பள்ளி இடைநிறுத்த மாணவர்கள் எண்ணிக்கையைக் குறைக்க பள்ளிப் பேருந்தை ஓட்டிச் செல்லும் ஆசிரியர்!

0

கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பாரலி கிராமத்தைச் சேர்ந்த 47 வயதான ராஜாராம், பாரலி அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் பள்ளி வேனை ஓட்டுகிறார். அவர்களை பள்ளியில் இறக்கிவிட்டதும் விரைந்து வகுப்பறைக்குச் சென்று வகுப்பெடுக்கிறார். ஏனெனில் அவர் ஒரு ஆசிரியர். 

பாரலி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியைச் சென்றடைய தினமும் ஆறு கிலோமீட்டர் கடுமையான பாதைகளைக் கடந்து செல்லவேண்டும். குழந்தைகள் இத்தகைய காட்டுப் பகுதியைக் கடந்து செல்லவேண்டியிருப்பதால் அவர்களது பாதுகாப்பு குறித்து பெற்றோர், குறிப்பாக பெண் குழந்தைகளின் பெற்றோர் வெகுவாக அஞ்சினர். இதனால் கடந்த ஓராண்டாக அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பள்ளிப் படிப்பை நிறுத்தி வந்தனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராஜாராம் இந்தப் பிரச்சனைக்கு நிச்சயம் தீர்வுகாணவேண்டும் என தீர்மானித்தார்.

பள்ளிப் பேருந்தை ஓட்டாத நேரத்தில் ராஜாராம் அறிவியல் மற்றும் கணிதப்பாடம் எடுப்பார் என ’தி லாஜிக்கல் இண்டியன்’ குறிப்பிடுகிறது. தி நியூஸ் மினிட் உடனான உரையாடலில் அவர் கூறுகையில்,

குழந்தைகளின் வீடுகளில் இருந்து பள்ளிக்குச் செல்வதற்கான சாலைகள் இல்லை. காட்டு வழியாக ஒரு மண் பாதை உள்ளது. பெரும்பாலான மாணவிகளின் குடும்பத்தினர் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று திரும்ப ஆறு கிலோமீட்டர் நடந்து செல்வதற்கு அனுமதிக்க பயந்ததால் அவர்கள் இடைநிறுத்தம் செய்யத் துவங்கினர்.

ஒவ்வொரு வாரமும் ஐந்து முதல் ஆறு மாணவர்கள் இடைநிறுத்தம் செய்ததால் பள்ளியை மூடவேண்டிய நிலை ஏற்பட்டது என்றார். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான விஜய் ஹெக்டே மற்றும் கணேஷ் ஷெட்டியை அணுகி பள்ளிப் பேருந்து வாங்கும் யோசனையை முன்வைத்தார். மூவரும் பணத்தை திரட்டி பேருந்து வாங்கினர். பேருந்து ஓட்டுநரை பணியில் நியமித்தால் கூடுதல் செலவாகும் என்பதால் ராஜாராம் ஓட்டுநர் பணியையும் தானே முன்வந்து ஏற்றுக்கொண்டார்.

அரசாங்கப் பள்ளி ஆசிரியராக குறைவான வருவாயே ஈட்டி வந்தேன். இதைக் கொண்டு ஓட்டுநருக்கு சம்பளம் கொடுக்க இயலவில்லை. பேருந்தை ஓட்ட கற்றுக்கொண்டு அந்தப் பணியை நானே மேற்கொள்ளத் தீர்மானித்தேன்.

இந்த கூடுதல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டதால் ஐம்பதாக இருந்த மாணவர்களின் எண்ணிக்கை 90-ஆக உயர்ந்தது. பள்ளி நேரம் காலை 9.30 மணிக்குத் துவங்குவதால் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர நான்கு முறை ராஜாராமால் சென்று திரும்ப முடிகிறது. ராஜாராமுடன் சேர்த்து மொத்தம் மூன்று ஆசிரியர்கள் இப்பள்ளியில் உள்ளனர்.

கட்டுரை : THINK CHANGE INDIA