'தரமே' தாரக மந்திரம்: 'கேட் சென்ட்டர்' வெற்றிப் பயணம்!

1

சென்னையில் தொடங்கி உலக அளவில் தங்களை நிலைநாட்டியுள்ள பிராண்டின் நிலையான பயணக் கதை !

சென்னையில் தொடக்கப்பட்டு வெற்றிகரமான, பிரபலமான பிராண்டாக தங்களை நிலைப்படுத்தியுள்ள நிறுவனங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இதில் குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்துள்ளது "கேட் சென்ட்டர்" (CADD Centre).

நிறுவிக்கப்பட்டு இருபத்தி ஆறு வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் தொழில்நுட்பப் பயிற்சி என்றால் முதலில் நினைவுக்கு வரும் 'கேட் சென்ட்டரி'ன் தலைமை அதிகாரி திரு.காரையடி செல்வன் அவர்களிடம் வெற்றியின் ரகசியம் குறித்து தமிழ் யுவர்ஸ்டோரி பிரத்யேக நேர்காணல் நடத்தியது.

"சவால்களை சந்திக்கும் திறனும் புதுமைகளை புகுத்தும் செயலும் இருந்தால் எதிர்காலம் உங்கள் வசப்படும்" என்கிறார் தன்னம்பிக்கையின் உருவான செல்வன்.

இவரின் ஒவ்வொரு வார்த்தையிலும் தன்னம்பிக்கை மிளிருவதை காண முடிகிறது. முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் பற்றி இரண்டு புத்தகங்கள் தமிழில் எழுதியுள்ள செல்வன் தனது மூன்றாவது புத்தகத்தை ஆங்கிலத்தில் வெளியிட உள்ளார். எந்தச் சூழலிலும், நிலை நிறுத்திக் கொள்வதை பற்றியும் சூழலுக்கேற்ப வடிவமைத்து கொண்டு வெற்றி பெறுவதை பற்றியும் 'காக்ரோச்' (cockroach) என்ற தலைப்பில் புத்தகத்தை எழுதியுள்ளார்.

வளர்ச்சி

மூன்று கிளைகளுடன் செயல்பட்டுக் கொண்டிருந்த கேட் சென்ட்டர் நிறுவனம் வளர்ச்சி பாதையில் செல்ல பிரான்சைஸ் (franchise)முறையை தேர்ந்தெடுத்தது. "நிறுவனத்தின் தலைவரிடம் விரிவாக்கம் குறித்து பேசுகையில் பிரான்சைஸ் முறையை அமல்படுத்தலாம் என்று கூறினேன். அதை அமல்படுத்தும் பொறுப்பை என்னிடமே ஒப்படைத்தார். மூன்று வருடங்களே இந்நிறுவனத்தில் இயங்கி வந்த தருணத்தில் இது எனக்கு தரப்பட்ட பெரும் பொறுப்பு" என்கிறார் செல்வன்.

1995 ஆம் ஆண்டு தனது முதல் பிரான்சைஸ் சென்ட்டரை கோயம்புத்தூர் நகரத்தில் தொடங்கியது கேட்.

"20 வருடம் முன்பு பிரான்சைஸ் வழியான பயணத்தை தொடங்கினோம், எங்களுடைய முதல் பிரான்சைஸ் பார்ட்னர் இன்றும் எங்களுடன் தொடர்கிறார் என்பது எங்கள் மீதான நம்பிக்கையை அங்கீகரிப்பதாகவே நினைக்கிறன்" என்கிறார் செல்வன்.

தற்பொழுது 650 சென்ட்டர்களுடன் 24 தேசங்களில் கேட் சென்ட்டர் கால் பதித்துள்ளது. 2000 ஆம் ஆண்டு இலங்கையில் துவங்கிய சென்ட்டர் இவர்களது முதல் சர்வதேச விரிவாக்கம்.

தரம் ஒன்றே வளர்ச்சிக்கு வழி

பொதுவாக பிரான்சைஸ் மூலம் வளரும் நிறுவனங்கள் ஏதோ ஒரு கட்டத்தில் சேவையின் தரத்தில் சமரசம் செய்து கொள்வதை நாம் கண்டிருப்போம். "சமரசம் செய்துக்கொள்ளாமல் தரத்தை மேம்படுத்துவதில் சிரத்தை கொள்கிறோம். எங்களின் பயிற்சிப் புத்தகங்கள், பயிற்சி விநியோக முறை, ஆசிரியர்கள் என எல்லாமும் தரமாக இருக்க மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்" என்கிறார் செல்வன்.

"எங்களுடைய பிரான்சைஸ் மாடல் மூலம், சந்தைக்கு எடுத்துச்செல்லுதலில் அவர்களின் கவனம் இருக்கும்படி மட்டுமே பார்த்துக் கொண்டோம். மேலும், தரம் என்ற ஒன்றை மட்டுமே தலைமை வலியுறுத்தும் பட்சத்தில் இதில் என்றுமே சமரசம் இருக்க வாய்ப்பில்லை" என்கிறார்.

"தரம் என்ற ஒரு காரணமே எங்களை அந்நிய நாட்டில் வெற்றியுடன் செயல்பட வைக்கிறது. பிப்ரவரி 2015 ஆம் ஆண்டு ப்ளோரிடா மாகாணத்தில் கால் பதித்தோம். அமெரிக்காவில் அவர்களின் மென்பொருளுக்கு பயிற்சி அளிக்கும் ஒரே இந்திய நிறுவனம் நாங்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என்றும் கூறுகிறார். 

அமெரிக்காவில் கால் பதித்தது மூலம் ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் எங்களின் சேவையை ஆரம்பிப்பதே எங்களின் அடுத்த இலக்கு.

தொழிமுனைவர்களை உருவாக்கிய பெருமை

தொழில்முனை முயற்சிகள் பற்றி அதிகம் இப்பொழுது பேசப்பட்டாலும், பல வருடங்களுக்கு முன்பே முதல் தலைமுறை தொழில்முனைவர்களை உருவாக்கிய பெருமை இந்நிறுவனத்தை சாரும். இது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில்முனைவர்களையும், நிறுவனதிற்குள்ளாகவே அத்தகைய சூழலையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளனர்.

"நான் இந்நிறுவனத்தில் ஒரு மாணவனாக சேர்ந்து, பின்பு பயிற்சியாளராக உயர்ந்து, எனக்களிக்கப்பட்ட வாய்ப்பின் காரணமாக இன்று இந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி என்ற பொறுப்பை அடைந்துள்ளேன். அதேப் போல் எல்லோருக்கும் முடிந்த அளவு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்கிறார்.

கேட் சென்ட்டர், பத்து விதமான சேவைகளை தற்பொழுது அளிக்கும் காரணமும் இது தான். தக்க வைக்கும் வளர்ச்சியும் அதே சமயம் புதிய யோசனையை முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பும் இருக்கும் பட்சத்தில் ஊழியர்கள் கொண்டு வரும் சிந்தனைகளை, வர்த்தக நோக்கில் கொண்டு செல்லும் செயலை வரவேற்கிறார்கள்.

2020 ஆம் ஆண்டு பிரான்சைஸ் முறை வர்த்தகத்தில் வெள்ளி விழா காணப்போகும் இந்நிறுவனம் அதற்குள்ளாக ஐம்பது நாடுகள், ஆயிரம் சென்ட்டர்கள், பத்தாயிரம் ஊழியர்கள், 650 கோடி என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கிறது.

"வெற்றி பெற வேண்டுமானால் நமது பழக்கங்களை மாறுதலுக்கு உட்படுத்துவது இன்றியமையாதது." என்பதை வலியுறுத்தும் செல்வன், இளம் தலைமுறை தொழில்முனைவர்களுக்கு சொல்லும் சில குறிப்புகள்...

1. ஒரு யோசனையை முனைப்புடன் மேற்கொள்ள, நீங்கள் பல ஐடியாக்களை அலசியிருக்க வேண்டும்.
2. ஆழமான புரிதலும் நுணுக்கமாக சிந்திப்பதுமே சிறப்பை தரும்.
3. நீண்ட கால சிந்தனையுடன் செயல்படுவது அவசியம்.
4. பல தரப்பட்ட திறமை படைத்த முழுமையான குழுவே வெற்றிக்கு வித்திடும்.
5. சிறந்த வழிகாட்டியை தேர்ந்தெடுப்பது அவசியம். 

"இலக்குகள் என்பது காலக்கெடுவுடன் உள்ள கனவுகள்" என்பது அவர் பரிந்துரைப்பது மட்டுமல்ல பின்பற்றுவதும் கூட...