பீடா கறைகளை நீக்கும் சிக்கலுக்கு தீர்வு கண்ட மும்பை மாணவிகள்!

இந்த கண்டுபிடிப்பிற்காக விருது வென்றுள்ளனர் எட்டு மாணவிகள் அடங்கிய குழு!

0

பல இந்தியர்களிடையே இருக்கும் பீடா போடும் பழக்கமானது சுகாதாரத்திற்கு தீங்கு விளைவிப்பதுடன் பொது இடங்களையும் அசுத்தமாக்குகிறது. வரலாற்று நினைவுச்சின்னம், புதிதாக திறக்கப்படும் பொது கட்டமைப்பு என பீடாவினால் ஏற்படும் சிகப்பு வண்ணக்கறையிலிருந்து எதுவும் தப்புவதில்லை.

பீடா கறைகள் பொது இடங்களின் அழகைக் கெடுப்பதுடன் H1N1 வைரஸ் மற்றம் பிற தீங்கு விளைவிக்கும் நோய் தொற்றுகள் உருவாகவும் வழிவகுக்கிறது.

இவ்வாறு பொது இடங்களை அசுத்தமாக்கும் நடவடிக்கைகளை எதிர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மும்பையைச் சேர்ந்த எட்டு மாணவிகள் அடங்கிய ஒரு குழு. இவர்கள் பொது இடங்களில் இருக்கும் வெற்றிலை அல்லது பீடா கறைகளை நீக்குவதற்கு இவர்கள் உருவாக்கிய விலை மலிவான சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிமுறையானது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளது. பெண்கள் மட்டுமே அடங்கிய இக்குழு அமெரிக்காவின் பாஸ்டனில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் விருதினை வென்றுள்ளது.

சுமார் 300 போட்டியாளர்களுடன் போட்டியிட்ட இக்குழு பாஸ்டனில் ‘மரபணு பொறியியல் கொண்டு உருவாக்கப்படும் இயந்திரங்கள் (Genetically Engineered Machines) 2018’-ல் சமூக அக்கறையுடன்கூடிய சிறந்த ஒருங்கிணைக்கப்பட்ட மனித இனத்தின் நடவடிக்கைகளுக்கான சிறப்பு விருதினையும் வென்றுள்ளது.

இந்நிகழ்வில் பங்கேற்ற இவர்களது புதுமையான தயாரிப்பு பயோடெக்னாலஜி துறையிடம் இருந்து 10 லட்ச ரூபாய் உதவித்தொகையையும் குழுவிற்கு பெற்றுத் தந்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜூர்கர், அஞ்சலி வைத்யா, கோமல் பாரப், மைதிலி சவந்த், மிதாலி பாடீல், நிஷ்தா பாங்கே, சனிகா ஆம்ப்ரே, ஷ்ருதிகா சவாந்த் ஆகியோர் மும்பை ராம்நாராயண் ருயா கல்லூரி மாணவிகள்.

நகரின் கட்டமைப்பு மற்றும் புறநகர் ரயில்களில் இருந்து கறைகளை நீக்குவதற்கான முயற்சியில் இக்குழுவினர் வெவ்வேறு பீடா கடை உரிமையாளர்களையும் கறைகளை அன்றாடம் சுத்தம் செய்யும் பணியில் ஈட்பட்டுள்ளவர்களையும் சந்தித்தனர்.

’தி பெட்டர் இண்டியா’ உடனான உரையாடலில் நிஷ்தா குறிப்பிடுகையில்,

”ஒரு நுண்ணுயிர் ஒரு குறிப்பிட்ட என்சைமை உருவாக்குவதற்காக மரபணு மாற்றம் செய்தோம். இந்த என்சைம் பீடா கறைகளை நீக்கக்கூடியது. ஆனால் மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிர்கள் (GMO) வெளியாவது சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பற்றது என்பதாலும் பல்வேறு அரசு கட்டுப்பாடுகள் இருப்பதாலும் துறை சார்ந்த பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு ‘என்சைம் சார்ந்த அப்ளிகேஷன் சிஸ்டமை’ உருவாக்க தீர்மானித்தோம். இது கறைகளை திறம்பட நீக்கக்கூடியதாகும்,” என்றார்.

இவர்களது கணக்கெடுப்பின்போது ரயில்கள் மற்றும் கார் ஷெட்களை சுத்தம் செய்ய தினமும் 60,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. சுருக்கமாகச் சொல்வதானால் மும்பையில் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கோடிக்கணக்கான ரூபாயை மத்திய ரயில்வே செலவிடுகிறது என ’தி லாஜிக்கல் இண்டியன்’ தெரிவிக்கிறது. 

இந்த புதுமையான தயாரிப்பு குறைவான தண்ணீரைப் பயன்படுத்துவடன் ரயில்வே அதிகாரிகளின் பணியையும் எளிதாக்குகிறது.

இவர்கள் படித்த கல்லூரியின் பேராசிரியர்களான அனுஸ்ரீ லோகுர், மயூரி ரெஜி, சச்சின் ராஜகோபாலன், முக்தா குல்கர்னி ஆகியோரால் தொடர்ந்து வழிநடத்தப்பட்டதாக இக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA