முகநூல் உள்ளடக்க விதிமீறல்கள்: சமூக நெறிமுறைகளை வெளியிட்டது ஃபேஸ்புக்!

0

கேம்பிரிட்ஜ் அனலிடிகா தகவல் அறுவடை சர்ச்சையின் தாக்கத்தை தொடர்ந்து உணர்ந்து வரும் ஃபேஸ்புக் நிறுவனம், வேகமாக சரிந்து வரும் பயனாளிகள் நம்பிக்கையை காப்பாற்றிக்கொள்வதற்காக துரிதமாகவே செயல்பட்டு வருகிறது. ஒருவர் ஃபேஸ்புக்கை பயன்படுத்தாத போது கூட, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் எப்படி தகவல்களை திரட்டுகிறது எனும் விவரங்களை தெளிவுப்படுத்தியதோடு இப்போது, ஃபேஸ்புக் தளத்தில் எந்த வகையான தகவல்கள் அனுமதிக்கப்படாமல் நீக்கப்படுகின்றன என்பது தொடர்பான சமூக தர நெறிமுறைகளையும் அப்டேட் செய்துள்ளது.

இதன் கீழ் வரும் பொதுவான விதிகள் மற்றும் வகைகளில் மாற்றம் இல்லை என்றாலும், ஆட்சேபனைக்குறிய கருத்துக்களை நீக்குவதற்கு அதன் நெறியாளர்களுக்கு (மாடரேட்டர்) தெளிவாக வழிகாட்டும் வகையில், நெறிமுறைகளை மேலும் மேம்படுத்தியுள்ளது. நெறிமுறைகள் தொடர்பான உதாரணங்கள் மற்றும் விளக்கங்களுடன், குறிப்பிட்ட சூழல்களில் எந்த வகையான உள்ளடக்கம், எவற்றின் அடிப்படையில் நீக்கப்படும் எனும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

"எங்கள் சமூகம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில் இந்த நெறிமுறைகளும் மேம்பாடுகளை சந்தித்துக்கொண்டிருக்கும். உள்ளடக்கத்தை ஆய்வு செய்பவர்களுக்கு எந்த வகையான நெறிமுறைகளை வழங்குகிறோம்,” என்பதை இப்போது அனைவரும் பார்க்கலாம் என்கிறார் ஃபேஸ்புக் பிராடக்ட் பாலிசி அன்ட் கவுண்டர் டெரரரிஸம் துணைத்தலைவர் மோனிகா பெக்கட். 

கலிபோர்னியாவில் அமைந்துள்ள ஃபேஸ்புக் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை தெரிவித்ததாக சிநெட் இணையதளம் தெரிவிக்கிறது.

“எங்கள் சமூக நெறிமுறைகளை மீறுவர்கள் எதிர்கொள்ள வேண்டிய விளைவுகள் மீறலின் தீவிரம் மற்றும் ஃபேஸ்புக்கில் அவர்கள் கடந்த கால செயல்பாடுகள் ஆகியவற்றை பொருத்து அமையும். உதாரணத்திற்கு முதல் முறை மீறல் என எச்சரிக்கை மட்டும் செய்யப்படலாம், ஆனால் தொடர்ந்து எங்கள் நெறிமுறைகளை மீறினால் ஃபேஸ்புக்கில் அவர்கள் நிலைத்தகவல் வெளியிடுவதை கட்டுப்படுத்துவது அல்லது பக்கத்தை முடக்குவது ஆகிய நடவடிக்கை எடுக்கப்படலாம்.” 

”பொதுமக்களுக்கு ஆபத்து பொது பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படலாம் எனத்தெரிந்தால் காவல்துறையிடமும் இது பற்றி தெரிவிப்போம்,” என நெறிமுறைகளுக்கான அறிமுகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்முறை மற்றும் குற்ற செயல்பாடு, பாதுகாப்பு, ஆட்சேபனைக்குறிய உள்ளடக்கம், அறிவுச்சொத்துரிமையை மதிப்பது, நேர்மை மற்றும் நம்பகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் சார்ந்த கோரிக்கைகள் ஆகிய ஆறு தலைப்புகளின் கீழ் நெறிமுறைகளுக்கான விளக்கங்களை வாசிக்கலாம். இவை இதற்கு முன்னர் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை.

வன்முறை மற்றும் குற்றவியல் செயல்முறை:

"பேஸ்புக் உள்ளடக்கம் தொடர்பாக நிஜ உலகில் ஏற்படும் பாதிப்பு மற்றும் பொது பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய உள்ளடக்கம்,” இந்த வகையின் கீழ் வரும்.

• குறிப்பிட்ட நபர் அல்லது குழுக்கள் அல்லது இடம் (நகரம் அல்லது சிறிய பரப்பு) மீது வன்முறையை தூண்டக்கூடிய நிலைத்தகவல்கள், கொள்ளை அல்லது ஆயுதம் கோருவது, ஒருவரை பாதிக்கும் நோக்கம் கொண்டது என தெளிவாக தெரியும் பட்சத்தில் ஆயுதங்களை எப்படி பயன்படுத்துவது என்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராக ஃபேஸ்புக் எச்சரிக்கிறது.

• பயங்கரவாத நடவடிக்கைகள், திட்டமிட்ட துவேஷம், தொடர் அல்லது படுகொலைகள், மனித கடத்தல், திட்டமிட்ட வன்முறை அல்லது குற்றவியல் நடவடிக்கை ஆகியற்றுக்கு பேஸ்புக்கில் அனுமதி இல்லை. இத்தகைய செயல்களை ஆதரிக்கும் நிலைத்தகவல்களும் அடையாளம் காணப்படும்.

• மோசமான வன்முறை, திருட்டு அல்லது மோசடியை ஊக்குவிப்பதற்கு தடை விதிக்கப்படும்.

• மரியூனா, மருத்துவ நோக்கில்லாத மருந்துகள், ஆயுதங்கள் ஆகியவற்றை விளம்பரம் செய்ய, விற்க, வாங்க ஃபேஸ்புக்கை பயன்படுத்த அனுமதி இல்லை.

பாதுகாப்பு பிரிவில் ஃபேஸ்புக் குறிப்பிடும் அம்சங்கள்: 

• தற்கொலை அல்லது தன் மீதே பாதிப்பை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பான உள்ளடக்கம் நீக்கப்படும். இந்த உணர்வை தூண்டக்கூடிய இத்தகைய செயல்களின் நேரலையும் தடுக்கப்படும்.

• சிறார்களை தவறாக பயன்படுத்தும் அல்லது ஆபத்திற்கு உள்ளாக்கும் உள்ளடக்கத்திற்கு அனுமதி இல்லை.

• பாலியல் வன்முறை, பாலியல் தாக்குதல், பாலியல் சுரண்டலை ஊக்குவிக்கும் உள்ளடக்கம் நீக்கப்படும். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர அனுமதிக்கப்படுவார்கள்.

• ஃபேஸ்புக்கில் சீண்டலை பொருத்துக்கொள்ள மாட்டோம் என்பதால், குறிப்பிட்ட நபர்களை அவமானப்படுத்தும் அல்லது மதிப்பிழக்கச்செய்யும் நோக்கம் கொண்ட உள்ளடக்கத்திற்கு அனுமதி இல்லை. விமர்சனம் செய்யப்பட வாய்ப்பளிப்பதால் இது பொதுவெளியில் உள்ள பிரபலமானவர்களுக்கு பொருந்தாது. இருப்பினும் துவேஷ பேச்சு அல்லது தீவிர அச்சுறுத்தல்களுக்கு இடமில்லை.

• தேவையில்லாத அல்லது தீய நோக்கிலான உள்ளடக்கம் தடுக்கப்படும்.

• தனிநபர்களின் அனுமதி பெறாமல் வெளியிடப்படும் தனிப்பட்ட அல்லது மிக ரகசியமான தகவல்கள் கொண்ட நிலைத்தகவர்களுக்கு அனுமதியில்லை.

ஆட்சேபனைக்குறிய உள்ளட்டக்கம் என்றால்...

• இனம், பாரம்பரியம், தேசியம், மத விவகாரம், பாலினச்சார்பு, பாலினம், பாலின அடையாளம் மற்றும் உடல் குறைபாடு அல்லது நோய் தொடர்பான துவேஷ பேச்சு.

• வன்முறையை கொண்டாடும் அல்லது மற்றவர்கள் துயரங்களை கொண்டாடும் உள்ளடக்கம். ஏனெனில் இவை பங்கேற்பை பாதிக்கும்.

• நிர்வாணம் மற்றும் செக்ஸ் செயல்பாடு. அதாவது நிர்வாண அல்லது செக்ஸ் செயல்.

• கொடூரமான மற்றும் உணர்வில்லாத என வகைப்படுத்தப்பட்டுள்ள வகையில் பெளதீக அல்லது உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்களை குறி வைக்கும் உள்ளடக்கம். எனினும் நிர்வாணத்தை குறிக்கும் கலை, ஓவியம் மற்றும் சிற்பங்களுக்கு அனுமதி உண்டு.

நேர்மை மற்றும் நம்பகத்தன்மை:

• தவறான விளம்பரங்கள் என வகைப்படுத்தப்படும் ஸ்பேம், மோசடி மற்றும் பாதுகாப்பு மீறல்கள் உள்ளிட்ட மக்களின் பகிர்வு மற்றும் தொடர்பு கொள்ளுதலை பாதிக்கும் உள்ளடக்கம்.

தவறான சித்தரித்தல்- ஃபேஸ்புக்கில் உண்மையான தோற்றம் கொண்டிருப்பது.

பொய்செய்திகள்- நையாண்டி, கருத்து மற்றும் பொய்ச்செய்திகளுக்கான இடைவெளி மெல்லியது என்பதால் இதை முழுவதும் தடை செய்யவில்லை. எனவே இவை நியூஸ்பீடில் பின்னுக்குத்தள்ளப்படும்.

'அறிவுச்சார் சொத்துரிமைக்கு மதிப்பளித்தல் என்பது காப்புரிமை, டிரேட்மார்க் உள்ளிட்ட இன்னொருவரின் உரிமையை மீறும் உள்ளடக்கத்தை குறிக்கும்.

உள்ளடக்கம் சார்ந்த கோரிக்கைகள் பிரிவு சொந்த உள்ளடக்கத்தை நீக்குவது, உறவினர் உறுதியின் பேரில் இறந்தவரின் கணக்கை நீக்குவது, பயனாளி உள்ளடக்கத்தை நீக்குவதற்கான சட்டப்பூர்வமான கோரிக்கை ஆகியவற்றை கொண்டிருக்கும்.

’வாக்ஸ்’ இணையதளத்திற்கு ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் முன்னதாக அளித்த பேட்டியில் ஆட்சேபனைக்குறிய உள்ளடக்கம் குறித்து முடிவு எடுப்பதற்காக ஃபேஸ்புக்கிற்கு வெளியே உள்ளவர்களை உள்ளடக்கிய ஃபேஸ்புக் உச்சநீதிமன்றம் போன்ற ஒன்றை உருவாக்குவது பற்றி கருத்து தெரிவித்திருந்தார். 

பாரீஸ், பெர்லின், இங்கிலாந்து, இந்தியா, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் மூலம், ஃபேஸ்புக் கொள்கைகள் தொடர்பான கருத்துக்களை அறிவதற்கான ஃபேஸ்புக் ஒபன் டயலாக் எனும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது

முறையீடுகள் தொடர்பான விதிகளையும் ஃபேஸ்புக் விரிவுபடுத்தியுள்ளது. இதற்கு முன்னர் உங்கள் ஃபேஸ்புக் பக்கம், புரபைல் அல்லது குழு பக்கம் நீக்கப்பட்டால் மட்டுமே முறையிட முடியும். இப்போது தனிப்பட்ட உள்ளடக்கம் நீக்கப்பட்டாலும் ஃபேஸ்புக் முடிவை எதிர்த்து முறையிடலாம். நெறியாளர்கள் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஃபேஸ்புக் நவம்பர் மாதம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் எந்த வகையான உள்ளடக்கத்தை எந்த அடிப்படையில் நீக்குகிறது என்பது தொடர்பான விரிவான நெறிமுறைகள் வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கதக்கது தான். ஆனால், இந்த நெறிமுறைகள் பெரும்பாலும் ஆங்கிலத்திற்கு பொருந்தி வருபவை. மற்ற மொழிகள் தொடர்பான உள்ளடக்க நிர்வாகத்தில் பல சிக்கல்கள் இருப்பதை ஃபேஸ்புக் பயனாளிகள் சுட்டிக்காட்டுகின்றனர். 

உதாரணத்திற்கு தமிழ் மொழியிலேயே ஆட்சேபனைக்குறிய தகவல்கள் நீக்கம் தொடர்பாக நடிவடிக்கை எடுப்பதில் பல போதாமைகள் இருப்பது உணரப்பட்டுள்ளன. பல நேரங்களில் உள்ளடக்க நீக்கம் தொடர்பாக முறையிடும் வழிமுறைகள் அல்லது நீக்கப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான முறையீடு குறித்த தெளிவான வழிகாட்டுதல் இல்லை என கருதப்படுகிறது. 

உள்ளூர் மொழிகளில் உள்ளடக்க நிர்வாகம் தொடர்பான செயல்முறையை வெளிப்படையாக்கி, இது தொடர்பான தகவல் தொடர்பை ஃபேஸ்புக் மேலும் எளிதாக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.

பயனாளிகள் நோக்கில் இந்தியா ஃபேஸ்புக்கின் முக்கிய நாடாக இருப்பதால், இந்திய மொழிகளுக்கு நெறிமுறைகள் மற்றும் அவற்றின் அடிப்படையிலான நீக்கம் குறித்த கோரிக்கைகளை மேற்கொள்வதை ஃபேஸ்புக் மேலும் எளிதாக்க வேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாக அமைகிறது.

இந்த நெறிமுறைகள் பற்றி விரிவாக அறிய:  https://www.facebook.com/communitystandards/