பழைய பேப்பர் கொடுத்தால் புத்தகம் கிடைக்கும்!

0

அவரிடம் நீங்கள் பழைய பேப்பரைக் கொடுங்கள். அதற்கு பண்டமாற்றாக அவர் உங்களுக்கு புத்தகங்களைத் தருவார். இது நம்ப முடியாததுதான். ஆனால் உண்மை. 2014 மார்ச் 24ல்தான் ‘யூஸ்டு டு யூஸ்ஃபுல் (Used2Useful)’ ஆரம்பிக்கப்பட்டது. இதில் நீங்கள் பழைய பேப்பர்களைக் கொடுத்து விட்டு, அவர்கள் நூலகத்தில் உள்ள புத்தகங்களை (அது ஆன்லைனிலோ ஆஃப் லைனிலோ) பெற்றுக் கொள்ளலாம். இது சமூகத்தில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் படிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்கு ‘யூஸ்டு டு யூஸ்ஃபுல்’ மேற்கொண்டுள்ள ஒரு முன் முயற்சி. உங்களுக்கு ஒரு புத்தகத்தைப் பிடித்திருந்து, அது அவர்களது நூலகத்தில் இல்லாத பட்சத்தில், நீங்கள் அந்தப் புத்தகத்திற்காக வேண்டுகோள் வைக்கலாம். அவர்கள் எப்படியாவது அந்தப் புத்தகத்தை வாங்கி உங்களிடம் சேர்க்க முயற்சிப்பார்கள்.

காகிதங்களை மறு சுழற்சி செய்வதன் மூலம் மக்களிடம் கல்வி அறிவை வளர்ப்பதுதான் க்ரீஷ் ரெட்டியின் கனவு.
காகிதங்களை மறு சுழற்சி செய்வதன் மூலம் மக்களிடம் கல்வி அறிவை வளர்ப்பதுதான் க்ரீஷ் ரெட்டியின் கனவு.

சாதாரண நகரத்தில் இருந்து பெருநகரம் நோக்கிய பயணம்

‘யூஸ்டு டு யூஸ்ஃபுல்’ இணையதளத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் க்ரீஷ் ரெட்டி, ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரத்தில் பிறந்தார். பெரிய நகரங்களின் வெளிச்சம் படாத ஒரு எளிய மனிதர் அவர். நகரங்களின் தேவைக்காக காடுகள் அழிக்கப்படுவது, இலக்கியங்களின் மீது மக்களுக்குக் குறைந்து வரும் ஆர்வம் ஆகியவை பற்றி யோசித்தார். ஒருபுறம் காகிதங்களின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வர, மற்றொரு புறம் காகிதங்களின் பிரதான மூலப் பொருளான மரங்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. நடப்படும் மரங்களின் எண்ணிக்கைக்கும் பயன்படுத்தப்படும் காகிதக் குவியலுக்கும் இடையே உள்ள ஏற்றத் தாழ்வு பற்றி அவர் சிந்தித்தார். படிக்கும் பழக்கத்தை அதிகரிப்பது, அதே சமயத்தில் காகிதப் பயன்பாட்டைக் குறைப்பது இந்த இரண்டையும் சாதிக்க ஒரே வழிமுறை ஒன்றைக் கண்டறிய விரும்பினார். அப்போது உதித்ததுதான் காகிதங்களை மறு சுழற்சி செய்யும் யோசனை. “மறு சுழற்சி பற்றிய விழிப்புணர்வெல்லாம் இல்லாத ஒரு பகுதியில் இருந்து வந்தவன் நான். எனது சகோதரியின் பழைய புத்தகங்கள் 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடந்தன. அதை வைத்துக் கொண்டு என்ன செய்வதென்று எங்களுக்குத் தெரியவில்லை”.

அச்சமூட்டும் புள்ளி விபரம்

இந்தப் புதிருக்கு ஒரு நாள் விடை கண்டுபிடித்தார் க்ரீஷ். “இந்தியா ஆண்டொன்றுக்கு 1 கோடியே 30 லட்சம டன் காகிதத்தை உற்பத்தி செய்கிறது. ஆனால் அதில் 26 சதவீதம் மட்டுமே மறு சுழற்சி செய்யப்படுகிறது (வளர்ச்சியடைந்த நாடுகளை ஒப்பிடும் போது, இது மிக மிகக் குறைவு). ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து 3 ஆயிரத்து 750 கோடி மதிப்பிலான 46 லட்சம் டன் காகிதத்தை மறு சுழற்சிக்காக இந்தியா இறக்குமதி செய்கிறது.” என்று ஒரு விரிவான புள்ளி விபரத்தை விவரிக்கிறார் க்ரீஷ்.

2025ல் நமது காகித நுகர்வு 2 கோடியே 60 லட்சமாக இருக்கும். இதை அப்படியே வேறு மாதிரியாகச் சொன்னால், அது வெட்டப்பட்ட 30 கோடி மரங்கள் மற்றும் 10 ஆயிரம் கோடி கேலன் தண்ணீர் பயன்படுத்தியதற்கு சமம். 2025ல் இந்தியா தண்ணீர் பஞ்சம் உடைய ஒரு நாடாக மாறும் என்று கருதப்படுகிறது. அப்படி மாறுவதற்கு மனிதக் காரணிகள்தான் பெரும்பாலும் இருக்கும். மறுசுழற்சி பற்றி சமூகத்தில் பிரச்சாரம் செய்வது மற்றும் இளம் வயதிலேயே அது பற்றிக் கற்றுக் கொடுப்பதன் மூலம் நாம் மேலே சொன்ன மனிதக் காரணிகளை ஓரளவு தடுக்கலாம்.

மறுசுழற்சி மற்றும் படிக்கும் பழக்கத்தை அதிகரித்தல்

நமது பரபரப்பான வாழ்க்கையில், மரம் நட வேண்டும் என்றே நாம் விரும்பினாலும், நகரத்தில் அதை எங்கே நடுவது? எப்படி அந்த மரங்களைப் பார்த்துக் கொள்வது? பராமரிப்பது? மரம் நட யாரிடம் என்ன மாதிரியான அனுமதியைப் பெற வேண்டும் என லட்சக்கணக்கான பிரம்மப்பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. எனினும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை. உங்களால் மரம் நட முடியாவிட்டால், குறைந்த பட்சம் மறு சுழற்சிக்கு காகிதங்களையாவது சேகரியுங்கள்.

நிறையப் படியுங்கள், நிறைய மறு சுழற்சி செய்யுங்கள் என்பதுதான் ‘யூஸ்டு டு யூஸ்ஃபுல்’ சேவையின் நோக்கம். பள்ளிகளிலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் சென்று மறு சுழற்சி பற்றிப் பிரச்சாரம் செய்து, காகிதங்களை சேகரிக்கிறார் க்ரீஷ். அதோடு அவர் நிறுத்தியிருக்கலாம். ஆனால் படிக்கும் பழக்கத்தை சமூகத்தில் அதிகரிக்க வேண்டும் என விரும்பினார். சமூகத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க அவர் பழைய பேப்பருக்கு புத்தகம் என்ற பண்டமாற்று முறையை உருவாக்கினார். கிரிஷ் அடிக்கடி அரசுப் பள்ளிகளுக்குச் சென்று அங்கு மாணவர்கள் மத்தியில் மறு சுழற்சியின் முக்கியத்துவம் பற்றி பிரச்சாரம் செய்கிறார். “எங்கள் வாடிக்கையாளர் மத்தியில் படிக்கும் பழக்கத்தைப் பரவலாக்குகிறோம்.” என்கிறார் க்ரீஷ் ரெட்டி. “அவர்களுக்கு புதிய புத்தகங்களைத் தருகிறோம். எங்களிடம் வரும் பழைய பேப்பர்களின் மதிப்பை எடை பார்த்து, கணக்கிடுகிறோம்.” என்கிறார் அவர். நாங்கள் சேகரிக்கும் பழைய பேப்பர்கள் அருகே உள்ள மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பப்படுகின்றன. ஒரு டன் காகிதங்கள் மறுசுழற்சிக்கு சென்றால், 17 மரங்களைப் பாதுகாத்து விட்டோம் என்று அர்த்தம். 7 ஆயிரம் கேலன் தண்ணீரை சேமித்து விட்டோம் என்று பொருள். மரபு சார் மற்றும் மரபுசாரா மின் உற்பத்திக்கான வளங்களைப் பாதுகாக்கிறோம் என்று அர்த்தம்.

‘யூஸ்டு டு யூஸ்ஃபுல்’ நூலகத்தில் நாவல்கள், தன்னம்பிக்கை புத்தகங்கள், கல்வி சம்பந்தப்பட்டவை, வணிகம் சம்பந்தப்பட்டவை என பல்வேறு வகையான புத்தகங்கள் உள்ளன. ஆங்கிலம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் இங்கு புத்தகங்கள் உண்டு. புத்தகங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வீட்டிற்கே சென்று கொடுக்கப்படுகின்றன. என்னென்ன புத்தகங்கள் நூலகத்தில் இருக்கின்றன என்பதை வாடிக்கையாளர்கள் ‘யூஸ்டு டு யூஸ்ஃபுல்’ இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர் விரும்பும் புத்தகம் ஒருவேளை நூலகத்தில் இல்லாதிருக்கும் பட்சத்தில், யூஸ்டு டு யூஸ்ஃபுல் இணையதளத்தில் அதற்கென ஒரு படிவம் இருக்கிறது. அதில் புத்தகத்தின் தலைப்பு உள்ளிட்ட விபரங்களைப் பூர்த்தி செய்து கொடுக்கலாம். மறு சுழற்சி செய்யும் காகிதங்களின் அளவை அதிகரிப்பது, அதிக மரங்களை நடுவது மற்றும் தனது கிளைகளை விரிவு படுத்தி அதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுதான் ‘யூஸ்டு டு யூஸ்ஃபுல்’ சேவையின் இறுதி இலக்கு.

நூலகத்தை விரிவு படுத்த…

நூலகம் செயல்பட ஆரம்பிக்கும் பொழுது, யார் வேண்டுமானாலும் பழைய பேப்பர்களுக்கு பதிலாக புத்தகங்களைப் பெற முடியும். இந்த முயற்சிக்கு பணம் தேவைப்படுகிறது. 'மில்லாப்' (ஒரு நன்கொடை திரட்டும் அமைப்பு) எனும் அமைப்பு மூலம் தனது பிரச்சாரத்தைக் கொண்டு சென்று நன்கொடை திரட்டிக் கொண்டிருக்கிறார் கிரிஷ். இந்த நிதியைக் கொண்டு கல்வி மற்றும் இலக்கியம் தொடர்பான மேலும் அதிகமான புத்தகங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளார். பிரச்சாரத்திற்கு வாகனம் ஒன்றையும் புத்தகங்களை வீடுகளில் இலவசமாய் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கு இரு சக்கர வாகனங்களும் வாங்க வேண்டும் என்றும் கிரிஷ் திட்டமிட்டுள்ளார்.

இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் காஸ்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இண்டியா(Institute of Cost Accountants of India -ICWA)வில் பட்டம் பெற்று, கணக்கியல் உதவியாளராக (accounts assistant) வேலை பார்த்துவிட்டு, கடைசியாக ‘யூஸ்புல் டு யூஸ்ஃபுல்’ சேவையைத் தொடங்கியிருக்கிறார் க்ரிஷ். இது பற்றி அவரிடம் பேசும் போது, சாதித்து விட்ட மனநிறைவு ஒன்று அவரது பேச்சில் தென்படுவதைப் பார்க்க முடிகிறது.

“நான் எத்தனையோ வேலை பார்த்து விட்டேன். எத்தனையோ தொழில் செய்தாகி விட்டது. ஆனால் இப்போது நான் செய்யும் தொழிலில் கிடைக்கும் மன நிறைவு வேறு எதிலுமே எனக்குக் கிடைத்ததில்லை. எங்கள் பணியின் மூலம் நாங்கள் ஒரு சதவீதமேனும் மறுசுழற்சி செய்யப்படும் காகிதங்களின் அளவை அதிகரித்து விட்டால், அதுவே எங்களுக்கு கிடைத்த வெற்றிதான்.” என்கிறார் க்ரிஷ்.

இணையதள முகவரி: http://used2useful.in/