நேர்காணலுக்கு செல்லும்போது சிறப்பான உடையலங்காரம் அவசியம்: மேஹா பார்கவா

1

‘வாழ்வில் விரும்பியதை அடைய அதற்கேற்ற உடையலங்காரம் அவசியம்’ - ஈடித் ஹெட்

ஈடித் ஹெட் தெரிவித்த கருத்தின் ஆழம் நமது வாழ்வின் மிக முக்கியமான வேலைக்கான நேர்காணலில் தெரியவரும். நேர்காணலின்போதே நிறுவன மேலாளர் கவனத்தை ஈர்க்க சிறப்பான உடையலங்காரம் அவசியமாகின்றது. நமது படிப்பின் சிறப்பைப் பற்றியும், அனுபவத்தைப் பற்றியும் தெரிவிப்பதற்கு முன், நமது தோற்றம் நம்மைப் பற்றிய எண்ணத்தை முன்கூட்டியே ஏற்படுத்திவிடும். ஆகவே, போட்டிகள் நிரைந்த இந்த உலகில் நம் உடல் மொழி மற்றும் சிறப்பான தோற்றத்தின் மீது கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது. நமது உடையலங்காரம் தன்னம்பிக்கையுடனும், தகுதியானவராகவும், ப்ரொஃபஷனல் என்ற எண்ணத்தையும் அளிக்க வேண்டும். அதே வேளை அது அளவை மிஞ்சிவிடவும் கூடாது. உதாரணமாக சிவப்பு நகச் சாயமும், பளிச் கைப்பையும் நேர்காணலில் உங்கள் பக்கம் உதவாது. உங்களது திறமையையும், அறிவாற்றலையும் வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர திசைதிருப்பும்படி இருக்கக் கூடாது. ‘நான் பொறுப்பானவள், எனது திறமையைக் கொண்டு உங்களது தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவேன்’ என்று எடுத்துரைப்பதாக இருக்க வேண்டும்.

முதல் நேர்காணலோ அல்லது நூறாவதோ நமது நோக்கம் நமக்கு பிடித்த வேலையில் நாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதுதான். உடையலங்காரத்தில் முதல் மற்றும் முக்கிய அங்கம் வகிப்பது ஜாக்கெட்/பிளேசர்.

முதல் நேர்காணல்: முதல் நேர்காணலுக்கு கிளம்ப சரியான அளவிளான அடர் நிற கால்சட்டையுடன், பளீர் நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஜாக்கெட் அணிவது பொருத்தமாக இருக்கும். இந்த உடைக்கு பொருத்தமாக நடுத்தர அளவில் காதணிகளை அணியலாம். மேலும், சிறப்பான தோற்றத்துக்கு முத்து அல்லது வைர காதணிகளைப் பயன்படுத்தலாம்.

கார்ப்பரேட் நிறுவன நேர்காணல்: இறுக்கமான கால்சட்டைகள் ஒரு நேர்காணலுக்கு முறையான உடையல்ல. நேரான அல்லது தளர்வான அடர் சாம்பல் நிறம்/கருப்பு/அடர் நீல நிறத்தாலான கால் சட்டையும், வெளிர் அல்லது பாலேட்டின் நிறத்தில் சட்டை அணியலாம். இந்த கால்சட்டைக்கு ஏற்ப ஜாக்கெட் அணியலாம். கொஞ்சம் வித்தியாசமாக தோன்ற எண்ணினால், உற்சாகமூட்டும் வண்ணங்களைத் தேர்வு செய்து அணிந்துகொள்ளலாம்.

ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கான நேர்காணல்: இது கொஞ்சம் எளிமையானது. ஏனெனில் ஸ்டார்ட்-அப் நிறுவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். ஆகவே செமி-ஃபார்மல் உடையும் பொருத்தமாக இருக்கும். சீராக பொருந்தும் ஜீன்ஸ் பேண்ட்டுடன், ஸ்லோகன் எதுவும் இடம்பெறாத டி-ஷர்ட்களை பொருத்தமான ஜாக்கெட்டுடன் அணியலாம். இதுபோன்ற உடையலங்காரம் கவனத்தை ஈர்க்க நிச்சயம் உதவும்.

மதிப்பளிக்கும் தோற்றத்திற்கு எளிமையான ஒரு பிளேசர் அணிந்தாலே போதும். பிளேசர்கள் போரடிக்கும் ஃபார்மல் உடைக்குக்கூட இளமைத் துள்ளலைத் தரக்கூடும். படு பயங்கர கோடைக்காலத்திலும், ஒரு ஜாக்கெட்டைக் கொண்டு சிறப்பான தோற்றத்தைப் பெறலாம். இது முதிர்ச்சியானவராகவும், ஆற்றல்மிக்க பணியாளராகவும் நம்மை அடையாளப்படுத்த உதவும்.

மேலும் சில தகவல்கள்:

1. மிதமான நிறங்கள் நேர்காணலுக்கு சரியாகப் பொருந்தும்.

2. பெரிய, பள பள நகைகளைத் தவிர்க்கவும்.

3. அதீத மேக்கப்பைத் தவிர்க்கவும்.(எளிமையான தினசரி மேக்கப் போதுமானது.)

4. ஜொலிக்கும் விதமான நிறம்/உடையலங்காரங்களைத் தவிர்க்கவும்.

5. நேர்காணலுக்கு ஒருபோதும் தளர்வான உடலைக் காண்பிக்கும் சட்டைகளைத் தவிர்க்கவும்.

6. காதணிகளை நீங்கள் அணிய விரும்பவில்லை என்றாலும் பரவாயில்லை. கைக்கடிகாரத்தை மறந்துவிடாதீர்கள்.

7. சீராக வெட்டப்படாத நகங்கள் உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களைத் தரலாம்.

8. சுயிங் கம் மென்றுகொண்டு நேர்காணலுக்கு செல்லாதீர்கள்.

9. சிகையலங்காரம் சீராக இருக்கவேண்டும். ஒருவேளை, தலைமயிர் பின்னல் பின்ன இயலாத வாக்கில் இருந்தால் ‘போனிடெய்ல்’ உங்களைக் காப்பாற்றும்.

(இந்தத் தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது ‘ஸ்டைல் இன்க்’-ன் நிறுவனர் மேஹா பார்கவா. எந்தவொரு துறையிலும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் செயல்பட்டால் தன்னைப் பற்றிய தெளிவைப் பெறுவதுடன், மாற்றத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதுதான் மேஹாவின் கருத்து.)

ஆக்கம்: மேஹா பார்கவா | தமிழில்: மூகாம்பிகை தேவி

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பணிக்கு செல்லும் பெண்கள் அலங்கரித்து கொள்ளும் போது கவனிக்க வேண்டிய 5 குறிப்புகள்! 

தலைமைப்பதவியின் சவால்கள்: பெண்களுக்கு எவ்விதத்தில் மாறுபடுகின்றது?