ஷாக் தரும் WHO பட்டியல்: உலகளவில் முதல் 14 இடங்களிலும் இந்திய நகரங்கள்...

உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் முதல் 14 இடங்களில் இந்திய நகரங்கள் இடம் பிடித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0

மனிதன் வாழ அடிப்படையானது காற்று. சுத்தமான காற்றை சுவாசித்தால் தான் மனிதன் ஆரோக்கியமாக நீண்ட காலம் உயிர் வாழ முடியும். ஆனால் நாம் சுவாசிப்பது சுத்தமான காற்றா? என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாளுக்கு நாள் பெருகிவரும் வாகனங்கள், தொழிற்சாலைகள், எரிபொருள் பயன்பாடுகள் என இந்தியாவே தற்போது காற்று மாசுபாட்டால் அவதிப்பட்டு வருகிறது. காற்று மாசுபாட்டால் இந்தியர்களின் ஆயுட்காலமே குறைந்துக் கொண்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் ஒருபுறம் அச்சுறுத்துகின்றன.

குறிப்பாக தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையால் நாளுக்கு நாள் காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. காற்று மாசுபாட்டால் மனிதர்கள் பல்வேறு நோய்த்தாக்குதலுக்கு ஆளாகின்றனர். எனவே, காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், உலக அளவில் காற்று மாசு பாதிப்பு அதிகம் உள்ள 20 நகரங்கள் கொண்ட பட்டியலை இன்று காலை ஜெனிவாவில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. சுமார் 100க்கும் அதிகமான நாடுகளில் உள்ள 4 ஆயிரத்திற்கும் அதிகமான நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இந்தியாவின் லக்னோ, ஃபரிதாபாத், வாரனாசி, கயா, பாட்னா, டெல்லி, ஆக்ரா, முசாபர்பூர், ஸ்ரீநகர், குர்கான், ஜோத்பூர், பாடியாலா, ஜோத்பூர் உள்ளிட்ட 14 பெரிய இந்திய நகரங்கள் காற்று மாசினால் அதிகம் பாதிக்கப்பட்டவையாக முதல் 14 இடத்தையும் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கூறிய நகரங்களில் காற்றில் உள்ள மாசு பி.எம். 2.5 என்ற அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், குவைத்தில் உள்ள அலி சுபா அல்-சலீம், மற்றும் சீனா, மங்கோலியா ஆகிய நாடுகளில் உள்ள சில நகரங்களும் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் படி, உலகில் வசிக்கும் 10 பேரில் 9 பேர் அதிக அளவு மாசு கொண்ட காற்றை சுவாசிப்பதாகவும் தெரியவந்துள்ளது. பி.எம் 2.5-ல் சல்பேட், நைட்ரேட், பிளாக் கார்பன் ஆகியவை அடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை மனித உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தக்கூடியதாகும்.

இந்தியாவின் நிலை:

இந்தியாவைப் பொறுத்தவரை காற்று மாசுபாட்டால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதாக அடிக்கடி ஊடகங்களில் இடம் பிடிப்பது தலைநகர் டெல்லி தான். கடந்தாண்டு காற்று மாசுபாட்டால் வீடுகளை விட்டே மக்கள் வெளியே வர இயலாத சூழல்கூட காணப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவிலான இந்த காற்று மாசுபாட்டால் அங்குள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது. விமான சேவை, ரயில் சேவை உள்ளிட்ட போக்குவரத்து அம்சங்களும் பாதிக்கப்பட்டன.

எனவே, உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள காற்று மாசு மிகுந்த நகரங்கள் பட்டியலில் இந்தியாவின் டெல்லி முதலிடம் பிடித்திருக்கும் என நினைத்தால், அதிர்ச்சியளிக்கும் விதமாக டெல்லியை 6-வது இடத்திற்குத் தள்ளி, முதலிடத்தை கான்பூர் பிடித்துள்ளது.

பட உதவி: ZeeNews
பட உதவி: ZeeNews
கடந்த 2007-ம் ஆண்டு முதல் அதிகளவில் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றுவதில், முதலிடத்தில் சீனா இருந்தது. ஆனால், தற்போது அது 75 சதவீதம் அளவுக்கு அங்கு குறைந்துள்ளது. ஆனால், இதற்கு எதிர்மாறாக இந்தியாவின் கந்தக டை-ஆக்சைடு வெளியேற்றம், 50 சதவீதம் அளவுக்கு உயர்ந்து, தற்போது உலகளவில் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2010-ல், இரண்டாமிடத்தில் இருந்த அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா, தற்போது சீனாவை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பது, சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் நிலக்கரியை அதிகளவில் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. நிலக்கரியின் எடையில் சுமார் 3 சதவீதம் அளவுக்கு கந்தகம் உள்ள நிலையில், அதை அதிகம் பயன்படுத்துவதால், காற்று கடுமையாக மாசடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பட உதவி: NDTV
பட உதவி: NDTV

காற்றில் இருக்கும் நுண்துகள்களைக் கொண்டே காற்றின் தரம் அளவிடப்படுகிறது. ஒரு கியூபிக் மீட்டர் காற்றில் உள்ள மைக்ரோகிராம்ஸ் நுண்துகள்கள் கடந்த ஐந்து வருடங்களில் காற்று மாசுபாட்டின் அளவு சர்வதேச அளவில் 8% அதிகரித்துள்ளது.

காற்று மாசைக்கட்டுப்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக, பல மாநிலங்களில் வாடகை சைக்கிள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மணி நேரத்திற்கு வெறும் ரூ.2 மட்டுமே வாடகை வசூலிக்கப்படும். பொது போக்குவரத்தை ஊக்கப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது .இருப்பினும் இந்த நடவடிக்கைகள் போதாது என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து.