செயலி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க உள்ளூர்மயம் முக்கியம்: மவுசம் பட்

0

முதலில் ஆன் -லைனுக்கு மாற்றம், பின்னர் செயலிகளை நோக்கி முன்னேற்றம். இணைய உலகம் இப்படி தான் மாறிக்கொண்டிருக்கிறது. மொபைலில் மட்டுமே செயல்படும் உத்தி பற்றி தீவிர விவாதம் நடைபெற்று வரும் நிலையில், ஃபிளிப்கார்ட் மூத்த இயக்குனர் மவுசம் பட், செயலி பொருளாதாரத்தை உருவாக்குவது பற்றி டெக்ஸ்பார்க்ஸ் 2015 ல் சனிக்கிழமை அன்று உரையாற்றினார்.

கடந்த சில ஆண்டுகளில் செயலி சந்தை பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இன்று சர்வதேச செயலி டவுண்லோடு 180 பில்லியன் டாலர் அளவில் உள்ளது. வருவாய் 75 பில்லியன் டாலராக இருக்கிறது. இந்த பிரிவில் ஏற்படும் வளர்ச்சியை இவை உணர்த்துகின்றன.

“ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டே சேல் போது எங்கள் செயலி வழியே 8 மில்லியன் பொருட்களுக்கு மேல் விற்பனை ஆனது” என்கிறார் மவுசம்.

இந்த செயலி பொருளாதார சந்தைக்கு தயாராக இருப்பதாக அவர் சொல்கிறார். ஆனால், சந்தையின் தேவைக்கேற்ற தயாரிப்பை நாம் உருவாக்கி வருகிறோமா? என்ற கேள்வியையும் அவர் எழுப்புகிறார்.

"மொபைல் போன்கள் பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட காலம் மலையேறிவிட்டது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் செயலிகள் மூலம் ஷாப்பிங், வரைபடங்கள், கேம்கள், பொழுதுபோக்கு, செய்திகள் ஆகியவற்றை அணுகி வருகின்றனர். எல்லாம் மாறி இருக்கின்றன. சந்தை தேவைக்கேற்ப நாம் தயாரிப்புகளை வழங்க வேண்டும். அடுத்த புரட்சி சிறிய இடங்களில் இருந்து அரங்கேற இருக்கிறது” என்கிறார் மவுசம்.

செயலி புரட்சியை சமூகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

எப்படி செய்வது?

"ஒரு தயாரிப்பின் இருப்பிடம் மிகவும் முக்கியம். உள்ளூர் மக்களுக்காக, அவர்கள் தேவை மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றும் செயலிகளை உருவாக்க வேண்டும் என்று அவர் ஆலோசனை அளிக்கிறார்.

தொழில்முனைவோர்கள் அமைப்பை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பல பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்கிறார் அவர். செயலி சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்க முயலும் போது வர்த்தக மாதிரியையும் அலட்சியம் செய்யாமல் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் அவர்.

“இறுதியாக, நாம் விரைவில் சர்வதேச அளவிற்கு மாற வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பா மட்டும் சந்தை வாய்ப்புகள் அல்ல. தென் கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் உலகின் பிற பகுதிகள் தான்” என்கிறார் மவுசம்.