பால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்!

11

சந்தோஷ் ஷர்மா 2007-ம் ஆண்டு ஏர் இந்தியாவில் அதிக சம்பளத்துடன்கூடிய வேலையில் இணைவதற்கு முன்பு பல்வேறு பணிகளைச் செய்துள்ளார். ஏர் இந்தியாவின் கொல்கத்தா கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினார். பிறகு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களை சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

முன்னாள் குடியரசுத் தலைவருடனான அந்த சந்திப்புதான் சந்தோஷின் தொழில்முனைவுப் பயணத்திற்கு வித்திட்டது. வெறும் எட்டு மாடுகளுடன் பால் பண்ணை ஒன்றை துவங்கினார்.  2014-ம் ஆண்டு M’ma பண்ணை துவங்கி குறுகிய காலத்திலேயே அவர் 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெட்பூர் பகுதியில் அதிக வசதியில்லாத குடும்பத்தில் பிறந்தவர் சந்தோஷ். இந்தச் சூழலே அவர் கடுமையாக உழைத்து வெற்றியடைவேண்டும் என உந்துதலளித்தது. அதே சமயம் சமூக நலனில் பங்கேற்கவும் விரும்பினார். ஆகையால் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்காக படிக்கத் துவங்கினார். இறுதியாக அவர் தேர்வுகளுக்கு படிப்பதை நிறுத்திவிட்டு பன்னாட்டு நிறுவனங்களில் பணியைத் தொடர்ந்தார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் அப்துல் கலாமை சந்தித்தபோது எதிர்பாராத விதமாகவே சமூக நலனில் பங்கெடுப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பால் பண்ணையை உருவாக்கி தொழில்முனைவோர் ஆக உருவெடுப்பதுடன் இளைஞர்களின் வாழ்க்கையில் அர்த்தமுள்ள விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்கிற பாதையை கலாம் சந்தோஷிற்கு காட்டினார்.

ஜார்கண்ட் மாநிலத்தின் நக்சல் தாக்குதலுக்கு உள்ளாகும் பகுதிகளில் ஒன்றான தல்மா என்கிற இடத்தில் 2014-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று சந்தோஷ் M’ma பால் பண்ணையைத் துவங்கியதாக KJ தெரிவிக்கிறது. வாழ்நாளில் அதுவரை சேமித்த பணத்தை பண்ணைக்காக செலவிட்டு எட்டு மாடுகளை வாங்கினார். குறுகிய காலத்திலேயே 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டு ஆர்கானிக் பண்ணையையும் துவங்கினார்.

இதன் மூலம் சமூகத்தின் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு சந்தோஷ் வேலை வாய்ப்புகளை வழங்கினார். அவரது பணி குறித்து ’தி டெலிகிராஃப்’ உடனான உரையாடலில் அவர் தெரிவிக்கையில்,

”இது ஒரு சோதனை முயற்சியாகும். அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளால் புறக்கணிக்கப்பட்ட வேலையில்லாத இளைஞர்களுக்கான நிலையான மாதிரியாக மற்ற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தலாம்.”

சந்தோஷ் முழு நேர தொழில்முனைவோராக இருப்பினும் எழுதுவதற்கும் நேரம் ஒதுக்குகிறார். அவர் ஊக்கமளிக்கும் பேச்சாளரும் ஆவார். இதுவரை இரண்டு புத்தகங்களை வெளியிட்டுள்ளார். ஸ்டார் சிட்டிசன் ஹானர் அவார்ட், ஜார்கண்ட் அரசாங்கத்திடம் இருந்து ‘டாடாஸ் அலங்கார் அவார்ட் யூத் ஐகன் அவார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளையும் தனது பணிக்காகப் பெற்றுள்ளார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL