விஜய் ஹால்டியா தன் சமையல் குறிப்புகளால் சாதித்தது

இன்று "ஜெய்கா கா தட்கா" என்ற இவரது முகநூல் குழுவில் மிகப்பெரிய கூட்டம் இவரை தொடர்கிறது. இது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே.

1

உலகின் தலைசிறந்த சமையல் கலைஞர்களெல்லாம் சொல்வது ஒன்று தான் ”அம்மாவின் சமையலுக்கு ஈடாக வேறு சமையல் வருமா?” என்பதே. உணவு என்பது அடையாளம். நம் பாரம்பரியம், முக்கியமாக நம் அம்மாவின் சமையல்.

ஜோத்பூரை சேர்ந்த 56 வயது நிரம்பிய விஜய் ஹால்டியா தொழில்நுட்பத்தின் உதவியால் தன் சமையல் கலையை உலகம் முழுக்க கொண்டு செல்கிறார்.

கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தன் மகளை பார்க்க அமெரிக்கா சென்றிருந்தவர்,அங்கே தன் மகளின் நண்பர்கள்,மற்றும் இந்தியாவில் இருந்து வந்து தங்கியிருக்கும் சில குடும்பங்கள் இணையதளங்களில் கிடைக்கும் சமையல் தகவல்களை பார்த்தே சமைக்கிறார்கள் என்பதை தெரிந்துகொண்டார்.

தனக்கிருந்த சமையல் ஆர்வத்தை உணர்ந்த ஹால்டியா, தன் மகள் சொன்னதை கேட்டு தானும் தன் சமையல் செய்முறைகளை இணையத்தில் பகிர்ந்தால் நன்றாக இருக்கும் என யோசித்தார். அப்படி உருவானது தான் "ஜெய்கா கா தட்கா "(Zayka ka Tadka).

இன்று ஜெய்கா கா தட்கா என்ற இவரது முகநூல் குழுவில் மிகப்பெரிய கூட்டம் இவரை தொடர்கிறது.இது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியே.

விஜய் ஹால்டியாவை பொறுத்தவரை அவரது உணவுமுறைகள் எல்லாம் சிறப்பானவை, சமைப்பதற்கு எளிமையானவை என்பதோடு அல்லாமல் சமைப்பதற்கு தேவையான பொருட்கள் நாம் அன்றாடம் பயன்படுத்துபவை என்பது தான் மற்ற உணவு தளங்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திகாட்டுகிறது. அது மட்டுமல்லாமல் இவரே அந்த உணவுமுறைகளை சமைத்து பார்த்து, நன்றாக இருந்தால் மட்டுமே மற்றவர்களிடம் பகிர்கிறார். சமைப்பதற்கு என்னவெல்லாம் தேவை என்பதை சமைக்கும்போதே கச்சிதமாக குறிப்பெடுத்து அதை தானே போட்டோவும் எடுத்து பகிர்கிறார் என்பதால் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது.

மிஞ்சிய உணவுப்பொருட்களை வைத்து இவர் உருவாக்கும் உணவு வகைகள் இவரது ரசிகர்களிடம் சக்கை போடுபோடுவதாக தெரிவிக்கிறார். “வீட்டில் வீணாகும் சில உணவு பொருட்களை வைத்து நான் சமைத்து பார்த்தேன். அது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உணவுப்பொருட்கள் வீணாவதையும் தடுக்கிறது”

குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு உணவு செய்முறையாவது பகிரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ”முன்பெல்லாம் என் ரெசிபிகளை யாருமே கண்டு கொண்டது போல தெரியவில்லை, ஆனால் நான் என் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினேன், நம் முயற்சிகள் சரியான திசையை நோக்கி இருந்தால், வரவேற்பு தானாகவே பின்தொடரும். கடைசியாக ஒன்று, நான் எப்பொழுதுமே என் சிறப்பான பங்களிப்பை தருவேன், அதிர்ஷ்டம் எனக்கு சாதகமாகவே இருக்கும்” என்கிறார்.

உணவு என்பது ஹால்டியாவின் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்திருக்கிறது. “என் அம்மா தான் எனக்கு உத்வேகமாகவும் சமையல் விஷயத்தில் முன்னுதாரணமாகவும் இருந்திருக்கிறார். அவரிடம் நான் நிறைய கற்றிருக்கிறேன். இன்று என்னவெல்லாம் கற்றிருக்கிறேனோ அதற்கெல்லாம் காரணம் அவர்தான் என தெரிவிக்க கடமைபட்டிருக்கிறேன்” என்கிறார். ஹால்டியாவின் சமையல் மீதான காதல் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டுமல்லாமல் அவர் தன் கல்லூரி இளங்கலை படிப்பாக மனையியலையே பாடமாக எடுத்து படிக்குமளவு நீண்டிருக்கிறது (bachelor of home science).

இவரின் குடும்பம் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மசாலா தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது என்பதால் ஒரு மூலமசாலா எப்படி முழுமையான பொருளாக மாறுகிறது என்பது ஹால்டியாவுக்கு அத்துபடி. “இந்த பின்னணியிலிருந்து வந்ததால், எந்த அளவு மசாலா சேர்த்தால் எவ்வளவு சுவை வரும் என்பது பற்றிய அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்தது” என்கிறார்.

ஹால்டியாவின் வாழ்க்கை சூழலும், புது முயற்சியும் அவருக்கு புத்துணர்ச்சி அளித்திருக்கிறது. காரணம் அவரது வயதும் அனுபவமும் கொடுத்த பக்குவம். அது பற்றி குறிப்பிடும்போது ”ஆரம்பத்தில் அது எனக்கு நிறைய ஊக்கமளித்தது. ஆனால் வரவேற்பு கிடைக்க கொஞ்சம் நாளெடுத்தது. நான் ஒன்றை எப்பொழுதும் நம்புகிறேன், மக்கள் நமக்கு மோசமான எதிர்வினையாற்றுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களின் கெட்ட எண்ணமல்ல, அவர்கள் உலகத்தை சில எல்லைகளுக்கு உட்பட்டு பார்க்கிறார்கள், எனவே அவர்கள் அதையே உங்களிடமும் பிரதிபலிக்கிறார்கள். நீங்கள் உங்கள் மனதின் பேச்சை கேட்கிறீர்களா மற்றவர்களின் பேச்சை கேட்கிறீர்களா என்பது உங்களிடமே இருக்கிறது.” என்கிறார்.

குறிப்பிட்ட சிலர் இவரை விமர்சிக்கவும் செய்கிறார்கள், ஆனால் அவர்களை வைத்து தான் நம்மை எல்லோரும் கவனிக்கிறார்கள், எனவே சரியான பாதையில் தான் செல்கிறோம் என தெரிந்துகொள்ள முடியும் என நம்புகிறார். இவர் சந்திக்கும் பல சவால்களின் ஒன்று, இவர் தன் வாசகர்களிடம் என்ன சமைக்கலாம் என்று கேட்கும்போது குவியும் விண்ணப்பங்கள் தான். அது பெரிய பட்டியலாக நீள்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் நான்கு உணவுகளாவது சமைக்க சொல்லி வற்புறுத்துகிறார்கள் ”இந்த சவால் எனக்கு பிடித்திருக்கிறது” என்கிறார்.

ஜெய்கா கா தட்காவிற்கான சமையல் எனும்போது காய் நறுக்குவதிலிருந்து,சமைப்பதுவரை ஏன் தன் பதார்த்தங்களை போட்டோ பிடிப்பது வரை சொந்தமாக தானே செய்கிறார். இவரது கணவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். இணையவேலைகளை மட்டும் அவர் பார்த்துக்கொள்கிறார்.

நம் அம்மாக்களின் காலத்தில் தொழில்நுட்பம் இந்த அளவு வளரவில்லை.ஆனால் இந்த கால பெண்களுக்கு தொழில்நுட்பம் அளவற்ற வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது. தன் குடும்பத்தினரின் உதவியால் இதற்காகவே சில நேரம் ஒதுக்கிக்கொண்டு தொழில்நுட்பத்தின் எல்லா சாத்தியங்களையும் தன் வளர்ச்சிக்காக பயன்படுத்தியிருக்கிறார்.

”காலத்திற்கேற்ப மாறுவது நல்லது தான், அதைத்தான் நானும் செய்திருக்கிறேன்.நாம் எல்லோருமே மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.குறிப்பாக நம் காலத்துப்பெண்களுக்கு தொழில்நுட்பம் என்பது ஒரு பரிசு.அது சரியான நேரத்திற்கு வந்திருக்கிறது. இந்தியாவில் இருக்கும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்துகொண்டிருக்கிறார்கள்,அதே அளவுக்கு வீட்டில் செய்ய வேண்டிய கடமைகளையும் சமமாகவே செய்கிறார்கள்.அவர்கள் அலுவலக நெறிமுறைகளையும், வீட்டு கடமையையும் சமமாகவே நடத்த வேண்டி இருக்கிறது, நடத்த விரும்புகிறார்கள் கூட. தொழில்நுட்பம் எல்லாவற்றையும் உள்ளைங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறது".

அவங்களுக்கு எப்பொழுதுமே புதுபுது எண்ணங்கள் தோன்றுகிறது.ஆனால் அதை சாத்தியப்படுத்துவதில் தான் பிரச்சனை.இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிமையாக அதை சாத்தியப்படுத்தும் வழியை அவர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். இது மிகச்சாதகமான அம்சம். பின்னொரு நாள் எங்காவது யோசிப்பேன் இந்த வரம் முன்பே வந்திருக்கக்கூடாதா என்று. ஆனால்இன்னும் தாமதப்படுத்தாமல் இப்போதே வந்திருக்கிறதே அதுவே மகிழ்ச்சி” எங்கிறார் விஜய் ஹால்டியா.

இதை செய்யாமல் போயிருந்தால் இன்று வருத்தப்பட்டிருப்பேன் என்கிறார். இவருக்கு வரும் நேர்மறையான கருத்துக்களும் ஆதரவும் இவரை தொடர்ந்து இயங்க வைப்பதாக தெரிவிக்கிறார்.ஆனால் எதிர்மறையான கருத்துக்கள் விலைமதிப்பற்றது.காரணம் அது தன் தவறுகளை திருத்திக்கொள்ளவும், சுய பரிசோதனை செய்யவும், அடுத்த முறை அதே தவறை செய்யாமல் இருக்கவும் உதவும் என்கிறார் தன்னம்பிக்கையாக.


ஹால்டியாவுக்கு இது ஒரு தொடக்கம் தான்.எதிர்காலத்தில் இன்னும் சில புதுமுயற்சிகள் செய்வேன் என்கிறார். “சீக்கிரமே எங்களுக்கான இணையதளம் ஒன்றை துவங்க இருக்கிறோம். அடுத்தாக ஒரு உணவகம்,உணவுக்காதலர்களுக்காக ஒரு மொபைல் அப்ளிகேசன்,வீட்டிலேயே எளிய முறையில் சுவையாக எப்படி சமைப்பது என்பது பற்றிய சின்ன மின்-புத்தகம் என நிறைய இருக்கிறது.நீங்கள் தீவிரமாக உழைத்தால் எதோ ஒன்று தானாகவே உங்கள் இலக்கில் வந்துவிடும் என்று இவரின் உழைப்பு காட்டுகிறது. ஒட்டு மொத்த வாழ்க்கையே சரியான திசையை நோக்கி திரும்பும்,எனவே இது நல்லதுக்கு தான். எனவே என் சார்பாக என் பாதையில் தீவிரமாக உழைத்துக்கொண்டிருக்கிறேன், என் இப்போதைய கவனமெல்லாம் இந்த ஒரு பாதையில் தான்.