இந்திய கிரிக்கெட் அணியில் இணையவுள்ள பானி பூரி விற்கும் இளைஞன்! 

கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக உத்திரப்பிரதேசத்தின் படோஹி பகுதியில் இருந்து மும்பைக்குச் சென்ற 17 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இணைய உள்ளார்.

1

யஷஸ்வி ஜெய்ஸ்வால் பதினோரு வயதிருக்கையில் கிரிக்கெட் விளையாட்டை வாழ்க்கைப் பாதையாக தேர்ந்தெடுக்கவேண்டும் என்கிற தன்னுடைய கனவை நனவாக்க தனியாக மும்பை சென்றார். யஷஸ்வி உத்திரப்பிரதேசத்தின் படோஹி என்கிற பகுதியைச் சேர்ந்தவர். சிறு கடைக்காரரான இவரது அப்பா குடும்பத்தை பராமரிக்க கஷ்டப்பட்டு வந்ததால் யஷஸ்வி மும்பைக்கு மாற்றலாகிச் செல்வதை அவர் தடுக்கவில்லை.

தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் யஷஸ்வி மத்திய வரிசை ஆட்டக்காரராக உள்ளார். ஸ்ரீலங்கா சுற்றுப்பயணத்திற்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இணையத் தயாராக உள்ளார். 

மும்பைக்கு மாற்றலான பிறகு சுமார் மூன்றாண்டுகள் ஆசாத் மைதான் மைதானத்தில் இருந்த ஒரு கூடாரத்தில் வசித்தார். அவர் மும்பையில் சந்திக்கும் போராட்டங்கள் அவரது குடும்பத்திற்குத் தெரியவந்தால் அவரது கனவு முடிவிற்கு வந்துவிடும் என்பதால் அவர்களுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார். அவரது அப்பா அனுப்பும் தொகை யஷஸ்விக்குப் போதுமானதாக இல்லை. எனவே அவர் ஆசாத் மைதானில் பானி பூரியும் பழங்களும் விற்பனை செய்யத் துவங்கினார். ஆனால் அவர் பசியுடன் படுக்கைக்குச் சென்ற நாட்களையும் கடந்தே வந்துள்ளார். அவர் இண்டியன் எக்ஸ்பிரஸ்-க்கு தெரிவிக்கையில்,

”ராம் லீலா சமயத்தில் நான் நன்றாக சம்பாதித்தேன். சில சமயம் என்னுடைய அணியினரும் பானி பூரி சாப்பிட வருவார்கள். அவர்களுக்கு பரிமாறும்போது வருத்தமாக இருக்கும்,” என்றார்.

உள்ளூர் பயிற்சியாளரான ஜ்வாலா சிங் யஷஸ்வியைக் கண்டறிந்து அவரது குழுவில் இணைத்துக் கொண்டார் என இண்டியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை தெரிவிக்கிறது. 

”அவர் ’ஏ’ டிவிஷன் பந்துவீச்சாளரை எளிதாக எதிர்கொண்டதை நான் கண்டேன். முன்மாதிரிகள் யாரும் இல்லை. வழிகாட்டியும் இல்லை. அவரிடம் இயற்கையாகவே இந்தத் திறன் உள்ளது,” என்றார் ஜ்வாலா.

”என் வயதில் இருப்பவர்கள் உணவைக் கொண்டு வருவதைப் பார்த்திருக்கிறேன். அல்லது அவர்களது பெற்றோர் பெரிய லஞ்ச் பாக்ஸை அவர்களுக்காக எடுத்து வருவார்கள். ஆனால் நான் எனக்கான உணவை நானே தயாரித்து தனியாக சாப்பிடவேண்டும். சில சமயம் எனக்காக காலை உணவு வாங்கி வரச் சொல்லி யாரிடமாவது கேட்டுக்கொள்வேன்,” என்றார் யஷஸ்வி.

யஷஸ்வி மும்பை அணியின் அடுத்த மிகப்பெரிய ஆட்டக்காரராக உருவெடுப்பார் என நம்புகிறார் 19 வயதுக்குட்பட்டோருக்கான மும்பை அணியின் பயிற்சியாளர் சதீஷ் சமந்த். ”பந்து வீச்சாளரின் போக்கை கணிக்கும் திறன் கொண்டுள்ளார். அதற்கேற்றவாறு தன்னை தயார்படுத்திக்கொள்கிறார். பெரும்பாலான இளம் ஆட்டக்காரர்கள் துவக்கத்திலேயே தேவையற்ற முறையில் அதிரடியாக விளையாட முற்படுவார்கள். ஆனால் இவர் அவ்வாறு செய்வதில்லை. அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. வாட்ஸ் அப்பில் நேரம் செலவிடுவதில்லை. பதின்மவயதினரிடையே இந்த போக்கு அரிதாகும்,” என்றார் சமந்த்.

மன அழுத்தத்தை எவ்வாறு கையாள்கிறார் என்பது குறித்து பேசுகையில் யஷஸ்வி சிரித்தவாறே,

”கிரிக்கெட்டில் மன அழுத்தத்தை சந்திப்பது குறித்தா பேசுகிறீர்கள்? நான் அதை என் அன்றாட வாழ்க்கையில் சந்தித்துள்ளேன். ரன்கள் எடுப்பது முக்கியமல்ல. நான் ஸ்கோர் எடுத்து விக்கெட் எடுப்பேன் என்பது எனக்குத் தெரியும். என்னைப் பொருத்தவரை என்னுடைய அடுத்த வேளை உணவு எனக்குக் கிடைக்குமா இல்லையா என்பதுதான் முக்கியம்,” என்கிறார்.

கட்டுரை : THINK CHANGE INDIA