சென்னை வெள்ளம்: காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறுவது எப்படி?

0

சென்னை வெள்ளத்தால் பலருக்கும் வாகன, இயந்திர சேதம் ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்து அவர்கள் எவ்வாறு மீள்வது? காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறுவது எப்படி? இதோ சில டிப்ஸ்..

சென்னையில் வெளுத்துக்கட்டிய மழையில் நடுத்தர வர்க மக்கள் மற்றும் தொழில்முனைவோர் பலருக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டிருக்கிறது. உயிரிழப்புகள், உற்றார், உறவினரின் இழப்பு ஆகியவற்றைத் தாண்டி அலுவலகம் செல்வோர் மற்றும் தொழிலாளிகளின் வாழ்வாதாரமே கடும் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. காரணம், வீடு மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் கட்டடங்களினுள் வெள்ளநீர் புகுந்து, அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், இயங்கிக்கொண்டிருந்த இயந்திரங்கள் ஆகியவை மழை நீரில் மூழ்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருப்பதுதான்.

பொதுவாக தொழில்முனைவோருக்கு இதுபோன்ற சோதனைகள் வருவது இயல்பானதுதான். இருப்பினும் அதிலிருந்து புத்திசாலித்தனமாக இதிலிருந்து மீளவேண்டும். இயந்திரங்கள் சேதாரம் ஒருபுறமிருக்க, நம்மவர்கள் போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் இரு சக்கர வாகனங்கள், கார்கள் ஆகியவையும் மழைநீரில் மூழ்கி பெரும் செலவை ஏற்படுத்தியிருக்கின்றன. இவர்கள் இதிலிருந்து எப்படி மீளலாம்? இதோ, சில டிப்ஸ்…

1. தமிழக அரசு, வெள்ள நீரில் மூழ்கி செயலிழந்த வாகனங்களை இலவச சர்வீஸ் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறது. ஸ்டார்ட் செய்யக்கூட இயலாத நிலையில் உள்ள இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்களை குறிப்பிட்ட சர்வீஸ் சென்டர்களுக்குக் கொண்டுசென்று இலவச சர்வீஸ் செய்துகொள்ளலாம். வண்டி, இயங்குவதற்குத் தேவையான அடிப்படை பழுது நீக்கத்தை அங்கு செய்துதருகிறார்கள். உதிரிபாகங்கள் ஏதும் வாங்கவேண்டியிருப்பின் நம் கைக்காசு போட்டுத்தான் ஆக வேண்டும். வரும் 21 ஆம் தேதிவரை இந்த சேவை நடப்பில் இருக்கும்.

2. கார், இதர வாகனங்கள் பழுதுபட்டிருப்பின் இந்த சேவையைப் பயன்படுத்த இயலாது. இப்போது கார் தயாரிப்பு நிறுவனங்கள் பலவும் (ஹூண்டாய், மாருதி முதலிய நிறுவனங்கள்) சலுகைக் கட்டணத்தில் சர்வீஸ் செய்து தருவதாக அறிவித்திருக்கின்றன. உதிரிபாக விலையிலும் தள்ளுபடி தருவதாக சில நிறுவனங்கள் சொல்லியிருக்கின்றன. எனவே, உங்கள் கார் எந்த நிறுவனத் தயாரிப்போ, அந்த நிறுவன இணையதளத்துக்குச் சென்று விபரங்களைப் பெறலாம். சர்வீஸ் சென்டர்களிலும் இந்த தகவல்கள் கிடைக்கும். என்னென்ன சலுகைகள் என்பதை நன்கு விசாரித்துவிட்டு, பின்னர் சர்வீஸுக்கு விடுவது பர்ஸைப் பாதுகாக்கும் உத்தி.

3. இனி வண்டி, வேலைக்கே ஆகாது என்ற சூழல் ஏற்பட்டிருந்தாலோ அல்லது பெரும் செலவு வைக்கும் நிலைக்கு வந்திருந்தாலோ உங்கள் வாகனத்தை எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தீர்களோ, அந்த நிறுவனத்தைத்தொடர்பு கொள்ளலாம். அவர்கள் நேரில் வந்து, ஆய்வு செய்து, வாகனத்தின் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு தருவார்கள்.

4. வாகனம், சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருந்தாலோ, அல்லது இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி யாரேனும் திருடியிருந்தாலோ உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிடுங்கள். காப்பீட்டு நிறுவனம், நீங்கள் புகார் கொடுத்ததற்கான ஆதாரமான முதல் தகவல் அறிக்கை அல்லது சமூகப் பணிப் பதிவேட்டு அறிக்கையைக் (FIR, Community Service Register) கேட்பார்கள். எனவே அந்த ஆவணத்தின் நகலை காவல் நிலையத்தில் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.

5. உங்கள் இரு, நான்கு சக்கர வாகனம் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தால் (வெள்ளம், புயல், மழை மற்றும் அவற்றின் விளைவாக மரங்கள் வாகனத்தின்மீது விழுந்து சேதாரம் அடைந்திருந்தால்கூட) உடனே சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தை தொடர்புகொண்டு சேதம் குறித்து பதிவு செய்துவிடவேண்டும். வாகனம் பாதித்த நிலையில் ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

6. வாகனக் காப்பீட்டு ஆவணங்கள் கையில் தயாராக இருக்க வேண்டும். காப்பீடு நடப்பில் இருக்க வேண்டும். காலாவதியான பாலிசிக்கு இழப்பீடு கிடைக்காது. காப்பீட்டு நிறுவனம், தனது ஆய்வாளரை நேரில் அனுப்பி உங்களது வாகனத்தைப் பரிசோதிக்கும். அவரது மதிப்பீட்டின் அடிப்படையிலேயே இழப்பீடு கிடைக்கும். வண்டியை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான செலவையும் காப்பீட்டு நிறுவனம் ஏற்கும்.

7. வாகனம் வாங்கப்பட்ட தேதி, இன்றுவரை வாகனத்துக்கு ஏற்பட்டுள்ள தேய்மானம் ஆகியவற்றைக் கணக்கிட்டே இழப்பீடு கிடைக்கும். எனவே, கூடுதல் செலவுக்கு நாமும் கொஞ்சம் தயாராக இருப்பது நல்லது.

8. நீரில் மூழ்கியிருக்கும் வாகனத்தை ஸ்டார்ட் செய்தால் வாகனத்தின் இஞ்சின் கெட்டுவிடும். இழப்பீடு கிடைக்காது. இதனை அனைவரும் நன்கு கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல சுயமாக ஏதாவது பழுதுநீக்கம் செய்ய முயன்று, அதனால் பழுது பெரிதாகிவிட்டாலும் சிக்கலாகிவிடும்.

9. வாகனங்கள் மட்டுமல்லாது, தொழிற்சாலை இயந்திரங்களுக்கும் இந்த விதிகளுக்குள் பொருந்தும். மழை வெள்ளம் காரணமாக பழுதுபட்ட இயந்திரங்களை அப்படியே இயக்க முற்பட்டால் மின் விபத்து ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, காப்பீட்டு நிறுவன மதிப்பீட்டாளர் வரும் வரை பொறுமை காக்க வேண்டும். இயந்திரங்கள் வாங்கிய பில்கள், பழுதுநீக்கம் செய்த ரசீதுகள், காப்பீட்டு ஒப்பந்தம், பிரிமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவற்றையும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். இயந்திரங்கள் நிச்சயம் தேய்மானம் கழித்துக் கொண்டுதான் மதிப்பு கணக்கிடப்படும். அதன் அடிப்படையில்தான் இழப்பீடும் கிடைக்கும்

10. இதுவரை இயந்திரங்கள், தொழிற்கூடம், வாகனம் ஆகியவற்றுக்கு போதுமான காப்பீடு செய்யாமல் இருந்தால் இனியாவது செய்துவிடுங்கள். பிரிமியம் குறைவு. இணையம் வழியாகவே காப்பீட்டுத்திட்டங்களில் இணையலாம் இழப்பீட்டுத்தொகை பெரிய ஆறுதல். இனியும் தாமதிக்க வேண்டாம்.

படங்கள் உதவி: Nishanth Krish and UNI