43 வயதில் ஐஐஎம் டிகிரி பெற்று மகளுடன் நிறுவனம் தொடங்கி வெற்றிகரமாக நடத்தும் தாய்!

0

கனன் ஷா பல கனவுகளுடன், குறிக்கோளுடன் வளர்ந்தார். தான் அடைய நினைத்த இலக்கிற்காக கடுமையாக உழைத்தார். ஆனால் அவர் காதல் வயப்பட்டபோது எல்லாம் மாறிப்போனது. இருவரின் குடும்பத்தினரும் திருமணத்துக்கு தடையாக இருந்தனர். வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் கடும் எதிர்ப்பு நிலவியது. 23 வயதான கனனின் கணவரின் ஆதரவில் தான் வாழத்தொடங்கினார். இது நடந்து 30 ஆண்டுகள் ஆகிறது. 

கனனில் கணவரும் ஒரு பழமைவாத பின்னணியைச் சேர்ந்தவர் என்பதால், அவரை வேலைக்கு செல்லவோ, விரும்பிய உடையை அணியவோ ஒப்புக்கொண்டதில்லை. 16 மணி நேரம் கனனின் கணவர் வேலை செய்தும், நான்கு பேர் அடங்கிய அவர்களின் குடும்பத்துக்கு வருமானம் போதவில்லை. அதனால் கனன், சட்டத்தில் டிகிரி முடித்துவிட்டு, சிஏ படிக்க ஆர்டிகல்ஷிபிற்கு சேர்ந்தார். ஆனால் அவரை அதற்கு செல்ல கணவர் அனுமதிக்கவில்லை. இது பற்றி ஹுமன்ஸ் ஆப் பாம்பே பேட்டியில் பேசிய கனன்,

”நான் இத்தனை ஆண்டுகள் பொறியில் மாட்டிக்கொண்டது போல உணர்ந்தேன். எனக்கு கனவுகள் இருந்தது. என் குழந்தைகளுக்கு நல்ல வாழ்க்கை தர விரும்பினேன். வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதி கிடைக்காததால், வீட்டில் ட்யூஷன் எடுத்தேன். ஆனால் அதில் எனக்கு ஈடுபாடில்லை. என்ன செய்வதென்று யோசித்தபோது, பயணத்தின் மீது கொண்டிருந்த காதல் எனக்கு விடை அளித்தது,” என்றார். 

பயணம் பற்றி நல்ல புரிதலும், ஆர்வமும் இருந்தாலும், அதை எப்படி ஒரு வேலையாக செய்வது என்று கனனுக்கு தெரியவில்லை. அருகாமை ட்ராவல் ஏஜென்சிகளுக்கு சென்று தொழில் பற்றி தெரிந்து கொண்டார். ஒரு ஃபேக்ஸ் மெஷினை வாங்கி வீட்டிலேயே ஒரு சப்-ஏஜெண்ட் வேலையை தொடங்கினார். 

நண்பர்கள் மற்றும் உறவினர்களை வாடிக்கையாளர்களாக கொண்டு தொடங்கி, மெல்ல பல புதியவர்களையும் பெற்றார் கனன். 2003-ம் ஆண்டு பயணம் சம்மந்தமாக ஒரு கோர்ஸ் முடித்துவிட்டு தன் தொழிலை விரிவாக்கம் செய்தார். 

எப்படியோ தன் கணவரை சம்மதிக்கவைத்து, செம்பூரில் அவருக்கு இருந்த இடத்தில் அலுவலகம் தொடங்கினார். கணவரின் இடமாக இருந்தும் அதற்கு வாடகை அளித்து தனியாக இந்த தொழிலை நடத்தினார்.

2009-ல் 43 வயதான கனன், ஐஐஎம் பெங்களுருவில் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்து மேலாண்மையை படித்து தன் நிறுவனத்தை புதுபித்தார். பெங்களுருவிற்கும் மும்பைக்கும் பயணித்து, கடும் பணிக்கு நடுவில் பட்டத்தையும் பெற்றார். 

Travel n Living என்ற நிறுவனத்தை தன் மகள்களுடன் வெற்றிகரமாக நடத்துகிறார். இதுவரை 60 நாடுகளுக்கு பயணித்துள்ளார் கனன். 

வீட்டைவிட்டே வெளியே போகமுடியாமல் இருந்து ஒரு பெண்மணி, தன்னுள் கொண்டிருந்த ஆர்வத்தால் குடும்பம், கணவரை சமாளித்து, தன் கனவை மெய்பித்ததற்கு நிச்சயம் இவரை பாராட்டவேண்டும். 

கட்டுரை: Think Change India


Related Stories

Stories by YS TEAM TAMIL