சுவரோவியம் மூலம் அரவாணிகள் சமூகத்தை இணைக்கும் பூர்ணிமா...

0

அரவாணி ஆர்ட் ப்ராஜக்ட். பூர்ணிமா சுகுமார் சுவர் ஓவியங்கள் மூலமாக மும்பை, புனே கொல்கத்தா நகரங்களில் உள்ள சிகப்பு விளக்கு பகுதிகள், சேரிகள் என அரவாணிகள் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளில், தெருக்களில் மாற்றம் கொணர முயன்று வருகின்றார். அரவாணிகள் உதவியோடு தற்போது இதனை செய்து வருகின்றார்.

சுவர்கள் சமூகங்களை பிரிப்பதற்காக அல்ல, அவற்றை இணைப்பதற்கும் பயன்படும் என்பதை தங்களில் ஓவியங்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர். மக்களை இணைக்க சுவரோவியங்கள் பயன்படுகின்றன என்கிறார் பூர்ணிமா சுகுமார். இவர் அரவாணி ஆர்ட் ப்ராஜக்ட்டின் நிறுவனர். சுவர் சித்திரங்கள் வரைவதில் கைதேர்ந்தவர் பூர்ணிமா. அவரது சுவரோவியங்கள் மூலம், அரவாணிகள் சமுகத்திற்கு, அவர்களைச் சுற்றி உள்ள பகுதிகளோடு ஒரு தொடர்பு உருவாக்க முயன்று வருகிறார்.

2016-ல் துவங்கப்பட்டது இந்த அரவாணி ஆர்ட் ப்ராஜக்ட். இதற்கான எண்ணம் அரவாணிகள் திருவிழாவில் இருந்து உருவானது.

துவங்கப்பட்டதில் இருந்து புனே, மும்பை , கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள சிகப்பு விளக்கு பகுதிகள், சேரிகள் என 14 பகுதிகளில் இந்த வேலை நிறைவு பெற்றுள்ளது. இதற்கு அரவாணிகள் உதவி புரிந்துள்ளனர். தனது சுவரோவியங்கள் மூலம் தற்போது உண்மை வாழ்க்கை சம்பவங்கள், அரவாணிகள் எதிர்கொள்ளும் இன்னல்கள், என பலவற்றை மக்களுக்கு எடுத்து சொல்லுவதன் மூலம், என அந்த சமுகத்துடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார் பூர்ணிமா.

“இந்த அனுபவம் பல நேரங்களில் சாகசம் மிகுந்ததாகவும், பித்து பிடித்தது போன்றும் கலவையாக இருந்துள்ளது. ஆனால் சமூக கட்டுகளுக்கு எதிராக போராடுவது மட்டும் மாறவே இல்லை,” என்கிறார் பூர்ணிமா.

வாழ்வை மாற்றிய தருணம் :

2014 ஆம் ஆண்டு ஒரு ஆவணப்பட இயக்குனர் அரவாணிகள் சமூகத்தைப்  பற்றிய ஒரு ஆவணப்படம் உருவாக்க எண்ணி பூர்ணிமாவை அணுகியுள்ளார். அந்த வாய்ப்பு தான் தனது வாழ்வை மாற்றிய தருணம் என்கிறார் பூர்ணிமா.

“அந்த ஆவணப்படத்தை முடிக்க எங்களுக்கு மூன்றரை ஆண்டுகள் ஆனது. அது கொடுத்த அனுபவம் மூலம், இந்த சமூகம் எவ்வாறு அவர்களை ஒதுக்கித் தள்ளுகிறது என்பதை நான் எண்ணி வெருப்படைந்திருந்தேன். அரவாணிகள் சமூகம் என்பது நல்ல மனது படைத்த மனிதர்கள் நிறைந்த சமூகமாக இருந்தது. ஆனால் அவ்வாறு அது பார்க்கப்படவில்லை. நான் சந்தித்த ஒவ்வொரு பெண்மணியும் தைரியமானவர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சந்தித்து வரும் இன்னல்கள் மிகப்பெரியது. இவற்றை கண்டபொழுது அவர்களிடம் இருந்த நேர்மறையான விஷயங்களை பார்க்க தூண்டியது. மற்றவர்களை எதிர்கொள்ளும் அவர்களது நம்பிக்கை எனக்கு உத்வேகமளித்தது.”

அந்த ஆவணப்படம் முடிந்த போது அந்த சமூகத்தில் இருந்து பல விஷயங்கள் நாம் எடுத்துகொண்டோம் ஆனால் எதுவும் திருப்பி அளிக்கவில்லை என்ற எண்ணம் பூர்ணிமா மனதில் இருந்துள்ளது. எனவே திருப்பி அளிக்க முடிவு செய்தார் அவர். சுவரோவியங்களில் அவர்கள் சமூகத்தினரை ஈடுபடுத்தி, அவர்களை உள்வாங்கும் வாய்ப்பினை பெற்றார். அவர்களை மேலும் புரிந்துகொள்ள முயன்றார். அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமாக, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் துணையாகவும் இருக்கத் துவங்கினார்.

“இங்கே நான் உண்மையை கூறியாக வேண்டும். அவர்கள் நம்பிக்கையை பெறுவது என்பது பெரும் சிக்கலாக இருந்தது. அதில் முழுமையாக வெற்றி கிட்டவில்லை என்றே கருதுகிறேன். அவர்கள் அவர்களாக இருப்பதற்காக பல ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளோம். ஆனால் அவர்கள் என்னோடு சுவரோவியங்களில் பங்கு பெறுவது மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டது போன்று உணர்கின்றேன். அவர்களின் அடையாளங்களை, அவர்களது கதைகளை தவறாக பயன்படுத்துவோர் குறித்து அவர்கள் எச்சரிக்கையாக உள்ளனர். பல முறை அவர்களை கொண்டு புகைப்படம் மற்றும் காணொளிகள் எடுக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் செலவளிக்கும் நேரத்திற்கு எந்த பணமும் தரப்படுவது இல்லை,” என்கிறார் பூர்ணிமா.

அரவாணிகள் சமூகம் என்பது மிகவும் நெருக்கமான ஒன்று என்பதால், ஒரு இடத்தில் அவர்களோடு பணிபுரிவது அரவாணி ப்ராஜக்ட்டை மற்ற இடங்களிலும் கொண்டு சேர்க்க உதவியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல சமூகங்களோடு பழகவும் இது உதவியுள்ளது. சுவறுகளோடு அந்த சமூகத்தால் உணர்வுப்பூர்வமாக ஒன்ற முடிந்தது. ஒவ்வொரு ஓவியமும் ஒரு அரவாணியின் முகத்தை மையமாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. அதனைச் சுற்றி அங்கிருக்கும் கலாச்சாரத்திற்கு ஏற்ப வேறு பல கருக்களும் தீட்டப்பட்டுள்ளன. புனேவில் பைதானி புடவையும், சென்னையின் மல்லிகையும் சுவரோவியங்களில் மின்னுகின்றன.

இந்த ப்ராஜெக்ட் மூலம் அவர்கள் சமூகத்தோடு இணைந்து செயல்படும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்துள்ளது. அவர்களை புரிந்து கொள்ளவும், அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை உணர்ந்துகொள்ளவும், அவர்களது தினசரி செயல்பாடுகளை கவனிக்கவும் இது வாய்ப்பு அளித்துள்ளது. சென்னையில் உள்ள அரவாணிகள் சமூகத்தோடு ஒரு வார காலம் தங்கி இருந்து அவர்களது கொண்டாட்டங்களை கண்டுள்ளார். மேலும் கொல்கத்தாவின் சிகப்பு விளக்கு பகுதியான சோனாகாட்சியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வசித்த அரவாணிகளை சந்தித்துள்ளார். அவர்கள் நாட்டின் விடுதலைக்கு பின்பு நிலைமை மோசமமடைந்துள்ளதாக கூறியுள்ளனர் இவரிடம்.

தினசரி இன்னல்கள் :

இந்த சமூகம் சந்திக்கும் சிக்கல்கள் இன்றளவும் அடிப்படையாக உள்ளன என்பதே பூர்ணிமா கருதுவதாகும். தீண்டாமையும், அவர்கள் மீதான ஒரு மனிதாபிமானமிக்க பார்வை இல்லாமல் இருப்பதும் மிகப்பெரிய சிக்கலாக கருதுகிறார். அவர்களுக்கு வேலை கிடைக்காமல் இருப்பதால், அவர்கள் யாசிக்கவோ அல்லது விபச்சாரத்திலோ தள்ளப்படுகின்றனர். பெரும்பாலும் இந்த சமூகத்தின் எள்ளலுக்கும் துன்புறுத்தலுக்கும் அலட்சியத்திற்கும் உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர் என்கிறார் அவர்.

பல வருடங்கள் ஒதுக்கப்பட்டதன் காரணமாக வேலைக்கு செல்ல அவர்கள் விரும்புவதில்லை. அவர்களுக்கு அவர்கள் நிலையில் இருந்து உயர்ந்து செல்வதற்கு உத்வேகம் தேவைப்படுகிறது.

”அவர்களின் நம்பிக்கையை பெற சரியான வழி உண்மையாக இருப்பது. அவர்களை வேறு விதமாக நடத்துவதையோ அல்லது அவர்களுக்காக பரிதாபப்படுவதையோ அவர்கள் விரும்புவதில்லை. தற்போது வரைக்கும் அவர்களோடு எப்படி பழகுவது என்பதை நாம் இன்றும் கற்றுக்கொண்டே இருக்கிறோம் என்பேன்,” என்கிறார் பூர்ணிமா.

கலகக்கார குழந்தையில் இருந்து வெற்றியாளராக :

பூர்ணிமாவின் கதையில் இருந்தே நமக்கு பல நேர்மறையான விஷயங்கள் கிடைக்கும். கூட்டுக்குடும்பத்தில் பிறந்திருந்தாலும், பருவ வயதில் குடும்பம் பிரிந்ததால், தனிமையில் வளர்ந்துள்ளார் பூர்ணிமா. அந்த தனிமை மற்றும் எதனையும் எதிர்க்கும் தைரியமும் தான் பின் நாளில் மற்றவர்கள் ஒதுக்கிய சமூக சிக்கல்களை உன்னிப்பாக கவனிக்க உதவியது. அதன் மூலமாக பல புதிய பாதைகள் அவருக்கு புலப்பட்டன.

முதலில் பெங்களுரு சித்ரகலா பரிஷித்தில் பொழுது போக்காக ஓவியம் தீட்டத்துவங்கினார். பின்னர், 2008-ல் ஓவியம் வரைதலில் ஒரு பட்டம் பெற்று முடித்தார், அடுத்த நாளே இன்வெண்சர் அகாடமியில் பணிபுரிய துவங்கினார். வாழ்நாள் முழுதும் ஓவியத்தோடு பயணித்துள்ளார் பூர்ணிமா. 2012-ல் நேஷனல் இன்ஸ்டிடுட் ஆப் டிசைனில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் ஒரு நீண்ட விடுமுறை எடுத்துக்கொண்டார்.

அரவாணி ஆர்ட் ப்ராஜக்ட் :

பூர்ணிமாவின் நண்பர்களும் குடும்பமும் அவருக்கு ஆதரவாக இருக்க, அவரது பலமாக ஆர்ட் டைரக்டர் சாதனா பிரசாத் மற்றும் எழுத்தாளர் விக்டர் பாஸ்கின் உள்ளனர்.

இவர்கள் பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்தது, அரவாணிகள் சமூகத்தில் இருந்து சாந்தி சோனு மற்றும் பிரியங்கா திவாகர் ஆகியோர் இவர்களது எதிர்கால பணிகள் அனைத்திலும் கலந்து கொள்ளவோம் என உறுதி அளித்துள்ளது என்கின்றார். முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் நல்ல வரவேற்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது.

தனியாருக்காக பணியாற்றுவதற்கு இவர்களுக்கு சம்பளம் கிடைத்தாலும், பொது இடங்களில் வரைவதற்கு பயணச்செலவு, தேவையான பொருட்கள் என நகரவடிவமைப்பாளர்கள் உதவுகின்றனர். இந்தியா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஆரோக்கிய சேவா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஓவியம் வரையும் பொழுது, இவர்களுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்குகின்றன. இந்த சிறு விஷயங்களே பூர்ணிமா அந்த சமூகத்திற்கு செய்ய முயலுகின்றார்.

மேலும் காலம் மாற மாற, தற்போது அந்த சமூகம் பற்றிய விழிப்புணர்வும், ஆதரவும் அதிகரித்துள்ளதாக கருதுகிறார் பூர்ணிமா.

“நான் அவர்களுக்காக பேசுவதில்லை. எப்போது அவசியமோ அப்போது அவர்களை பேச உற்சாகம் அளிப்பேன் அல்லது அவர்களுக்கு துணை நிற்பேன். நான் அவர்களது பிரதிநிதி அல்ல, தாங்கி நிற்கும் தூணாக கருதுகிறேன் என்னை.”

நேரடியாக பாதிகப்பட்டது :

அரவாணிகளுக்கு வேலைகள் கிடைக்காதது, விபச்சாரம் மற்றும் யாசித்தலில் இருந்து அவர்களை காக்க இயலாதது என பூர்ணிமா மனதில் உறுத்தும் விஷயங்கள் அதிகம் உள்ளன. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களை தாண்டி, செய்ய வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன. அவர்கள் கூறும் கதைகள் என் மனதை கூருபோடுகின்றன. இந்த சமுதாயம் அவர்கள் எவ்வாறு நடத்துகிறது என்பது நினைக்கையில் வெறுப்பாக உள்ளது. தெருவில் நடப்பது போன்ற சிறு செயல் கூட அவர்களுக்கு தேவையற்ற விளைவை ஏற்படுத்தும். அதன் காரணமாக பல முறை நான் சண்டைக்கு சென்றுள்ளேன். அதன் காரணமாக பாதிகப்பட்டுள்ளேன். ஆனால் காலம் தேவைப்படும் போது மட்டும் செயல்புரிய கற்று கொடுத்துள்ளது.

மேலும் பூர்ணிமா எதிர்கொள்ளும் மிகபெரிய சவால் சரியான நேரத்தில் ஓவியங்களை முடிப்பது. அடுத்தது வரைய சுவர்களை கண்டறிவது.

அரவாணிகள் சமூகத்தின் நம்பிக்கையை பெறுவது கடினம் என நினைக்கலாம். ஆனால் ஓவியங்கள் வரைய சுவர்கள் கண்டறிவது அதனினும் கடினம். சிறுநீர் கழிக்கவும், குப்பைகளை கொட்டவும் எதுவும் பேசாது தலையாட்டும் மக்கள் வரைய அனுமதி மறுகின்றனர். மேலும் பல நேரங்களில் அவர்களிடம் சரியான காரணம் இருக்காது. சில நேரங்களில் ஒருவரால் அனைவரையும் சரிகட்டி செல்ல இயலாது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டியுள்ளது.

பாதைமாறாது இருத்தல் :

இத்தனை சவால்களுக்கு மத்தியில் அவரது உத்வேகமாக இருப்பது எது என வினவியபோது, ஆர்வம் என பதில் அளித்தார். அனைத்து நேரங்களிலும் பாலினத்தை புரிந்துகொள்ள நான் முயல்கிறேன். எது சரி எது சரியல்ல என்பதை முடிவு செய்வது யார்? நம் உடலை நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு ஏன் விதிகள் உள்ளன? ஏன் சட்டங்கள் உள்ளன? முடிவில்லா ஒரு பாதையில் சிக்கியது போன்று உணர்கிறேன். அவர்கள் அவர்களாக இருக்கவும், மனதிற்கு பிடித்தவாறு நடக்கவும் அவர்கள் எப்போதும் தைரியமாக இருக்க வேண்டியுள்ளதை நினைக்கும் பொழுது வருத்தமாக உள்ளது. எப்படியெல்லாம் இயலுமே அவ்வாறு அவர்களோடு இருக்க விரும்புகிறேன்.”

அவரது தோழி எழுதிய வார்த்தைகளோடு நமக்கு விடை கொடுத்தார் பூர்ணிமா. அவை,

நான் பலத்திற்காக வேண்டுகிறேன்,

உத்தரவாதம் மற்றும் மென்மைக்காக வேண்டுகிறேன்,

ஆனால் அனைத்திற்கும் மேலாக,

நாளை பாலினமின்றி விடிய ப்ராத்தனை புரிகின்றேன்.

ஆங்கில கட்டுரையாளர் : தன்வி துபே | தமிழில் : கெளதம் தவமணி