மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல்,  வறுமை போக்குதல், என அக்யூமென் இந்தியாவின் சமூக தொண்டுகள்!

0

உலகம் முழுவதும் இரண்டு பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு கல்வி, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட கிடைப்பதில்லை. இதனால் அவர்கள் ஆரோக்கியம் சீர்குலையும் என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிடுகிறது. இந்தப் பிரச்சனையின் அடிப்படைக் காரணம் வறுமை.

மற்றுமொரு கொடை வழங்கும் பிரிவாக செயல்படாமல் நிறுவனங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்துவோரிடமும் முதலீடு செய்யும் நோக்கத்துடன் 2001-ம் ஆண்டு ஜாகுலின் நோவோகிராட்ஸ் அவர்களால் துவங்கப்பட்டது அக்யூமென் (Acumen). இந்தியாவில் 2006-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நியூயார்க்கைச் சேர்ந்த இந்த நிறுவனம் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் முதலீடு செய்யும் லாப நோக்கமற்ற உலகளாவிய வென்சர் நிதி நிறுவனமாகும்.

”அக்யூமென் இந்தியா சமூக நிறுவனங்களில் முதலீடு செய்வதிலும் தலைமைத்துவ திறனை வழங்குவதிலும் கவனம் செலுத்துகிறது,” 

என்றார் அக்யூமென் இந்தியா இயக்குனர் மகேஷ் யக்ஞராமன்.

கடந்த 17 ஆண்டுகளில் அக்யூமென் கென்யா, கானா, பாகிஸ்தான், இந்தியா, கொலம்பியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் சுமார் 102 சமூக நிறுவானங்களை உருவாக்க 110 மில்லியனுக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் 60,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. அத்துடன் கல்வி, சுகாதாரம், சுத்தமான குடிநீர், ஆற்றல், துப்புரவு போன்ற அடிப்படை வசதிகளை 200 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு வழங்கியுள்ளது.

”நிறுவனங்களுடனோ தனிநபர்களுடனோ இணையும்போது பார்ட்னர்/நன்கொடை வழங்குவோருக்கும் சேவைகள் வழங்கப்படும் திட்டங்களுக்கும் இடையே நெருக்கமாக இணைந்திருந்து செயல்படுவதை உறுதிசெய்கிறோம்,” என்றார்.

தி அக்யூமென் இந்தியா ஃபெலோஸ் திட்டம் ஓராண்டு கால தலைமைத்துவ திட்டம். இதில் இவர்களது சமூக தாக்கம் மற்றும் தலைமைத்துவ திறன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட 20 தனிநபர்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு முதல் ஃபெலோஸ் சமூகத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 92 மாற்றத்தை உருவாக்குபவர்கள் இணைந்துள்ளனர். இவற்றில் உலகம் முழுவதும் உள்ள தொழில்முனைவோர், புதுமை புகுத்துவோர், நிறுவனங்களை உருவாக்குபவர்கள், ஆர்வலர்கள், பொதுத்துறை அதிகாரிகள் போன்றோர் அடங்குவர். வறுமையை ஒழிக்கவேண்டும் என்பதே இவர்களது பொதுவான நோக்கமாகும்.

இந்த திட்டம் எம்பிஏ பாடதிட்டம் போன்றே அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஃபெலோக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வார கால கருத்தரங்குகளுக்கு ஒன்றிணைவார்கள். இதன் மூலம் இவர்களது குழுவையும் அக்யூமெனின் உலகளாவிய சமூகத்தையும் வலுவாக ஒன்றிணைக்கின்றனர். அடுத்த குழுவிற்காக செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அக்யூமென் இந்தியாவால் இன்குபேட் செய்யப்பட்ட சில ஸ்டார்ட் அப்கள் குறித்து யுவர்ஸ்டோரி பகிர்ந்துகொள்கிறது.

1. கெய்தி (Kheyti)

சத்யா ரகு 2015-ம் ஆண்டு கெய்தி துவங்குவதற்காக தனது பணியைத் துறந்தார். இவர் 2025ம் ஆண்டிற்குள் ஒரு மில்லியன் சிறு விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். கெய்தி வாயிலாக விவசாயிகள் சந்திகும் நிதி பிரச்சனைகளுக்கான தீர்வை உருவாக்கியுள்ளார்.

பல்வேறு நிதி நிறுவனங்களையும் வங்கிகளையும் தொடர்பு கொண்ட பிறகு 2017-ம் ஆண்டு விவசாயிகளுக்கு 22 சதவீதத்திற்கு பதிலாக 8.6 சதவீதத்தில் கடன் வழங்கப்படுவதற்காக பேங்க் ஆஃப் பரோடாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார்.

தெலுங்கானாவைச் சேர்ந்த இந்நிறுவனம் விவசாயிகளுக்கு பசுமைக்குடில் அமைத்துக் கொடுக்கிறது. நிலத்தில் இரண்டு சதவீதம் மட்டுமே இதற்குத் தேவைப்படும். மேலும் விவசாயிகள் வருவாய் தொடர்பான நிலையற்ற தன்மையை எதிர்த்துப் போராட மலிவு விலையிலான மாடுலர் பசுமைக்குடிலையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்குத் தேவையான முழுமையான ஆதரவையும் வழங்குகிறது. விவசாயிகள் கடன் பெறவும் விவசாயம் தொடர்பான ஆலோசனை பெறவும் இந்நிறுவனம் உதவுகிறது.

விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த கெய்தி பிக்பாஸ்கட், நார்த்வெஸ்டர்ன் இன்ஸ்டிட்யூட் ஃபார் சஸ்டெயினபிளிட்டி அண்ட் எனர்ஜி, டி-ஹப், அக்ரிப்ளாஸ்ட், AIPICRISAT – Agribusiness and Innovation Platform, அக்யூமென் ஃபண்டர்ஸ்சர்க்கிள் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

2. ராம்ரஹீம் (RamRahim)

2015-ம் ஆண்டு குழுவைச் சேர்ந்த அக்யூமென் இந்தியா ஃபெலோவான ராகவ் ரகுநாதன் Credit Suisse, கேட்டர்பில்லர் போன்ற நிறுவனங்களில் இருந்து கிடைத்த பணி வாய்ப்பை விடுத்து ராம்ரஹீம் நிறுவனத்தில் இணைந்தார். இது மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த நீர்செறிவு மற்றும் வாழ்வாதாரம் சார்ந்த அடிநிலை நிறுவனமாகும்.

ராம்ரஹீம் மக்களால் ஊக்குவிக்கப்படும் முயற்சியாகும். 162 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,500 பெண்களின் கூட்டு முயற்சியே இதன் உந்துசக்தியாகும். இவர்கள் கடன்கொடுப்பவர்கள், வர்த்தகர்கள். இடைத்தரகர்கள் ஆகியோர் நிர்ணயிக்கும் தொகையில் விவசாயிகள் தங்களது விளைச்சலை சந்தையில் விற்பனை செய்யாமல் அவர்களது விருப்பப்படி விற்பனைசெய்யும் உரிமை விவசாயிகளுக்கு இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என்று விரும்புகின்றனர். 

ராம்ரஹீம் விவசாய தனிநபர்களுக்கு பதிலாக சுய உதவிக்குழுக்களை பங்குதாரர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். 

இவர்களது பணியின் மூலம் உந்துதல் பெற்ற ராகவ், குழுவுடன் இணைந்துகொண்டு 85 கிராமங்களில் அதன் செயல்பாடுகளுக்குத் தலைமை வகித்தார். விவசாயிகளுக்காக நிலையான விலைக்கான முறையை அறிமுகப்படுத்தினார். பூச்சிக்கொல்லிகள் இல்லாத பண்ணை உற்பத்தியை சந்தைப்படுத்தும் சமூக நிறுவனமான சேஃப் ஹார்வெஸ்ட் நிறுவனத்துடன் நேரடி பார்ட்னர்ஷிப்பை நிறுவினார். நபார்ட் நிதி சேவை நிறுவனத்திடமிருந்து பிணையம் இல்லாத கடன் பெற்றதன் மூலம் மூலதனத்தை உயர்த்தினார். ராம்ரஹீம் 2012-ம் ஆண்டு தனது செயல்பாடுகளைத் துவங்கியதில் இருந்து முதல் முறையாக அந்த ஆண்டு லாபம் ஈட்டியது.

3. யூத்4ஜாப்ஸ் (Youth4Jobs)

மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு சிறப்பான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் 2012-ம் ஆண்டு மீரா ஷெனாயால் நிறுவப்பட்டது ஹைதராபாத்தைச் சேர்ந்த யூத்4ஜாப்ஸ். வளர்ச்சியிலும் அறிவுத்திறனிலும் குறைபாட்டுடன் வாழ்பவர்களுக்கு உதவி பயிற்சியளிக்கிறது. குறைபாடு இருப்பினும் சக்தி பெறவேண்டும் என்பதே இதன் தத்துவமாகும்.

யூத்4ஜாப்ஸ் வெவ்வேறு குறைகளுக்கு பிரத்யேகமாக, பணியுடன் தொடர்புடைய திறன் மேம்பாட்டு மையங்களை அமைத்துள்ளது.

உணவு, தங்குமிடம் ஆகியவற்றுடன்கூடிய பயிற்சியை வழங்குகிறது. ஆங்கிலம், கணிணி, மென் திறன்கள் மற்றும் துறைசார் திறன்கள் போன்றவற்றில் தனிப்பட்ட முறையில் வடிவமைக்கப்பட்ட பாடத்தொகுப்புகளை உருவாக்கியுள்ளது. இதன் பிறகு பணி தொடர்பான பயிற்சியும் வழங்குகிறது. வேடிக்கையாக ஊடாடும் வகையிலான உள்ளடக்கத்துடன் இளைஞர்களின் படிப்பு மற்றும் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு அது சார்ந்த பிரிவுகளில் பயிற்சியளிக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் ஆரம்பகட்ட நிதி ஆக்சிஸ் வங்கி ஃபவுண்டேஷனில் இருந்து பெறப்பட்டாலும் தனிப்பட்ட கொடையாளர்களும் ஆதரவளிக்கின்றனர். கூட்டுநிதி தளம் ஒன்றின் வாயிலாகவும் நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இன்று யூத்4ஜாப்ஸ் 12 மாநிலங்களில் 22 பயிற்சி மையங்களைக் கொண்டுள்ளது. பார்வை குறைபாடுள்ளவர்களுக்கென இரண்டு பயிற்சி மையங்கள் உள்ளது. 2,00,000 சமூக உறுப்பினர்களையும் 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்களையும் சென்றடைந்துள்ளது.

4. சுகிபவா (Sukhibhava)

பெங்களூருவைச் சேர்ந்த சுகிபவா நகர்புறங்களில் உள்ள குடிசைப்பகுதிகளைச் சேர்ந்த பெண்களுடன் பணியாற்றி மாதவிடாய் சுகாதாரம் குறித்து கற்பிக்கிறது. அத்துடன் உள்ளூரிலேயே பயிற்சியளிக்கப்பட்ட குறு பெண் தொழில்முனைவோர் வாயிலாக சானிடரி பேட் போன்ற மாதவிடாய் தொடர்பான சுகாதார பொருட்களையும் மலிவு விலையில் வழங்குகிறது.

திலீப் பட்டுபலாவால் 2013-ம் ஆண்டு நிறுவப்பட்ட சுகிபவா 7,200 பெண்களைச் சென்றடைந்து மலிவு விலை சானிட்டரி பேட்களை வழங்கியுள்ளது. மாதவிடாய் காலத்தின் சுகாதாரம் குறித்து இதுவரை 11,800-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. தற்போது பெங்களூருவின் தெற்கு பகுதியில் உள்ள 18 குறு பெண் தொழில் முனைவோர்களுடன் பணியாற்றி வருகிறது.

”என்னுடைய கனவே சுகிபவாவின் நோக்கமாகியது. மாதவிடாய் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுத்தவேண்டும் என்பதே என் கனவு. அதிகம் பேசப்படாத பிரச்சனைகளில் பணிபுரியவே விரும்புகிறேன். அடுத்த திட்டம் வாயிலாக குடும்பக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்,” 

என்றார் அக்யூமென் ஃபெலோ 2016 குழுவைச் சேர்ந்த திலீப். இந்நிறுவனம் சுயநிதியில் இயங்கி வருகிறது. சானிட்டரி பேட்களை விற்பனை செய்வதன் மூலம் வருவாய் ஈட்டி வருகிறது. சானிட்டரி பேட்களை மிகவும் குறந்த விலையில் விற்பனை செய்வதால் லாபமும் குறைவாகவே உள்ளது. இதனால் தங்களை நிலைப்படுத்திக்கொள்ள அதிக நேரம் எடுக்கும் என்கிறார் திலீப். 

யூஎன் ஹேபிடட்ஸ் இண்டியா யூத் ஃபண்ட், அக்யூமென் ஃபெலோஷிப், நாஸ்காம் ஃபவுண்டேஷன்’ஸ் சோஷியல் இன்னோவேஷன் அவார்ட்ஸ், டாடா சோஷியல் எண்டர்பிரைஸ் சாலஞ்ச், ஐஐஎம்பி’ஸ் அன்சங் ஹீரோஸ் போன்றவை சுகிபவாவின் தாக்கத்தை அங்கீகரித்துள்ளது.

5. ப்ராஜெக்ட் KHEL (Project KHEL)

ப்ராஜெக்ட் KHEL லக்னோவில் 2012-ம் ஆண்டு அக்‌ஷய் அப்ரஹாமால் நிறுவப்பட்டது. வகுப்பறையைத் தாண்டி கல்வியை எடுத்துச் செல்லவேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். லாப நோக்கமற்ற இந்நிறுவனம் நலிந்த பின்னணியைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு புதுமைகள், கல்வி மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டை வழங்க விளையாட்டு மற்றும் ஊடாடும் விளையாட்டு நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இளம் பருவத்தினரை பாலினம் சார்ந்த பாகுபாடுகள் இல்லாத குடிமக்களாக உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

”நலிந்த பிரிவினைச் சேர்ந்த இளம் பருவத்தினரிடையே அடிப்படை வாழ்க்கைத் திறன்கள் இல்லாதுபோனால் அது அவர்களது தனிப்பட்ட, சமூக மற்றும் அறிவாற்றல் வளர்ச்சியை மட்டுப்படுத்தும். இது எதிர்மறை தாக்கத்தையே ஏற்படுத்தும்,” என இக்குழுவினர் விவரித்தனர்.

ப்ராஜெக்ட் KHEL பாதுகாப்பான விளையாட்டுப் பகுதிகளை உருவாக்கி கதை சொல்லுதல், தியேட்டர், நடனம், விளையாட்டு போன்றவை மூலம் முழுமையான, ஊடாடும், அனுபவம் வாய்ந்த கற்றலை வழங்குகிறது. யூனிசெஃப் இந்தியா, லெட்ஸ் சேன்ஞ், லெட்ஸ்ட்ரீம் ஃபவுண்டேஷன் ஆகியவை மூலம் நிதியுதவி பெற்றுள்ள இந்த ஸ்டார்ட் அப் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள், மாதவிடாய் சுகாதார மேலாண்மை, பருவமடைதல் போன்றவை சார்ந்த முக்கிய பிரச்சனைகளை மையமாகக் கொண்ட பட்டறைகளை ஏற்பாடு செய்கிறது.

6. ஹெல்ப் அஸ் க்ரீன் (Help Us Green)

2015-ம் ஆண்டு அன்கித் அகர்வால் மற்றும் கரண் ரஸ்தோகியால் நிறுவப்பட்ட ஹெல்ப் அஸ் க்ரீன் கங்கை நதியை பாதுகாக்கும் நோக்கத்துடன் செயல்படும் சமூக நிறுவனமாகும்.

அன்கித் கூறுகையில், “இந்தியாவில் சுமார் ஒரு பில்லியன் மக்கள் தினமும் கோயில்கள், மசூதிகள் மற்றும் குருத்வாராக்களில் பூக்கள் கொடுக்கின்றனர். இந்த மலர்கள் பின்னர் நதிகளில் அப்புறப்படுத்தப்படுகின்றன. ஆனால் அதன் பின்விளைவுகளை யாரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை,” என்றார்.

”இந்த மலர்கள் அழுகி தண்ணீரில் வாழும் மீன்களையும் மற்ற உயிரினங்களையும் கொல்கிறது. பூக்களை வளர்க்க பயன்படுத்தப்பட்ட பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் நதி நீரில் கலந்து அதிக நச்சுத்தன்மையுடையதாக (pH 4.7) மாற்றிவிடுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800,000 டன் பூக்களின் கழிவுகள் இந்திய ஆறுகளில் கொட்டப்படுகிறது. இதனால் நீரில் வாழும் உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன,” என்றார்.

எனவே இவற்றை மண்புழுக்களின் உதவியுடன் உரமாக்கி கார்பன் அடிச்சுவடு இல்லாத, ரசாயன உரங்களுக்கான மாற்றாக உருவாக்கும் புதுமையான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். இந்த உரத்திற்கு 'Mitti’ என பெயரிட்டுள்ளனர்.

டாடா ட்ரஸ்டின் சோஷியல் ஆல்ஃபா, க்ரீன்ஃபீல்ட் வென்சர்ஸ், இகோயிங் க்ரீன் ஆகிய நிறுவனங்களின் நிதியுதவியுடன் கான்பூரைச் சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப் இரண்டு கோடி வருவாய் ஈட்டுகிறது. தற்போது இவர்களது மூன்று தொழிற்சாலைகள் வாரனாசி மற்றும் மதுராவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் 38 டன் பூக்கள் உரமாக்கப்படுகிறது.

ஆங்கில கட்டுரையாளர் : ஸ்ருதி கேடியா | தமிழில் : ஸ்ரீவித்யா