தன் பாலின அடையாளத்தை மாற்றக் கோரி திருநம்பி தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு!

0

உலகமெங்கும் ப்ரைட் பரேட் என்று சொல்லக்கூடிய எல்ஜிபிடி சமூகத்தினரின் பேரணி நடைப்பெற்று கொண்டிருக்கும் வேளையில், அதன் தொடர்பாக போடப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளது.

மென்பொருள் பொறியாளராக இருக்கும் திருநம்பி ஒருவர், தன் பாலினத்தை பெண்ணில் இருந்து ஆணாக மாற்றிக்கொள்ளவும், பெயர் மற்றும் பாலின விவரங்களை பள்ளி, கல்லூரி ஆவணங்களில் மாற்றிக்கொள்ளவும் அனுமதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 

கவுதம் சுப்ரமணியம் என்ற ஒருவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை போட்டார். அதில் ரேகா என்ற பெண்ணாக பிறந்த அவர், பின்னர் தன்னுள் ஆணின் நடவடிக்கைகள் மற்றும் குணாதிசயங்களை உணர்ந்ததால் ஆணாக வாழ்ந்துள்ளார். 

மருத்துவரை சந்தித்த கவுதம், ஹார்மோன் தெரபி எடுத்துக்கொள்ளவும் முறையான பாலின மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக்கொள்ளவும் அறிவுரைக்கப்பட்டுள்ளார். அறுவை சிகிச்சைக்கு பின் அவர் ஒரு திருநம்பி என்ற சான்றிதழை வழங்கியும் உள்ளனர். அதன் படி, ரேகா என்ற தனது பெயரை கவுதம் என்று மாற்றிக்கொண்டு தமிழக அரசு கசெட்டில் வெளியிட்டுள்ளார். 

அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் எஞ்சினியரிங்கை 2012-ல் முடித்து, ஒரு தனியார் நிறுவனத்தில் ஆண் என்று குறிப்பிட்டு பணியில் சேர்ந்துள்ளார். ஆனால் கல்லூரியில் பெண் என்று பாலினம் குறிப்பிட்டிருப்பதை மாற்ற முயற்சித்தபோது நிர்வாகம் மறுத்துவிட்டது. அதன் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் கவுதம். 

நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் வந்த இவ்வழக்கில் வரலாற்றுமிக்க ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது. கல்வி நிர்வாக அதிகாரிகளை, கவுதமின் கோரிக்கைக்கு ஏற்ப ஆண் என்று மாற்ற உத்தரவிட்டார். மேலும் குறுப்பிட்ட அவர், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மூன்றாம் பாலினம் என்ற ஒரே காரணத்தினால் அவர்களை அலைக்கழிப்பது சரியல்ல என்றார். 

”அவர் தகுந்த ஆவணங்களை கொடுத்துள்ளார். தன் பாலினம் பற்றிய அடையாளங்களையும் அதிகாரிகளிடம் தந்துள்ளார். அதனால் எந்த ஒரு சந்தேகமின்றி அதிகாரிகள் உடனடியாக அவரின் வேண்டுகோளை பூர்த்தி செய்யவேண்டும்,” என்றார் நீதிபதி.

மருத்துவ சான்றிதழின் அடிப்படையில் கவுதமின் ஆவணங்களை சரி பார்த்து 8 வாரங்களுக்குள் பெயர் மற்றும் பாலின விவரங்களை மாற்றவேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த தீர்ப்பு பல அரசு அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. எல்.ஐ.சி மற்றும் ரயில்வே டிக்கெட் முன்பதிவு படிவத்தில் மூன்றாம் பாலின பிரிவு அறிமுகப்பட்டிருந்தாலும், அனைத்து அரசு மற்றும் தனியார் இடங்களிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதற்கான முதல் படியாகும்.