தாயுடன் வளையல் விற்ற சிறுவன் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆன கதை!

நேர்மையுடன் கூடிய உண்மையான விடா முயற்சியும், ஆற்றல் இருந்தால் ஒருவர் வெற்றி இலக்கை நிச்சயம் அடையலாம்.

3

இளைஞர்களின் கனவு நாயகன் அப்துல் கலாம் கூறியது போல் பெரியதாக கனவு கண்டான் அந்த இளைஞன். அவன்தான் மகாராஷ்டிரா மாநிலம் சோலாபுரை அடுத்த மஹாகாவூன் சேர்ந்த சேர்ந்த ரமேஷ் கோலப். அவன் கண்ட கனவுதான் அவனுடைய வெற்றிகான மைல் கல்லாக மாறியது.

வாழ்க்கையில் எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனால் குறிக்கோள், தன்னம்பிக்கை, விடா முயற்ச்சியை எதுவும் செய்துவிட முடியாது.

அவரவரின் வாழ்க்கை சூழ்நிலைதான் போராட கற்றுத் தருகிறது. ஏழ்மை ஒருபக்கம் தந்தையின் குடிப்பழக்கம் மற்றொரு பக்கம், அதோடு பசி. இவைதான் அந்த சிறுவனின் கண்களில் சிறு வயதிலேயே ஒரு கனவை உருவாக்கியது. கையில் எதுவும் இல்லை. தலைக்கு மேல் ஒரு கூரை இல்லை. வெறும் பேனாவின் பலத்தால் கடின முயற்சி, நேர்மையான உழைப்பு இவை அவன் தலை எழுத்தை பின்னாளில் மாற்றி எழுதியது.

இன்று அவர் லட்சக்கணக்கான மக்களின் முன்மாதிரியாக திகழ்கிறார். அவர்தான் ஐ.ஏ .எஸ் அதிகாரி ரமேஷ் கோலாப்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையும் சோதனையான கட்டமாகவே அவருக்கு இருந்தது. இருப்பினும் அவருடைய குறிக்கோளில் இருந்து அவர் இம்மி அளவும் விலகி விடவில்லை. தனது தாயார் விற்பனை செய்த கண்ணாடி வளையல்களில் இருந்த வண்ணமயம் அவர்கள் வாழ்க்கையில் இல்லை. ரமேஷின் குழந்தை பருவம் வளையல் விற்கும் அம்மாவுடன்தான் கழிந்தது. "வளையல்... வளையல் வாங்கலையா வளையல்.." என்று தாய் கூவி கூவி விற்கும் போது ரமேஷும் தனது மழலை குரலில் கூவி இருக்கிறார்.

சதா சர்வமும் போதையில் இருந்த தந்தை குடும்பத்தை ஒரு போதும் கவனித்ததில்லை. அன்றாடம் உணவுக்கு தாயார் வளையல் விற்பனையை மட்டுமே நம்பி இருந்தார். அந்த பணத்தில் இருந்தும் குடிப்பதற்கு ஒரு பகுதியை அப்பா பிடிங்கிக் கொள்வார். இப்படித்தான் ரமேஷின் சிறு வயது வாழ்க்கை நகர்ந்தது.

ஒரு கட்டத்தில் ரமேஷும் தனது வாழ்வாதாரத்தை தானே தேடிக்கொண்டே படித்துக்கொண்டிருந்தார்.

ஆனால், முக்கியமான பத்தாம் வகுப்புத் தேர்வின் போது திடீரென நிகழ்ந்த தந்தையின் இறப்பு அவரை உலுக்கியது. ஆனாலும், வாழ்க்கையில் இது போன்ற பல கஷ்டங்களை, இடையூறுகளை சந்தித்த ரமேஷ் தன்னுடைய உறுதியை விடவில்லை. தீவிர முயற்ச்சியாக தேர்வு எழுதி பத்தாம் வகுப்பில் 88.50 % மதிப்பெண் பெற்று அசத்தினார்.

அவரது வாழ்வின் கடினமான நீண்ட பாதையில் பசி கொடுமை பாடாய் படுத்தி இருக்கிறது. சிலநாட்களில் சில பருக்கை சோறு கூட பார்க்க முடியாத நாட்களும் இருந்துள்ளன. இதற்கு இடையே படிப்பதற்கு பணம் தேடுவது இன்னும் கடினம் என்பதை சொல்லத் தேவை இல்லை.

"ஒரு முறை பசு மாடு வாங்குவதற்கு அம்மா சமூக நலத்துறை மூலம் 18ஆயிரம் ரூபாய் வாங்கினார். அதை மேல் படிப்புக்காக எனக்கு செலவிட முன்வந்தார். அதனை எடுத்துக்கொண்டு கிராமத்தில் இருந்து புறப்படும் போது ஏதாவது சாதித்துவிட்டுத்தான் கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன். முதலில் எப்படியும் ஒரு தாசில்தார் ஆக வேண்டும் என்று முயற்சித்து அதற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்று தாசில்தார் ஆனேன். அதுதான் எனது முதல் வெற்றி". 

ஆனால், அந்த பணியில் சேர்ந்த பிறகு அதுதான் வாழ்க்கை என்று ஒரு அரசு அதிகாரியாக இருந்து விடவில்லை. 

எனது மேல் அதிகாரிகளை பார்த்த போது ஐ.ஏ.எஸ். மீது ஒரு காதல் பிறந்தது. எப்படியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆகிவிட வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் உருவாக்கி எனது லட்சிய பயணத்தை தொடங்கினேன். அதற்காக பூனே சென்று படித்தேன். 2011 ஆம் ஆண்டு இரண்டாம் முயற்சியில் வெற்றி கிடைத்தது. அதற்கு அடுத்த ஆண்டே பயிற்சி முடித்து ஐ.ஏ. எஸ் அதிகாரியாக எனது கிராமத்துக்கு போனபோது பிரமாண்ட வரவேற்பு எனக்கு காத்திருந்தது. அன்று எனது கனவு நனவான நாள்."

தற்போது, ரமேஷ் ஜார்கண்ட் மாநிலத்தில் எரிசக்தித் துறை இணை செயலாளராக உள்ளார். இவருடைய வாழ்க்கையின் போராட்டம் நிறைந்த வெற்றிக் கதை மற்ற இளைஞர்களுக்கு இன்று ஒரு எரி சக்தியாக உந்துதல் தந்து கொண்டிருக்கிறது..!

இந்தியில்: குல்தீப் பரத்வாஜ் | தமிழில் : ஜெனிடா

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்

தொடர்பு கட்டுரைகள்:

பட்டய கணக்காளர் தேர்வில் வென்று அரசுத் தூதுவரான டீ கடைக்காரர்..!

ரோல்ஸ்ராய்ஸ் வைத்திருக்கும் முடிதிருத்துனர்!

படிப்பை பாதியில் விட்ட விவசாயி மகன், ஒரு டெக் மில்லினியரான வெற்றி கதை!