உணவு டிரக் தொழிலை துவங்க எளிய வழிகள்... 

இந்த கட்டுரையில், சட்ட விதிகளை பின்பற்றுவது முதல், தொழில்நுட்ப, மார்க்கெட்டிங் வழிகாட்டுதல் வரை உங்கள் சொந்த உணவு டிரக் தொழிலை துவக்குவது எப்படி என விளக்குகிறேன். 

2

இந்தியாவில் மேம்பட்டு வரும் உணவு தொழிலில் அண்மைக்காலமாக உணவு டிரக் வர்த்தகம் முன்னேற்றம் காணத்துவங்கியுள்ளது. உணவு டிரக்கை இயக்குவதில் உள்ள வசதி காரணமாக அதன் உரிமையாளர்கள் பல இடங்களை அணுக முடிகிறது. ரெஸ்டாரண்ட் வர்த்தகம் அல்லது வேறு வகை உணவு வர்த்தகத்திற்கு தேவையானதை விட குறைந்த முதலீட்டில் இதை செய்யலாம். ரெஸ்டாரண்ட் அல்லது வேறு வகை உணவு வர்த்தகத்தை விட உரிமையாளர்கள் உணவு டிரக்கில் தங்கள் முதலீட்டை செலுத்த முன் வருவதில் வியப்பில்லை.

உணவு டிரக் வர்த்தகத்தை துவக்கும் வழிகள்:

1. சரியான வாகன தேர்வு

சரியான டிரக் அல்லது வர்த்தக வாகனத்தை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். 18 அடி நீளம் கொண்ட வாகனம் தேவை. உணவு டிரக் வர்த்தகத்தை துவக்க ரூ.7 முதல் 8 லட்சம் தேவைப்படலாம். அசோக் லேலெண்ட், டாடா மற்றும் மகிந்திரா உள்ளிட்ட நிறுவன டிரக்குகளை தேர்வு செய்யலாம். பயன்படுத்திய டிரக்கை வாங்கியும் தொகையை மிச்சமாக்கி வேறு செலவுகளுக்கு பயன்படுத்தலாம். எனினும் பயன்படுத்திய வாகனத்தை வாங்கும் போது, அதன் நிலை, பயன்பாடு, பதிவு ஆவணங்கள் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். மேலும் அது ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பழைமையானதாக இருக்கக்கூடாது. ஏனெனில் பல மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், 10 ஆண்டு பழமையான வர்த்தக வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்க பரிசீலித்து வருகின்றன.

பழைய உணவு டிரக்கில் திருத்தம் செய்து தேவையான படி அமைத்துக்கொள்ளலாம். இதற்கு ஒரு லட்சம் வரை ஆகலாம். இதன் படி பார்த்தால் சமையலறை வசதி நீங்கலாக பழைய டிரக்கின் மொத்த செலவு ரூ. 5 லட்சமாக இருக்கும். 450 அடி சதுர அடி ரெஸ்டாரண்டிற்கான வாடகை தொகையோடு ஒப்பிடும் போது இது அதிகமாக இருக்கலாம் ஆனால், நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது உணவு டிரக் பலன் மிக்கதாக இருக்கும்.

2. மூலப்பொருட்கள் மற்றும் சமயலறை பொருட்கள்

உணவு டிரக் வர்த்தகத்தில் மூலப்பொருட்கள் முக்கியம். மூலப்பொருட்கள் மற்றும் சமையலறை பொருட்களுக்காக ரூ. 3 லட்சம் வரை தேவைப்படலாம். இந்த முதலீட்டில் மைக்ரோவேவ் அடுப்பு, மிக்சி, ஸ்டீமர் போன்றவற்றை வாங்க வேண்டியிருக்கும். இவைத்தவிர மேஜை நாற்காலிகள் வாங்கலாம். மின்னணு பொருட்களைப் பொருத்தவரை புதியவற்றை வாங்குவதே நல்லது. சமையலறை பொருட்களுக்கு பழையவற்றை நாடலாம். இருப்பை பொருத்தவரை வர்த்தகத்தின் போக்கை கவனித்து செயல்படவேண்டும். வர்த்தகத்திற்கு செயல் மூலதனமும் தேவை.

3. சட்ட உரிமம் மற்றும் கட்டுப்பாடு

உணவு டிரக் வர்த்தகத்திற்கு பல்வேறு வகையான உரிமம் மற்றும் பதிவு தேவைப்படலாம். முதலில் உங்கள் வர்த்தகத்தை முறைப்படி பதிவு செய்து கொள்ள வேண்டும். பிரைவெட் லிட் அல்லது உரிமையாளர் நிறுவனமாக பதிவு செய்யலாம். மேலும் வங்கியில் நடப்பு கணக்கு துவங்கி, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ பதிவு போன்ற உரிமம் பெற வேண்டும். உணவு டிரக்கை பயன்படுத்த நகராட்சி மற்றும் போக்குவரத்து அலுவலகங்களில் இருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். தீ விபத்து பாதுகாப்பு சான்றிதழ் மற்றும் காப்பீடு பெற வேண்டும். ஒரு ஸ்டார்ட் அப் என்ற முறையில், துவக்கத்தில் பதிவு செய்து கொண்டு பின்னர் மற்ற சான்றிதழ்களை பெறலாம்.

4. தொழிலாளர்கள் அம்சம்

உங்கள் வர்த்தகத்திற்கு ஏற்ப தொழிலாளர்கள் தேவை. உதாரணத்திற்கு வீட்டுக்கு வீடு டெலிவரி சேவை அளிக்க விரும்பினால் அதற்கேற்ற தொழிலாளர்கள் தேவை. துவக்கத்தில் நல்ல உணவு தயாரிக்கக் கூடிய ஒரு தலைமை சமையல் கலைஞரை அமர்த்திக் கொள்ளலாம். ரூ.15,000 வரையான சம்பளத்தில் சமையல் கலைஞர்களை அமர்த்திக் கொள்ளலாம். ஆனால், சுவையான உணவு முக்கியம் என்பதால் நல்ல சமையல் கலைஞரை நாடுவது அவசியம்.

5. பி.ஒ.எஸ் மென்பொருள்

இப்போது வாடிக்கையாளர்களுக்கான பில்லிங் முறையை கவனிப்போம். ஜி.எஸ்.டி அமலுக்குப்பின், வாடிக்கையாளர் பில் மற்றும் வரி பொறுப்பை கவனிக்க மென்பொருள் தேவை. இதற்கான உணவு பி.ஒ.எஸ் கருவியை வாங்கலாம். அல்லது வாடிக்கையாளர் பில்லை கையாளும் மென்பொருளை பயன்படுத்தலாம். பி.ஒ.எஸ் கருவி மூலம் தொடர் வாடிக்கையாளர்களுக்கு சலுகை அளித்து கவரலாம். இதற்கான மென்பொருள் மாதம் ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை ஆகலாம்.

6. ஊழியர்களுக்கான டி-ஷர்ட்

உணவு டிரக் வர்த்தகத்தில் பிராண்டிங் முக்கியம். இது விற்பனையை அதிகரிக்கவும் உதவும். சமையல் கலைஞர்கள் மற்றும் ஊழியர்கள் உங்கள் பிராண்ட் பெயர் பதித்த டி-ஷர்ட் வழங்கலாம். ஒரு டி-ஷர்ட் 150 ரூ 300 ரூ வரை ஆகலாம். இணையம் மூலமும் இதை ஆர்டர் செய்யலாம். டெலிவரி ஊழியர்களுக்கும் நிறுவன டி- ஷர்ட் அளிப்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிராண்ட் அடையாளத்தை பதிய வைக்கலாம்.

7. உணவு டிரக் வர்த்தக விளம்பரம்

டிரக் உணவு வர்த்தகத்தை பலவிதங்களில் விளம்பரம் செய்யலாம். மார்க்கெட்டிங் இல்லாமல் வருவாயை அதிகரிக்க முடியாது. துவக்கத்தில் பிராண்டை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். உள்ளூர் பகுதியில் துண்டு விளம்பரங்களை விநியோகிக்கலாம். இதுதவிர பேனர் மற்றும் விளம்பர பலகைகளை நாடலாம். வீடு வீடாக நேரில் சென்று மக்களை உங்கள் உணவு டிரக்கிற்கு வந்து சுவைத்து பார்க்குமாறு அழைப்பு விடுக்கலாம்.

ஆன்லைன் மார்க்கெட்டிங் உத்தியையும் நாடலாம். ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தலாம். ஃபேஸ்புக் விளம்பரங்கள் மூலமும் வாடிக்கையாளர்களை குறிவைக்கலாம். வாடிக்கையாளர் கருத்துக்களை தெரிவிக்க கூகுள் லிஸ்டிங் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தலாம். மேலும் ஜோமேட்டோ அல்லது ஸ்விகி போன்ற உணவு டெலிவரி சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த வழிகளை பின்பற்றுவதன் மூலம் உணவு டிரக் வர்த்தகத்தை துவக்கலாம். மெட்ரோ நகரங்களில் குறைந்த முதலீட்டில் மேற்கொள்ளக்கூடிய பிரபலமான ஐடியாவாக இது உள்ளது. வெளிநாடுகளில் உணவு டிரக் ஸ்டார்ட் அப்கள் வெற்றிகரமாக விளங்குகின்றன. இந்த வழிகாட்டி உங்களுக்கு ஈர்ப்புடையதாக இருந்தால், கருத்துக்களை பின்னூட்டமாக தெரிவிக்கவும்.

 ஆங்கில கட்டுரையாளர்: தேவ் பட்டேல் / தமிழில்: சைபர்சிம்மன்

(இக்கட்டுரை வாசகர் ஒருவரால் எழுதப்பட்ட யுவர்ஸ்டோரி சமூக பதிவாகும். இதன் உள்ளடக்கம், புகைப்படங்கள் அதன் ஆசிரியருக்கு உரியவை. இதில் உள்ளவை ஏதேனும் காப்புரிமை மீறல் என கருதினால் எங்களுக்கு எழுதவும் )