வெறுங்கால்களில் ஓடும் பிந்துவின் மாரத்தான் மோகம்!

0
“நான் கடந்த ஏழு மாதங்களாக, வெறுங்காலில் ஓடிக் கொண்டிருக்கிறேன். ‘ஸ்பிரிட் ஆஃப் விப்ரோ’ அரை மாரத்தானை வெறுங்காலில் ஓடி முடித்தேன். அடுத்த மாரத்தானையும் இதே போல் முடிப்பேன் என நம்புகிறேன்”...
பிந்து உபத்யேய்
பிந்து உபத்யேய்

பிந்து உபத்யேய் ஒரு லட்சியவாதி. நீண்ட நாட்களாய் தொடரும் அவரின் ஓட்டத்தின் மீதான காதல், இன்று, ஓட்டத்தை அவரில் ஒரு முக்கியப் பங்காக மாற்றியிருக்கிறது . சென்னையிலுள்ள ஐ.ஐ.டியில் படித்த போது ‘ஃபாரஸ்ட் கம்ப்ஸ்’ என்னும் ஓட்டக் குழுவின் உறுப்பினராய் இருந்தவர் பிந்து. ஃபாரஸ்ட் கம்ப்ஸி’ன் ஆழமான தாக்கத்தினால் தான், ஓட்டத்தை, தன் ஆசைக்காக மட்டும் இல்லாமல் சமூக நலனுக்காகவும் பயன்படுத்த முடிவு செய்தார்.

பிந்துவின் தற்போதைய நோக்கம் கிராமப்புறங்களில் இருக்கும் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவது.

மாரத்தான்களை கண்டு பயப்படுபவர்களுக்கு, பிந்து சிரித்துக் கொண்டே கூறுவது, “யாருமே, என்னைப் பார்த்தால் நான் மாரத்தான் ஓடுவேன் என நினைக்கவே மாட்டார்கள். நான் கொஞ்சம் சதைப்பற்றானவள். ஓடுவது ஃபிட்னெஸ் மற்றும் ஸ்டாமினா சம்பந்தப்பட்டது. அதற்காக நீங்கள் ஒல்லியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை”.

இந்தியாவின், பல நகரங்களில், மாரத்தான்களில் ஓடி இருந்தாலும், பெங்களூர் தான் பிந்துவிற்கு மிகவும் விருப்பமான இடமாக இருக்கிறது. “பெங்களூரில் நிறைய பயிற்சி ஓட்டங்கள் நடைபெறும், அதற்கு பெங்களூர் சிறந்த இடமும் கூட. சுறுசுறுப்பான இடம் அது” என்கிறார் பிந்து.

வரும் மாதங்களில், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் திரட்ட திட்டமிட்டிருக்கும் பிந்து, இதுவரை, 66,595ரூபாய் நிதி திரட்டியும் உள்ளார்.

யுரேக்கா சைல்ட் ஃபவுண்டேஷன்ஸ் (Eureka child foundation) உடனான தொடர்பும் உரையாடலும் தான் இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. யுரேக்கா சைல்ட் ஃபவுண்டேஷன்ஸ், கிராமப் புறங்களில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் அரசு சாரா அமைப்பு. இன்று சாலைகளில் பொருட்கள் விற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்கள், பள்ளிகளில் கல்வி அறிவைப் பெற்றால், அதன் மூலம் தங்களுக்கென ஒரு எதிர்காலத்தை அமைத்துக் கொள்வார்கள் என பிந்து நம்புகிறார்.

ஃபாரஸ்ட் கம்ப்ஸ் ஐ.ஐ.டி
ஃபாரஸ்ட் கம்ப்ஸ் ஐ.ஐ.டி

செப்டம்பர் 21-ல் ஸ்பிரிட் ஆஃப் விப்ரோ மாரத்தானை ஓடி முடித்தார். பெங்களூரு மாரத்தான் அக்டோபர் பத்தொன்பதிலும், அதை தொடர்ந்து டிசம்பர் ஏழாம் நாள் சென்னை விப்ரோ மாரத்தானும் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஏன் இது உங்களுக்கு இவ்வளவு முக்கியமாக இருக்கிறது என கேட்டதற்கு, “ நான் ஃபிட்னஸையும், உடல் நலத்தையும் மிகவும் நம்பும் நபர். எல்லாருமே ஆரோக்கியமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும் , ஏனெனில், நலமான வாழ்க்கை மிக முக்கியமானது. அது மட்டுமில்லை, பள்ளிகளில் படிப்பதற்கு பதிலாக தெருக்களில் வேலை செய்யும் குழந்தைகளின் கல்வியைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் நான் மிக ஆர்வமாக இருக்கிறேன்” என்கிறார்.

பிந்துவின் கவனம் உடல் நலம் மற்றும் ஃபிட்னெஸ் பக்கம் திரும்பியதற்கு மற்றொரு காரணம், அவருடைய தைராய்டு பிரச்சனையை கண்டறிந்தது தான். சிறு சிறு தூரங்களோடு தான் ஓடத் தொடங்கினார். இருநூறு மீட்டர் ஓடினாலே முழு சக்தியையும் இழந்ததாக உணர்வார். இந்த நவீன வாழ்க்கை முறை எப்படி தன்னையும் பிறரையும் மாற்றியிருக்கிறது, பாதித்திருக்கிறது என்பது அப்போது அவருக்கு மிகத் தெளிவாக புரிந்தது.

இரண்டு வருட பயிற்சிக்கு பிறகு, பிந்து உபத்யேய், எட்டு ‘ஆயிரம் கிலோ மீட்டர்’ ஓட்டங்களையும், இருபத்தியோரு கிலோமீட்டர் (21.1) கொண்ட ஐந்து அரை மாரத்தான்களையும் ஓடி முடித்திருக்கிறார். ஓடுவதோ அல்லது வேறு வகையான உடல் பயிற்சியோ, மனதை ஆரோக்கியமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் வைக்க உதவுகிறது என்று பிந்து நம்புகிறார்.

ஸ்பிரிட் ஆஃப் விப்ரோ
ஸ்பிரிட் ஆஃப் விப்ரோ

பலரால் தங்கள் ஆர்வத்தை ஒரு நல்ல விளைவிற்காக மாற்ற முடிவதில்லை. ஆனால் ஓட்டம், ஃபிட்னெஸ் பித்து, கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்று தன் ஆர்வத்தை விளைவாக மாற்றியிருக்கிறார் பிந்து.

உங்களுக்கு அவர் கூறுவதெல்லாம் : "லேஸைக் கட்டிக் கொண்டு ஓட ஆரம்பியுங்கள்"!

பிந்துவின் முழக்கம்: https://milaap.org/campaigns/primaryeducationfundraiser