு முறையே," என்றார்.

மாற்றுவகையில் யோசித்த சில மாணவர்கள் இந்த முறையை மீண்டும் கையிலெடுத்து, இந்தியாவின் மின்சாரமில்லா இடங்களின் துயரைத் துடைக்க முற்பட்டதன் விளைவாகும் இத்திட்டம். 2022 ஆம் ஆண்டுக்குள் இருளில்லா இந்தியாவை உருவாக்கப்போவதாக வாக்குறுதி அளித்த பிரதமர் நரேந்திர மோடியின் கனவை அடைய உதவப்போகும் திட்டம் இதுவாக இருக்கும். குறிப்பாக தனிமைப்படுத்தப்பட்ட சிறிய குக்கிராமங்களுக்கு மின்சார வசதியை அளிக்க உதவப்போகும் திட்டம் இது என்றார்.  

பசுமைவீடு வாயு வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த இந்திய தொழில்நுட்பம். அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இயங்கும் இந்திய மின்சாரத்துறை அமைச்சகம், சென்னை ஐஐடியின் இந்த தொழில்நுட்பத்தை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது. பலோடியில் உள்ள பல கிராமங்களில், இன்னமும் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கெரோசின் விளக்கு மட்டுமே அங்குள்ள வீடுகளில் எரிந்து வருகிறது. இந்த சூழலில் தான் ஐஐடி மெட்ராஸ் மாணவர்கள் தலையிட்டு இன்வெர்ட்டர் இல்லா மின்சார இணைப்பை வழங்கும் முறையை செயல்படுத்த முனைந்து வருகின்றனர். 

.