பின்னி பன்சல் விலகல் உணர்த்தும் புதிய யதார்த்தம்... 

ஒருவரை வேகமாக பாராட்டுகிறோம், அதைவிட வேகமாக அவரைப் பற்றிய தீர்ப்பையும் அளிக்கிறோம்.

0

ஃபிளிப்கார்ட்டில் இருந்து பின்னி பன்சால் விலகல் முடிவு, நம்முடைய புதிய நிதர்சனத்தை அடையாளம் காட்டுகிறது: அதாவது நாம் விரைவாக பாராட்டுகிறோம், வேகமாக தீர்ப்பளிக்கிறோம். எனவே தான், ஃபிளிப்கார்ட் விவகாரம் தொடர்பாக செய்திகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், நாம் ஏன் ஒருவரை மிக விரைவில் பீடத்தில் ஏற்றுகிறோம், அதே பீடத்தில் இருந்து அவர்களை அதைவிட வேகமாக அகற்றுகிறோம் என கேட்க விரும்புகிறேன். இரண்டுக்கும் இடையிலான பரப்பு இருக்கிறதா? அந்த இடம் முழுமையானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் மனிதத்தன்மையுடன் இருக்கட்டும். 

அண்மைக்காலம் வரை பின்னி பன்சால் கொண்டாடப்படுபவராக இருந்தார். இந்திய ஸ்டார்ட் அப் சூழல் மட்டும் அல்ல, இந்தியாவை கடந்து உலக அளவில் அவர் கொண்டாடப்பட்டார்.

பின்னி பன்சல்
பின்னி பன்சல்

பத்தாண்டுகளுக்கு முன், சச்சின் பன்சலுடன் இணைந்து அவர் உருவாக்கிய ஃபிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் கையகப்படுத்தியதை நாம் கொண்டாடியது நேற்று தான் என்பது போல இருக்கிறது. இதை இ-காமர்ஸ் உலகின் மிகப்பெரிய டீல் என்றோம். இந்த இருவரும் துவக்க உதவிய ஸ்டார்ட் அப் புரட்சியின் மிகப்பெரிய வெற்றிக்கதை என்றோம்.

இதை வலியுறுத்தி ஒவ்வொரு சமூக ஊடக பரப்பிலும், சச்சின் மற்றும் பின்னி பன்சலின் சாதனைகளை பாராட்டினோம். அவர்கள் ஏதோ கடவுள் போன்றவர்கள் எனும் அளவுக்கு இதை செய்தோம்.

அவர்கள் தவறே செய்ய முடியாதவர்கள் என்பது போல இருந்தது.

இருப்பினும், அண்மையில் பின்னி பன்சலின் திடீர் விலகல் செய்தி வெளியானதும் நாம் முடிவுகளுக்கு தாவிவிட்டோம். அவர் மீதான ஓவ்வொரு குற்றச்சாட்டுகளை நம்பத்துவங்கினோம். எப்படி அவர் மீதான பாராட்டுகளை பொழிந்தோமோ அதே போல, அவர் மீதான தீர்ப்பிலும் வேகமாகவும், கடுமையாகவும் நடந்து கொள்கிறோம்.

பின்னி பன்சலின் விலகல் முடிவு தொடர்பான வால்மார்ட் நிறுவன அறிவிப்பு, அவருக்கு எதிரான தீவிர தனிப்பட்ட மோசமான நடத்தை பற்றிய விசாரணையில், புகார் தொடர்பான எந்தவீத ஆதாரமும் கிடைக்கவில்லை என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது தரப்பில் ஏற்பட்ட ஒரு தவற்றை சுட்டிக்காட்டியுள்ளது: ஒப்பந்தத்தின் போது, முக்கிய நிகழ்வுகள் தொடர்பான தகவல்களை வால்மார்ட் போன்ற உலகலாவிய நிறுவனத்திடம் வெளிப்படுத்தாமல் இருந்தது தான் அது.

வெளிப்படை தன்மை தேவை

விஷயம் என்னவெனில் வர்த்தக வெளிப்படைத்தன்மை, உலகம் முழுதும் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் எப்படி முக்கியமாக கருதப்படுகிறது. அதே அளவு ஸ்டார்ட் அப் உலகிலும் முக்கியமாக கருதப்பட வேண்டும். வர்த்தக கலாச்சாரம் தொடர்பான ஆய்வுகள் முதலீட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்கள், வெளிப்படை தன்மை கலாச்சாரத்தை உருவாக்குவதன் பலன்களை உணர்ந்திருப்பதாக தெரிவிக்கின்றன.

இருப்பினும், சி.இ.ஓ’க்களாக மாறும் தொழில்முனைவோர் பலரும் முதல்முறை தலைவர்களாவர். அவர்களில் பலர் சுயமாக உருவானவர்கள் என்பதோடு, அனைவரும் மனிதர்கள் தான். பின்னி மீது குற்றஞ்சாட்டப்பட்டிருப்பது போன்ற தவறுகள் அல்லது முடிவு எடுப்பதில் பிழைகளை அவர்கள் செய்யக்கூடாது.

விசாரணைக்குப்பிறகு, பின்னி விலகியிருப்பதால், விசாரணை முடிவில் அவர் விலகுலுக்கு பொருத்தமான காரணங்கள் இருக்கலாம். அந்த நேரத்தில் பின்னி மேலும் சிறந்த முறையில் முடிவெடுத்திருந்தால் இது போன்ற சங்கடத்தை தவிர்த்திருக்கலாம் என ஸ்டார்ட் அப் துறையை சேர்ந்த சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆனால் இது போன்ற ஒட்டுமொத்த நோக்கிலான கருத்துகள் கடுமையானவை என நினைக்கிறேன். ஆனி டியூக் எழுதிய, திங்கிங் இன் பெட்ஸ்: மேகிங் ஸ்மார்டர் டிசிஷன்ஸ் வென் யூ டோண்ட் ஹேல் ஆல் தி பேக்ட்ஸ், புத்தகத்தை வாசித்த போது கிடைத்த புரிதல் எனக்கு நினைவுக்கு வருகிறது.

தினசரி முடிவெடுக்கும் போது, அனைத்து தகவல்களும் இல்லாமல் நாம் முடிவு எடுப்பதைப் பற்றி ஆனி சரியாக சுட்டிக்காட்டுகிறார். உண்மையில், பிரபலமான பலரும், கடவுள் போல கருதப்படும் நபர்களும் (பின்னியைப்போல), இது போன்ற முடிவுகளை தினசரி எடுக்கின்றனர். ஒரு முடிவின் தாக்கத்தை தெரிந்து கொள்ள முழு விவரங்களும் கையில் இல்லாமல், நிலையற்றத்தன்மையில் உழன்றாலும், நல்ல முடிவு எனும் எதிர்பார்ப்பில் ரிஸ்க் எடுக்கின்றனர்.

இதன் விளைவு என்னவெனில், சத்தமான கொண்டாட்டம் அல்லது முடிவு மீதான கடும் விமர்சனம். பெரும்பாலும் முடிவின் பலன்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாறு செய்யப்படுகின்றன. சிறந்த முடிவை எடுக்க போதிய நேரமின்மை அல்லது தகவல் இல்லாமல் இருப்பதை யாரும் கருத்தில் கொள்வதில்லை.

மேலும், பின்னி விலகல் முடிவு தொடர்பாக போதிய வெளிப்படையான தன்மை இல்லை என குறை கூறியிருந்த போது, பலர் ஆவேசமடைந்தனர். நான் ஒரு பெண் தொழில் முனைவோராக இருக்கும் போது, நான் எப்படி பின்னிக்கு ஆதரவு தெரிவிக்க முடியும் என்றும் கேட்டிருந்தனர்.

இடைப்பட்ட பரப்பு

ஆனால் என்னளவில் இது நிலைப்பாடு எடுப்பதோ அல்லது ஒரு குறிப்பிட்ட நபரை ஆதரிப்பதோ அல்ல. இது நம்மைச்சுற்றியுள்ள பரந்த பிரச்சனை தொடர்பானது. தீர்ப்பு வழங்கும் முன் முழு கதையையும் கேட்க முடியாத நம்முடைய தன்மை பற்றியது. முழுவதும் சரியான, தவறே செய்யாத நபர்கள், சூழல்கள் அல்லது பலன்களுக்கான நம் தேடல் தொடர்பானது. முழுமைக்கான நம்முடைய தேடல் அர்த்தமற்றது என்பதை மீறி இப்படி இருக்கிறது. அத்தகைய ஒன்று இல்லை. முழுவதும் சரியான மனிதரோ, சூழலோ முடிவோ இல்லை.

எனவே தான் அவசரப்பட்டு தீர்ப்பு கூற விரும்பவில்லை. ஏனெனில் நாம் கொண்டாடிய அனைவரும் மனிதர்கள் தான் என்பதை நாம் இறுதியில் நினைவு கொள்ள வேண்டி வரும். அதிலும், அவர்கள் முடிவு தொடர்பான தாக்கத்தை அறியக்கூடிய அனைத்து தகவல்களும் கையில் இல்லாத போது முடிவு எடுக்கும் போது தவறு செய்யக்கூடியவர்கள் என்பதை உணர வேண்டும்.

எனவே ஃபிளிப்கார்ட் தொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தாலும், நீங்கள் கொஞ்சம் நிதானமாக, நாம் ஏன் ஒருவரை விரைவாக பீடத்தில் ஏற்றுகிறோம் மற்றும் அதைவிட விரைவாக அவரை அந்த பீடத்தில் இருந்து கீழே இறக்குகிறோம் என யோசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முழுவதும் சரியில்லாததாக இருந்தாலும் மனிததன்மை மிக்க ஒரு இடமான இடைப்பட்ட பரப்பு இருக்கிறதா??

இந்த எண்ணத்தோடு, ஒரு மேற்கோளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

“சரியான செயல்கள் மற்றும் தவறான செயல்களை கடந்து ஒரு வெளி இருக்கிறது. அங்கு உன்னை சந்திக்கிறேன்...”

— ரூமி

ஆங்கில கட்டுரையாளர்: ஷரத்தா சர்மா | தமிழில்;சைபர்சிம்மன்