ஆசிட் வீச்சை வென்ற லஷ்மி: பொருளாதார உதவி அளித்த நடிகர்!  

0

2005 ஆம் ஆண்டு ஆசிட் தாக்குதலுக்கு ஆளான லக்ஷ்மி அகர்வாலின் முகம் நமக்கு பரிச்சயமானதாகவே இருக்கும். அவர் காதலரோடு வாழத் தொடங்கியதையும், அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததையும் கூட நாம் செய்திகளில் கடந்திருப்போம். ஆசிட் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்காக போராடவும் தொடங்கினார் லக்ஷ்மி. ஆனால், மூன்று வருடங்களுக்கு முன்னர், அவர் காதலரிடம் இருந்து பிரிந்தார். அவர் வேலை செய்து கொண்டிருந்த என்.ஜி.ஓவில் இருந்து கிடைத்த வருமானம் கடந்த வருடம் நிறுத்தப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு பேட்டியளித்த லக்ஷ்மி, தன்னுடைய பொருளாதார நிலைமை குறித்து பகிர்ந்திருந்தார். பத்தாவது வரை படித்திருக்கும் லக்ஷ்மி, பயிற்சி பெற்ற அழகு கலை நிபுணரும் கூட. 

Image Courtesy : Koimoi
Image Courtesy : Koimoi

ஆனால், லக்ஷ்மியின் முகத்தை வாடிக்கையாளர்கள் பார்க்க விரும்ப மாட்டார்கள் என அவருக்கு வேலை அளிக்க ப்யூட்டி பார்லர்கள் நிராகரித்திருக்கின்றன. கால் செண்டர்களில் வேலை செய்யலாம் என்றாலும் கூட, கால் செண்டர் நிறுவனர்கள் ‘முகம் இருப்பவர் தான் வேலை செய்ய முடியும்’ என மறுத்திருக்கின்றனர்.

இவற்றுக்கு இடையே தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் சில காலம் வேலை செய்தார் லக்ஷ்மி. அது குறித்து பேசிய அவர், 

“அந்த நிகழ்ச்சி செய்த போது சில எபிசோடுகளுக்கு எனக்கு 38,000 ரூபாய் கொடுத்தார்கள். மற்ற அழகான தொகுப்பாளினிகளை விட்டுவிட்டு என்னை தேர்வு செய்ததில் சந்தோஷமாக இருந்தது. ஆனால், லண்டனில் ரேம்ப் வாக்கில் நடந்ததற்கு எனக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. டில்லியில் இருந்து கூட ரேம்ப் வாக்குகளுக்கு அழைப்பு வந்தபடியே இருக்கிறது. ஆனால், அதில் பேமண்ட் இல்லாத காரணத்தால் நான் ஒத்துக் கொள்வதில்லை. எனக்கு ஒரு குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. எனக்கு நிரந்தரமான வருமானம் இருக்கும் ஒரு வாழ்வாதாரம் தேவை,” என்று தெரிவித்திருந்தார்.

கூடவே, அவர் குடியிருக்கும் வீட்டின் வாடகையும் உயர்த்தப்படப் போவதனால், வேறு வீடும் தேடிக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பாலிவுட் கலைஞர் அக்‌ஷய் குமார் லக்ஷ்மிக்கு உதவ முன் வந்திருக்கிறார். லக்ஷ்மியின் வங்கிக் கணக்கில் ஐந்து லட்சம் ரூபாய் செலுத்தியிருக்கிறார் அக்‌ஷய் குமார். தான் செய்த உதவி குறித்து எல்லாரும் பேசுவது தனக்கு அவமானமாக இருப்பதாகவும் அக்‌ஷய் குமார் சொல்லியிருக்கிறார்.

“நான் செய்த உதவி மிகச் சிறியது. அதைச் சொல்லிக் காட்டுவதே அவமானமாக இருக்கிறது. லக்ஷ்மி சுய மரியாதையோடு ஒரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும், வீட்டுக்கு வாடகை கொடுக்க வேண்டியதை பற்றி கவலைப்படாமல், தன்னுடைய குழந்தைக்கு சத்தான உணவு கொடுப்பதை பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும். மனிதர்களுக்கு ஒரு வாழ்வாதாரம் மிக அவசியம் என்பதையும், பதக்கங்கள், சர்ட்டிஃபிக்கேட்டுகள் எல்லாம் வாழ்க்கைக்கு உதவாது என்பதையும் மனிதர்கள் புரிந்து கொண்டால் நன்றாக இருக்கும்,” என்று கூறியிருக்கிறார்.

2.0 மற்றும் கேசரி (பாலிவுட் வரலாற்றுப்படம்) ஆகியவற்றின் ப்ரொமோஷம் வேலைகளில் இருக்கும் அக்‌ஷய் குமாரின் இந்த உதவி நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது. 

Related Stories

Stories by YS TEAM TAMIL