இரு சக்கர வண்டியை ஓட்டிக்கொண்டே போனுக்கு சார்ஜ் போடலாம்- சென்னை இஞ்சினியரின் கண்டுபிடிப்பு!

0

அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருளாக மாறிப்போன மொபைல் போன்களின் பேட்டரி தீர்ந்து போனால், வாழ்க்கையே முடிந்தது போல் சிலருக்கு ஆகிவிடுகிறது. இதற்குத் தீர்வு காண நினைத்த சென்னையைச் சேர்ந்த மெக்கானிக்கல் இஞ்சினியர் அமன் அருண் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். ஒரு புதுவகையான சார்ஜரை கண்டுபிடித்து, அதை இரு சக்கர வாகனத்தோடு இணைத்து, அதன் இகினிஷனில் இருந்து சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் வகையில் வடிவமைத்துள்ளார். 

அருண் இதை உருவாக்க சுமார் எட்டு மாதங்கள் எடுத்துக்கொண்டார். ‘பவர் எய்ட்’ என்று இதற்கு பெயரிட்டு அண்மையில் வெளியிட்டுள்ளார் இவர். இது குறித்து எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பேட்டியில் கூறிய அருண்,

”ஒரு நாள் என்னுடன் படிக்கும் மாணவி, கல்லூரியில் இருந்து வீட்டை அடைய தாமதமாகியது. ஆனால் அதைப்பற்றி வீட்டில் தெரிவிக்க அவரிடம் இருந்த போனில் சார்ஜ் இல்லாமல் போனது. அப்போது தான் இந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து சார்ஜ் செய்யும் வசதி பற்றிய எண்ணம் என் மனதில் ஏற்பட்டது. வண்டியை ஓட்டிக்கொண்டே போன்/டேப்பை சார்ஜ் செய்து கொள்ளமுடியும். வீட்டில் கரெண்ட் இல்லாதபோதும் பவர் எய்ட் கொண்டு சார்ஜ் செய்து கொள்ளலாம்,” என்றார். 
பட உதவி: The Indian Express
பட உதவி: The Indian Express

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின் படி, 

“பவர் எய்ட், மோட்டார்சைக்கிள் மற்றும் மொபெட் போன்ற வாகனங்களில் பயன்படுத்தக் கூடியது. இதற்கு தேவையான ரிசர்வ் எனர்ஜியை இக்னிஷனில் இருந்து மொபைல் போனுக்கு சார்ஜாக அனுப்பமுடியும். இது விலைக்குறைவானது ஆகும்,” என்றார் அருண்.

அமேசானில் விற்கப்படும் இந்த சார்ஜரின் விலை 355 ரூபாய் ஆகும். அடுத்த இரண்டு வாரங்களில் கடைகளிலும் இது விற்கப்படும். இதில் இரண்டு யுஎஸ்பி இணைப்பு உள்ளது. ஒரே சமயத்தில் இரு சாதங்களை இதில் சார்ஜ் செய்து கொள்ளமுடியும். அருண் இதற்கு காப்புரிமை பெற்றுள்ளார். அமன் டெக்னாலஜீஸ் என்ற பெயரில் நாஸ்காம் உடன் இணைந்து ஒரு தொடக்க நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார் அருண்.

ஒரு நாளில் சாலையில் சுமார் 50 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் ஓடுகின்ற நிலையில், இந்த சார்ஜருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று அமன் டெக்னாலஜீஸ் இயக்குனர் ஜே.கோவிந்தராஜ் கருதுகிறார். முதலீட்டாளராகவும் இருக்கும் அவர் இந்நிறுவனத்தில் 50 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இவர்களின் செயல்பாடு விரைவில் தெற்காசியா வரை நீட்டிக்கப்படும். 

கட்டுரை: Think Change India