'ஸ்டார்ட்- அப் வீக்கெண்ட்' வெற்றியாளர்கள் அறிவிப்பு

0

பரபரப்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற தொழில்முனை சிந்தனைகளை முன்னெடுத்து செல்லும் தளமான ஸ்டார்ட்-அப் வீக்கெண்ட் நேற்று மாலை இனிதே முடிந்தது. முதல் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட பதினாறு சிந்தனைகள், முழு வடிவம் பெற்று இறுதி நாளான நேற்று, அந்தந்த குழுக்கள் ஜூரியின் முன் தங்களின் ஐடியாவை முன்னிலை படுத்தியது. இதிலிருந்து மூன்று சிந்தனைகளை தேர்வுக் குழு தேர்ந்தெடுத்தனர்.

தேர்வுக் குழு

ஐந்து நபர் குழுவில், ஆரஞ்சு ஸ்கேப் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம், க்ரியா நிறுவனர் பிரவீன் சேகர், TiE சென்னை இணை தலைவர் வீ சந்திரசேகரன், ஐமோர்ப் நிறுவனர் துரை தொடலா மற்றும் பேபல் ஸ்டார்ட் டான்க் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் குமார் ஆகியோர் இடம்பெற்றனர்.

சிந்தனைகளின் பதிவு

மொத்தம் பதினாறு குழுக்கள் தங்களின் சிந்தனைகளை முன்னிலை படுத்தத் தயார் நிலையில் இருந்தன. ஒவ்வொரு குழுவிற்கும் அவர்களின் சிந்தனையை பதிவு செய்ய நான்கு நிமிடங்கள் தரப்பட்டன, தற்போதுள்ள எந்த ஒரு சவாலை இவர்கள் தீர்க்கின்றனர், சிந்தனை வடிவம் மற்றும் செயல்படுத்தும் விதம் ஆகியவற்றை நான்கு நிமிடங்களில் விளக்க வேண்டும், இதனைத் தொடர்ந்து இரண்டு நிமிடங்கள் ஜூரியின் கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டன.

மென்பொருள் உருவாக்குபவர்களின் சவால்களை தீர்க்கும் 'ஸ்டேக் ஈஸி' ; மாணவர்கள் தங்களின் ப்ராஜக்டை சிரமமின்றி மேற்கொள்ள 'கோ கோ காட்ஜட்' ; உழவர்களுக்கான 'FடுM' ; உடல் ஊனமுற்றோருக்கான எளிமையாகக் கையாளக்கூடிய வண்டி 'ஈஸ்க்டடிக் டிரைக்' ; தனி நபருக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஆஃபர் தரும் 'ஹாப்பர்' ; நிறுவனங்களுக்கு அவர்களின் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தை பொருத்து தயாரிப்புகளை தர உதவும் 'பிஸ்லாக்' ; விமான பயணத்தில் பயன்படுத்தப்படாத லக்கேஜ் இடத்தை பிறருக்கு விற்க உதவும் 'லஹ்ஹி' ; ஆன்லைன் வர்த்தகம் மேற்கொள்ளும் முன் சிறந்த பேரங்களை பெற உதவும் 'பார்கைன் மீ' ; எல்லை ரோந்தை நவீனப்படுத்த 'ஸ்வார்ம் போட்ஸ்' ; ஆன்லைனில் இலகுவாக சிவில் வழக்குகளை மத்தியஸ்தம் பெற 'மீடியேஷன்' ; பெண்கள் தங்களின் விருப்பதிற்கேற்ப துணி ரகம் மற்றும் தையல்காரர் தேர்ந்தெடுக்க 'ஸ்மாஜீ' ; தனித்துவமான பரிசுப் பொருட்களை உருவாக்க உதவும் 'கெத்துகிப்ட்' ; நம் அலமாரியில் இருக்கும் துணிகளைக் கொண்டு பல்வேறு சூழலுக்கேற்ப அணிந்து கொள்ள உதவும் 'எய்ட்கோஸ்' ; மருத்துவ சுற்றுப்பயணத்திற்கான 'மெடி வெகேஷன்' ; காட்ஜட் பழுதை வீடு வாசற்படியிலே சரி செய்ய உதவும் 'பிக்ஸ்ஸல்லோ' என பல்வேறு விதமான சிந்தனைகள் பகிரப்பட்டன.

பங்கேற்பாளர்களின் பேவரைட்

முன்னிலைப்படுத்தப்பட்ட சிந்தனைகளை, குழு தேர்ந்தெடுக்கும் கால அவகாசதிர்க்கு இடையில் கூட்டத்தினருக்கு பிடித்த சிந்தனை எது என்ற வாக்கெடுப்பு எடுக்கப்பட்டது. 'லஹ்ஹி', 'பிக்ஸ்ஸல்லோ' பெருவாரியான வாக்குகளை பெற, 'பார்கைன் மீ' மற்றும் 'கெத்துகிப்ட்' ஆகிய குழுக்களும் விருப்பப் பட்டியலில் இணைந்தன. இறுதியில் 'லஹ்ஹி' யை விட ஒரு வாக்கு வித்தியாசத்தில் 'பிக்ஸ்ஸல்லோ' கூட்டத்தினரின் அமோக ஆதரவை பெற்றது.

தேர்வுக்குழுவின் கருத்து

தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதி பட்டியலை அறிவிக்கும் முன் ஜூரியில் இடம்பெற்றவர்கள் தங்களின் கருத்தை பகிர்ந்து கொண்டனர்.

ஆரஞ்சு ஸ்கேப் சுரேஷ்சம்பந்தம் கூறுகையில்,

"உங்களின் வாடிக்கையாளர்கள் மற்றும் போட்டியாளர்களை பற்றியும் அறிந்திருத்தல் அவசியம்" என்று கூறினார்.
 "முன்னிலைப்படுத்தப்படுபவை கச்சிதமாகவும் எழுத்துப் பிழையின்றியும் இருத்தல் அவசியம்" என்று அறிவுறுத்தினார் பேபல் ஸ்டார்ட் டான்க் பிரதீப் குமார். 

இதே எண்ணத்தை TiE இணை நிறிவனர் சந்திரசேகரும் வலியுறுத்தினார். க்ரியா நிறுவனர் பிரவீன், 'கம்யூனிகேஷனின்' அவசியத்தை வலியுறுத்தினார்.

ஐமோர்ப் துரை தொடலா, "எண்ணங்களில் ஆற்றல் வளம் இருந்ததாகவும் அதே சமயம் தொழில் முனைவர்கள் மேலும் ஆழாமான சிந்தனை பெற வேண்டும்" என்று கூறினார்.

வெற்றியாளர்கள்

பல்வேறு அளவுருக்கள் அடிப்படையில் மூன்று சிந்தனைகளை தேர்ந்தெடுத்தாக ஜூரி அறிவித்தனர். கெத்துகிப்ட், மீடியேஷன் மற்றும் பிக்ஸ்ஸல்லோ குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவர்களைத் தவிர மெடி வெகேஷன் மற்றும் ஈஸ்க்டடிக் டிரைக் சிறப்பு குறிப்பைப் பெற்றன.

ஸ்டார்ட் அப் வீக்கெண்ட் ஒருங்கிணைப்பாளர் சுமுக் கூறுகையில்,

"உலக சமூகமாக செயல்படும் இத்தளத்தில் முன்னிலைபடுத்தப்பெறும் சிந்தனைகளில் சுமார் பனிரெண்டு சதவிகித குழுக்கள் தங்கள் சிந்தனையை செயல் வடிவம் கொடுத்து முன்னெடுத்து செல்கின்றனர்" என்றார்.

இதில் பங்கேற்ற பெரும்பாலானோர் தாங்கள் ஒரு தொழில்முனைவை பற்றிய புரிதலையும், புதிய தொழில்நுட்பத்தை அறிந்ததாகவும், புது நண்பர்கள் கிடைத்ததாகவும் கூறினார், மேலும் குழுவாக செயல்பட்ட அனுபவம் உத்வேகம் அளித்ததாகவும் கூறினர்.

நாம் உரையாடிய அனைவருமே தங்களின் எண்ணத்தை முன்னெடுத்து செல்லும் திட்டத்தில் தீர்கமாக இருப்பதாகவே கூறினர்.

ஸ்டார்ட்-அப் வீக்எண்ட் நிகழ்வில் தமிழ் யுவர்ஸ்டோரி ஊடக பார்ட்னராக இடம் பெற்றது.  

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்