மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டில் பங்கு வகித்ததற்கு தேசிய விருது பெற்றுள்ள சென்னை மருத்துவர்!

0

சென்னையைச் சேர்ந்த மருத்துவரான டி எஸ் சந்திரசேகர் கடந்த 15 ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக உழைத்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிக்கும் செயல்களில் ஈடுபட்டதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இவருக்கு சமீபத்தில் தேசிய விருதை வழங்கினார். 

சென்னையில் இருக்கும் மெட்இந்தியா மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சந்திரசேகர்,  அனைவரும் ஒரு வாரத்திற்கு அரை நாளாவது சமூகப் பணிக்கு அர்ப்பணிக்கவேண்டும் என்று விருது பெற்ற பிறகு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். கடந்த 15 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 21 திட்டங்களை அவர் உருவாக்கியுள்ளார். அவற்றுள் ஒன்றான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான ‘அறிவாற்றலின் மதிப்பீடு மற்றும் தொழில்துறை ஆலோசனை’ (IQ assessment and career counselling) என்கிற திட்டம் குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசித்துள்ளதாகவும் இத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் நம்பிக்கையுடன் இருந்தார்.

”இவரது குழுவினரின் வெற்றிகரமாக சோதனை முயற்சிக்கு பிறகு தமிழக அரசால் இந்த திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக சந்திரசேகர் தெரிவித்தார்.”

மதுரை மருத்துவக் கல்லூரியில் சந்திரசேகர் 14 தங்க பதக்கங்களுடன் எம்பிபிஎஸ் பட்டம்பெற்றார். சண்டிகரின் போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மெடிக்கல் எஜுகேஷன் & ரிசர்ச் (PGIMER) கல்வி நிறுவனத்தில் எம்டி (மெடிசன்) மற்றும் டிஎம் (காஸ்ட்ரோஎன்டேரோலஜி) பட்டங்களை பெற்றுள்ளார். இவருக்கு ராயல் காலேஜ் ஆஃப் ஃபிசிஷியன்ஸ் அன்ட் சர்ஜன்ஸ் ஆஃப் கிளாஸ்கோவிடமிருந்து ஆய்வுக்கொடை வழங்கப்பட்டது. அவர் சிறப்பாக பணியாற்றியதை கௌரவிக்கும் வகையில் 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் கேஎஸ் சஞ்சீவி விருதும் வழங்கப்பட்டது.

கட்டுரை : Think Change India