தமிழகத்தின் முதல் அன்புச்சுவர் !

நெல்லை கலெக்டர் பொதுமக்களின் பயனுக்காக எடுத்துள்ள புதிய முயற்சி...

1

திருநெல்வேலி, நெல்லை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அன்புச்சுவர் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று இந்த அன்புச்சுவரை துவக்கிவைத்தார்.

இந்த அன்புசுவரின் நோக்கம், ஒருவர் பயன்படுத்தியப் பிறகு, இனி தேவையில்லை என்று கருதும் பொருளை அன்புச்சுவற்றில் வைக்கலாம். தேவை உள்ளோர் அதில் இருந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளலாம். இந்த அன்புச்சுவர், 24 மணி நேரமும் இயங்கும்.

இதில் ஆடைகள், புத்தகங்கள், பொம்மைகள், காலணிகள் மற்றும் பயனுள்ள இதர பொருட்களையும் வைக்கலாம். இது முழுக்க முழுக்க பொது மக்கள் பயன் படுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் எந்த நேரத்திலும் இங்கு பொருட்களை வைக்கவும் எடுக்கவும் செய்யலாம்.

சில தினங்களுக்கு முன் இதற்காக கட்டப்பட்ட கட்டிடம் இடிக்கப்பட்டது, பின் அதற்காக மரப் பலகைகள் மூலம் இந்த அன்புச்சுவர் தொடங்கப்பட்டுள்ளது.

இதை ஏற்பாடு செய்தவர்களை கலெக்டர் சந்தீப் நந்தூரி கௌரவித்தார். மதுரை மாநகராட்சி கமிஷனராக இருந்த சந்தீப் நந்தூரி, கடந்த மாதமே நெல்லை கலெக்டராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல்தினத்தில் பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி,  சூழல் சம்மந்தப்பட்ட அனைத்தையும் மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி இருந்தார். அதை அடுத்து பதவியேற்று இரண்டே மாதங்களில்  தாமிரபரணி ஆற்றை தூய்மை படுத்தும் திட்டம், விளம்பரம் இல்லாச் சுவர் போன்ற பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதனை தொடர்ந்து தற்பொழுது அன்புச்சுவரை நிறுவியுள்ளார்.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 
நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி 

இதை துவக்கிவைத்தபின் பேட்டி அளித்த கலெக்டர்,

 "பெரும்பாலான  மக்கள், பயன்படுத்திய பொருட்களை யாருக்கு கொடுப்பதென்று தெரியாமல் இருக்கின்றனர், அதனால் சாலையில் இது போன்ற அன்புச்சுவர் இருந்தால் போகும் வழியில் பொருட்களை வைத்துவிட்டு செல்லவார்கள். அந்த பொருளை தேவையானவர்கள் எடுத்துக்கொள்வார்கள்," என்றார்.

இந்தத் திட்டம் முதலில் ஈரான் நாட்டில் செயல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, இது போன்ற திட்டம் வெளிநாடுகளில் பரவலாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் இதுவே முதல் அன்புச்சுவர். இந்த திட்டம் மக்களுக்கு பயனுள்ளதாக அமைந்தால் இது இன்னும் விரிவாக்கம் செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். 

கட்டுரையாளர் - மஹ்மூதா நௌஷின்

Related Stories

Stories by YS TEAM TAMIL