காது கேளாதோருக்கு உதவும் கண்ணாடியை கண்டுபிடித்துள்ள டெல்லி சிறுவன்!

0

17 வயதாகும் மாதவ் லவாகரே பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் தீராத தாகம் கொண்டவர். 2013-ம் ஆண்டு கூகுள் கிளாஸ் சந்தையில் அறிமுகமானபோது மாதவ்விற்கு அதன் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவரது ஆர்வம் அதன் தோற்றத்தின் மீது அல்ல. அந்த கான்செப்டின் மீதே அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது என நியூஸ்பைட்ஸ் தெரிவிக்கிறது.

கூகுள் கிளாஸைக் கண்டு உந்துதல் ஏற்பட்டதால் மாதவ் தற்போது ’ட்ரான்ஸ்கிரைப்’ என்கிற ஹியரிங் கிளாஸ் உருவாக்கி வருகிறார். காது கேளாதோர் தங்களால் கேட்க முடியாத வார்த்தைகளை படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.

புதுடெல்லியின் சாணக்யபுரி பகுதியில் உள்ள சன்ஸ்கிருதி பள்ளி மாணவரான மாதவ் கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவில் வளர்ந்தார். இவருக்கு எட்டு வயதிருக்கையில் இவரது பெற்றோர் டெல்லிக்கு மாற்றலாயினர். மாதவ் தனது முதல் கண்டுபிடிப்பு குறித்து குறிப்பிடுகையில், 

“எனக்கு ஆறு வயதிருக்கையில் பாலோ ஆல்டோவில் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய அடுப்பை நான் கண்டுபிடித்தேன்,” என்றார்.

மாதவ் 13 வயதில் சென்சார் மூலம் இயங்கக்கூடியதும் குரல் மூலமாக கட்டுப்படுத்தக்கூடியதுமான தானியங்கி அமைப்பை உருவாக்கினார். தி பெட்டர் இண்டியா உடன் மாதவ் உரையாடுகையில்,

”ஒவ்வொரு முறை நான் புதிதாக ஒன்றை உருவாக்கும்போதும் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன். பிரச்சனைக்கு படைப்பாற்றலுடன் தீர்வு காண்பதும் அதே சமயம் எனக்கு விருப்பமான செயல்களில் ஈடுபடுவதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது.”

மாதவ் ஹியரிங் கிளாஸ் உருவாக்க விலை மலிவான எலக்டிரானிக் பொருட்களையே பயன்படுத்தியுள்ளார். பத்தாம் வகுப்பில் படித்த இயற்பியல் பாடத்தின் அடிப்படை கோட்பாடுகளைக் கொண்டே இதை உருவாக்கியுள்ளார்.

ஒருவர் ஹியரிங் கிளாஸ் அணிந்துகொண்டால் ஸ்மார்ட்ஃபோனில் அவர்கள் விரும்பும் நபரை தொடர்பு கொண்டு உரையாடலாம். இதனுள் அமைக்கப்பட்டிருக்கும் செயலி வாயிலாக உரையாடல்கள் எழுத்துவடிவமாக மாற்றப்படும். 

எனவே ஒருவர் கண்ணாடி அணியும்போது கண்ணாடியின் ஒளி புகும் தன்மை கொண்ட திரையில் காணப்படும் எழுத்து வடிவமாக்கப்பட்ட வாக்கியத்தைப் படிக்கலாம். 

கூகுள் கிளாஸ் விலை சாமானிய மக்களைச் சென்றடையும் விதத்தில் இல்லை என்பது மாதவின் கருத்து. 

கூகுள் கிளாஸ் விலை 1,500 டாலராக (ஒரு லட்சத்திற்கும் மேல்) இருக்கையில் ட்ரான்ஸ்கிரைப் சாதனத்தின் விலை வெறும் 3,500 ரூபாய் மட்டுமே. மலிவு விலையிலான இந்த சாதனம் குறைவான வருவாய் ஈட்டும் மக்களுக்கு நிச்சயம் உதவும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் மாதவ்.

இந்தியாவில் 50 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு காதுகேளாத பிரச்சனை உள்ளது. எனவே ட்ரான்ஸ்கிரைப் இந்தியாவிற்கு ஒரு வரம் என்றே சொல்லலாம்.

“என்னுடைய செயல்பாடுகளை அடுத்தகட்ட வளர்ச்சி நோக்கி எடுத்துச்செல்வதே எனது திட்டம். காது கேளாதோருக்கு உதவும் நிறுவனங்களுடன் பணிபுரிந்து இந்த சாதனத்தை சோதனை செய்து கருத்துகளைப் பெற விரும்புகிறேன். அதன் பிறகு புதிய முன்வடிவத்தை இந்த கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்குவேன்,” என்றார் மாதவ்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL