ஸ்டீபன் ஹாக்கிங்கின் மறக்க முடியாத மேற்கோள்கள்...

1

வாழ்க்கை முன்வைத்த சோதனைகளை எல்லாம் வெற்றிகரமாக எதிர்கொண்டு சாதனை மனிதராக வாழ்ந்து மறைந்திருக்கிறார் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங். 21 வயதில் ஏ.எஸ்.எல் எனும் உடலியக்கத்தை முடக்கக் கூடிய கொடிய நோயால் பாதிக்கப்பட்டும், விடா முயற்சியுடன் வாழ்க்கையை தொடர்ந்தவர் காஸ்மாலஜி தொடர்பான ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். அவர் எழுதிய காலத்தின் சுருக்கமான அறிமுகம் புத்தகம் அறிவியல் வாசகர்களால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது. டாக்டர்கள் அவர் இரண்டு ஆண்டுகளே வாழ்வார் என கூறியதை மீறி அவர் 76 வயது வரை வாழ்ந்திருக்கிறார்.

”சக்கர நாற்காலி துணையுடன் நடமாட வேண்டிய நிலை மற்றும், மென்பொருள் உதவியுடனே பேச முடியும் என்ற வரம்புகளை எல்லாம் மீறி அவர் இயற்பியல் ஆய்வை தொடர்ந்தார். அவரது ஊக்கம் தரும் வாழ்க்கை, தி தியரி ஆப் எவ்ரிதிங் எனும் பெயரில் திரைப்படமாக வந்திருக்கிறது.

ஹாக்கிங் அறிவியல் மற்றும் மன உறுதி ஆகியவற்றுடன் அவரது நகைச்சுவை உணர்வும் மறக்க முடியாததாக அமைகிறது. மறைந்த மேதையை அவரது ரசிக்க வைக்கும் மேற்கோள்கள் மூலம் நினைவு கூறுவோம்:

வாழ்க்கையே முக்கியம்

1942-ல் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டில் பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், இளம் வயதில் ஏ.எஸ்.எல் நோயால் பாதிக்கப்பட்ட போது அவருள் வாழ்க்கைக்கான புதிய அர்த்தத்தை உண்டாக்கியது. 2015-ல் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், 75 வயது வரை வாழ்வேன் என நினத்துக்கூட பார்க்கவில்லை என்றும், தன் வாழ்க்கை பற்றி தானே நினைத்துப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம் என்றும் கூறினார்.

“நீங்கள் நேசிப்பவர்களுக்கான இல்லமாக இருக்காவிட்டால், இந்த பிரபஞ்சத்தில் பெரிதாக எதுவும் இருக்காது.”
“என் எதிர்காலம் மீது ஒரு மேகம் தொங்கிக் கொண்டிருந்தாலும், ஆச்சர்யப்படும் வகையில் முன்பை விட வாழ்க்கையை நான் அதிகம் அனுபவிக்கிறேன். எனது ஆய்விலும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.”
“எனது இலக்கு எளிமையானது பிரபஞ்சம் ஏன் அது இருக்கும் வகையில் இருக்கிறது, அது ஏன் தோன்றியது என்பது உள்பட பிரபஞ்சம் தொடர்பான அனைத்தையும் அறிந்து கொள்வது.”

ஊக்கமே உத்வேகம்

வாழ்க்கை போராட்டமாக இருந்தாலும் ஹாக்கிங் உடல் குறைபாடு, தனது கனவை நோக்கி கடினமாக உழைக்கத் தடையாக இருக்க அனுமதிக்கவில்லை. அறிவியல் ஆய்வில் அவர் கொண்டிருந்த ஈடுபாடு மற்றும் விடா முயற்சி, எத்தனை சோதனைகள் வந்தாலும் நம்பிக்கையுடன் நம்முடைய இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்பதை அவரது வாழ்க்கை உணர்த்துகிறது.

“அறிவியல் என்பது காரண காரியங்களை ஆராயும் துறை மட்டும் அல்ல, ஈடுபாடு மற்றும் காதலும் நிறைந்தது.”

“இயற்பியல் மற்றும் கணிதம் அகியவை பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பதை நமக்கு புரிய வைத்தாலும், மனித பழக்க வழக்கங்களை புரிந்து கொள்ள அவை உதவுவதில்லை, ஏனெனில் இவற்றில் தீர்க்க வேண்டிய கேள்விகள் அதிகம் உள்ளன. மனிதர்களை , குறிப்பாக மற்றவர்களை புரிந்து கொள்வதில் நான் மற்றவர்களை விட சிறந்து விளங்கவில்லை.”

“நாமெல்லாம், ஒரு சராசரி நட்சத்திரத்தின் சிறிய கோளின் மேம்பட்ட குரங்கு இனமே. ஆனால் நம்மால் பிரபஞ்சத்தை புரிந்து கொள்ள முடியும். அது தான் நம்மை விஷேசமானவர்களாக ஆக்குக்கிறது.”

நகைச்சுவையே மகிழ்ச்சியின் திறவுகோள்

வாழ்க்கை போராட்டங்களுக்கு மத்தியில் ஹாக்கிங்குடன் நகைச்சுவை எப்போதுமே அவருடன் துணையாக இருந்தது. ஆர்வம் மிக்க மனிதரான ஹாக்கிங், கடிகாரம் எப்படி செயல்படுகிறது என பார்க்கும் ஆர்வத்துடன் அவற்றை மீண்டும் சேர்க்கத்தெரியாது என்றாலும் கூட, உள்ளே இருக்கும் பொருட்களை தனித்தனியே பிரித்துப்போடுவார்.

“இதை காமத்துடன் ஒப்பிடுவேன். ஆனால் இன்னும் நீடித்து இருப்பது. (அறிவியல் கண்டுபிடிப்புகள் பற்றிய கருத்து).

“பிரபலமாக இருப்பதன் பாதிப்பு என்னவெனில், யாராலும் கண்டறியப்படாமல் எங்கும் செல்ல முடியாது என்பது தான். குளிர் கண்ணாடி மற்றும் விக் அணிந்திருந்தால் மட்டும் போதாது. எப்படியும் சக்கர நாற்காலி காட்டிக்கொடுத்து விடும்.”

வர்கம், பாலின வேறுபாடு, பின்னணி எல்லாவற்றையும் மீறி ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சமமான எதிர்காலம் இருப்பதாக ஹாக்கிங் தொடர்ந்து நம்பிக்கை கொண்டிருந்தார். பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவை விவாதிக்கப்படும் சூழலில் ஹாக்கிங்கின் கருத்துக்கள் அர்த்தமுள்ளவையாக இருக்கும்.-

ஆங்கிலத்தில்: ஸ்ருதி மோகன், தமிழில்: சைபர்சிம்மன்