இந்தியாவில் தயாரிக்கப்படும் இயற்கையான யோகா பாய் வகைகளை அறிமுகப்படுத்திய சென்னை பெண்மணி!

0

உலகளவிலான யோகா சந்தை 80 பில்லியன் டாலராக மதிப்பிடப்படுகிறது. இருப்பினும் யோகாவில் ஈடுபடும் யோகிகள் சுவாசப் பயிற்சி செய்கையில் மூச்சை உள்ளிழுக்கும்போது தூசு மற்றும் கிருமிகளையும் உள்ளிழுக்க நேரிடுவது குறித்து முழுமையாக அறியவில்லை. இதற்குக் காரணம் பிவிசி பாய்கள் தூசுகள் தாக்காமல் பாதுகாப்பதில்லை.

மேலும் உலகளவில் நம்பகமான யோகா ப்ராண்டுகள் அதிகம் இல்லை. சந்தையில் இருக்கும் பெரும்பாலான ப்ராண்டுகள் விலையுயர்ந்தவை. ஆனால் இவை சுற்றுச்சூழலுக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. 

மண்டுகா (Manduka), ஜேட் யோகா (Jade Yoga) போன்ற ப்ராண்டுகள் சுற்றுச்சூழலுக்கு பாதகம் விளைவிக்காத பொருட்களை தயாரிக்கிறது. இருந்தும் உண்மையிலேயே இயற்கையான புதுமையான உள்ளூரில் விளையும் பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் யோகா பாய்கள் சந்தையில் இல்லை. சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்டு தீர்வுகாண ’ஜுரு மேட்ஸ்’ என்கிற தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளார்.

நிறுவனர் பின்னணி

பூஜா போர்கர் சிறு வயதில் யோகா குறித்து அதிகம் அறியவில்லை. அவருக்கு இருபது வயதிருக்கையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து யோகா வகுப்பை மேற்கொள்ள தீர்மானித்தனர். அப்போதுதான் யோகாவின் வலிமை குறித்து புரிந்துகொண்டார்.

பூஜா யூகேவில் சர்வதேச வணிக நிர்வாகம் பிரிவில் பிஏ ஹானர்ஸ் முடித்தார். 2003-ம் ஆண்டு அமெரிக்காவில் எம்பிஏ படிக்கத் தயாராகி வந்த நிலையில் அவரது அப்பாவிற்கு விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது முதுகெலும்பில் காயமேற்பட்டு படுக்கையிலேயே இருக்க நேரிட்டது. எனவே 22 வயதான பூஜா அடுத்தகட்டமாக செயல்படவேண்டிய சூழல் ஏற்பட்டது.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் அவரது குடும்ப தொழிலான பாடப்புத்தகங்களை வெளியிடும் பணிக்காக செலவிட்டார். அதன் பின்னர் அனைத்து பள்ளிகளுக்கும் அரசாங்கமே பாடபுத்தகங்களை விநியோகத் துவங்கியது. பூஜா உட்பட பெரும்பாலான வெளியீட்டாளர்கள் அரசின் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டனர். அப்போதுதான் அவர் சுதர்சனை சந்தித்தார். இருவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் இணைந்து பள்ளிகளில் மொழி ஆய்வகங்கள் உள்ளிட்ட மின் கற்றலை செயல்படுத்துவதற்காக பள்ளிகளுக்கு மலிவு விலையில் தகவல் தொழில்நுட்பத் தீர்வை வழங்கத் துவங்கினர்.

இந்த முயற்சியில் சந்தித்த போராட்டங்கள் காரணமாக வளர்ச்சியடைய முடியவில்லை. எனவே மூன்றாண்டுகள் கழித்து இந்த முயற்சியை நிறுத்திக்கொண்டனர்.

பூஜா பெங்களூருவிற்கு மாற்றலான பிறகு மீண்டும் யோகா பயிற்சியில் ஈடுபட தீர்மானித்தார். யோகா ஆசிரியருக்கான சான்றிதழ் பெற்றார். பகுதி நேர யோகா ஆசிரியர் ஆனார். யோகாவிற்கு பயன்படுத்தும் பாய் அவருக்கு திருப்தியளிக்கவில்லை. சிறந்த யோகா பாயை தயாரிப்பது குறித்து பிரபல யோகா பள்ளிகள் மற்றும் ஆசியர்களுடன் கலந்துரையாடினார். 

“யோகா பாய்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதைத் தாண்டி அவை இயற்கையாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். அப்போதுதான் நாங்கள் பயன்படுத்தி வந்த யோகா பாய்கள் பிவிசி-யால் ஆனது என்பதையும் இந்த வகையான பாயில் நிச்சயமாக யோகா பயிற்சி செய்யக்கூடாது என்பதையும் உணர்ந்தேன்,” என்கிறார்.

பிரபலமான ப்ராண்டுகள் அனைத்தும் அமெரிக்காவிலிருந்து பெறப்படுகிறது. இந்த சமயத்தில்தான் ’மேக் இன் இந்தியா’ திட்டம் பிரபலமாகி வந்தது. அவர் யோகா பாயை எவ்வாறு சிறப்பாக இந்தியாவிலேயே தயாரிக்கலாம் என்பது குறித்து உள்ளூர் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாட இந்த திட்டம் அவருக்கு ஊக்கமளித்தது. அவரது பயிற்சி வகுப்பில் உடன் இருப்பவரான டோரல் வால்ஷ் அவர்களுடன் இணைந்து இந்தப் பிரிவில் செயல்பட தீர்மானித்தார்.

இந்தப் பிரிவில் செயல்படுவது எளிதான செயலாக இருக்கவில்லை. பாய் இயற்கையானதாக இருப்பதுடன் பிடிமானமும் சரியாக இருக்கவேண்டும் என்று விரும்பினேன். எந்தவிதத்திலும் சமரசம் செய்துகொள்ளக்கூடாது என நினைத்தேன்,” என்றார்.

தொடர்ந்து பகுதி நேரமாக பயிற்சியளித்து வந்தார். யோகா ஸ்டூடியோ ஒன்றில் ஆலோசகராக பணியாற்றினார். யோகா செயலியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிலும் இணைந்துள்ளார். இவற்றிற்கு மத்தியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் யோகா பாயை தயாரிக்கும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

இயற்கை யோகா பாய்

சணல் மற்றும் இயற்கை ரப்பரைக் கொண்டு முதல் சோதனை பாயை உருவாக்கினார். அது தடிமனாக இல்லை. ஆனால் பிவிசி-யால் தயாரிக்கப்படும் வழுக்கும் தன்மை கொண்ட யோகா பாய்க்கு சரியான மாற்றாக இருக்கும்.

ஜூட் என்கிற வார்த்தையின் முதல் இரண்டெழுத்துக்களான ’ju’ மற்றும் இயற்கை ரப்பர் என்கிற வார்த்தையின் முதலெழுத்தான ‘ru’ இரண்டும் இணைக்கப்பட்டது. இவை இரண்டுமே உள்நாட்டு இந்திய வளங்களாகும். இதனால் ’Juru’ என்று பெயரிடப்பட்டது. 

”இந்த யோகா பாய் சிறப்பாக இருந்தது. எங்களது வகுப்புகளில் பயன்படுத்தத் துவங்கினோம். எங்களது மாணவர்கள் இது குறித்து விசாரிக்கத் துவங்கினர். நாங்களும் விற்பனை செய்தோம். அவ்வாறு துவங்கப்பட்ட முயற்சிதான் இது,” என்றார்.

பயணத்திற்கும் தியானத்திற்கும் பயன்படும் ஜுரு பாய் லேசானது, மடிக்கக்கூடியது, இருபுறமும் பயன்படுத்தக்கூடியது. இதை பயணத்தின் போது மணல் அல்லது தோட்டம் போன்ற பகுதிகளில் பயன்படுத்தலாம். ஜுரு ஐந்து வகையான கார்க் பாய்களை வழங்குகிறது.

பல யோகா ஸ்டூடியோக்களும் யோகா ஆசிரியர்களும் பூஜாவின் முயற்சியை ஆரம்பத்தில் அங்கீகரிக்கவில்லை. 

”நான் இந்த பாயை இறக்குமதி செய்திருப்பதாகவும் அசலான பாய் மட்டுமே அவர்களுக்கு தேவைப்படுவதாகவும் நினைத்தனர். பிவிசி பாயின் பயன்பாட்டினால் ஏற்படும் தீங்கு குறித்தும் இயற்கையான பாய் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும் எங்களது பக்கத்தில் பகிர்ந்து கொள்ளத் துவங்கினோம். வாடிக்கையாளர்களின் கருத்துக்களை பெற்றுக்கொண்டோம். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இயற்கான ஜுரு ப்ராண்டை பலர் பாராட்டினர்.

முதல் ஒன்றரை ஆண்டுகள் நேரடியாகவே விற்பனை செய்தனர். முகநூல் வாயிலாக ஆர்டர்களை ஏற்றுக்கொண்டனர். பூஜா ஆய்வுகள் மேற்கொண்டார். சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்ட பிறகு யோகா பாய் மற்றும் பிற பொருட்களுக்கான ஆர்டர்கள் குவியத் துவங்கியது. அவர் மேலும் சில உற்பத்தியாளர்களிடமிருந்தும் பொருட்களைப் பெறத் துவங்கினார்.

”கார்க் ப்ளாக்குகளை அறிமுகப்படுத்தியபோது அதன் பலன்களை கருத்தில் கொண்டு யோகா பயிற்சிக்கு கார்க் பாய் உகந்ததாக இருக்கும் என்பதை உணர்ந்தேன். எங்களது முதல் கார்க் பாய் தயாராகி ஒரு பிரத்யேக யோகா விழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.”

இந்த பாயில் பயிற்சி செய்பவர்களுக்கு அதிக வியர்வை சுரந்தாலும் கார்க் மேட்கள் அதிக பிடிமானத்துடன் இருக்கும். இருபுறமும் பயன்படுத்தலாம் என்பதால் உங்களிடம் இரண்டு பாய் இருப்பதற்கு சமம். இந்த பாய்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் கொண்டது. துவைக்கக்கூடியது. சுயமாக சுத்தம் செய்துகொள்ளும் மேற்பரப்பைக் கொண்டது. இதனால் பாக்டீரியா, ஒவ்வாமை, தொற்று போன்றவை குறித்து கவலை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை என்பதே இதன் சிறப்பம்சமாகும்.

பிவிசி பாய்கள் போலல்லாமல் இந்த பாய் தூசுகளை விரட்டக்கூடியது. இதனால் சுவாசத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் யோகா பயிற்சிக்கு ஏற்றதாகும்.

இது வாசனையற்றது. இதன் நுண்ணுயிர் எதிர்ப்பு அம்சம் காரணமாக இயற்கையான மண்ணின் மணம் வீசும். நீண்ட யோகா பயிற்சி அமர்விற்குப் பிறகும் எந்தவித மணமும் இருக்காது.

தயாரிப்பிலிருந்து ப்ராண்ட் வரை…

கூடுதல் நிதியை முதலீடு செய்யவோ அனைத்து விண்ணப்பங்களையும் (போக்குவரத்து செலவுகள், ஆன்லைன் கட்டணம், வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைக்கேற்ற தயாரிப்பு போன்றவை) ஏற்றுக்கொள்ளவோ ஜுரு தயார்நிலையில் இல்லை. “சர்வதேச வணிக பார்ட்னர்களை அணுகுவது குறித்தோ அல்லது வணிக செயல்பாடுகளை மாற்றுவது குறித்தோ நாங்கள் முடிவெடுக்க இயலாத நிலையில் இருந்தோம்,” என்று நினைவுகூர்ந்தார்.

பூஜாவின் மாற்றம் சுமூகமாக இருக்க உதவும் விதத்தில் சுதர்சன் யோகா சந்தை குறித்து ஆர்வமாக ஆராய்ந்தார். இருவரும் சென்னை திரும்பினர். 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ’ஜுரு யோகா’ என்கிற பெயரில் ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பதிவு செய்தனர்.

"ஜுருவின் மிகப்பெரிய பலமே யோகிகளின் ஒருங்கிணைப்புதான். அவர்களது தேவைகளை புரிந்துகொண்டதால் அவர்களை ஆஃப்லைனிலும் ஆன்லைனிலும் அணுகுவது சாத்தியமானது. நாங்கள் முதலில் எங்களது மின் வணிக வலைதளத்தை அறிமுகப்படுத்தினோம். ஒத்த சிந்தனையுடைய சில்லறை வணிகர்களுடன் ஒன்றிணைந்து செயல்பட்டோம். சமூக ஊடகங்களிலும் வலைப்பதிவு வாயிலாக எங்களது தயாரிப்பை விளம்பரப்படுத்தினோம்,” என்றார்.

ஸ்பா சந்தையில் சிறப்பாக செயல்படுகின்றனர். இங்குள்ளவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமான தீர்வுகளை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்கின்றனர். தற்போது முன்னணி சர்வதேச ஸ்பாக்களுக்கு விநியோகித்து வருகின்றனர். அதே போன்ற மேலும் பல வாடிக்கையாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

யோகி சமூகத்தினரை சென்றடைய சமூக ஊடகங்களையும் வலைப்பதிவுகளையும் இந்திறுவனம் பயன்படுத்துகிறது. “ஆரோக்கியம் மற்றும் நிலையான வாழ்க்கைமுறைக்காக பங்களிப்பவர்கள், ஊக்கமளிப்பவர்கள் போன்ற யோகிக்களை தேர்ந்தெடுத்து பங்கேற்கவைக்கிறோம்,” என்றார்.

அமேசானின் லான்ச்பேட் ப்ரோக்ராமில் 25 ஸ்டார்ட் அப்களில் ஒன்றாக ஜுரு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்க தருணமாக அமைந்தது. அப்போது இந்தியா முழுவதும் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு FBA வாயிலாக இவர்களது தயாரிப்புகள் அதிகளவில் விற்பனையானது. 

கடந்த பன்னிரண்டு மாதங்களில் இவர்களது வருவாய் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. 4,000 பயனர்களுடன் யோகா பாய் மற்றும் பிற பொருட்களுடன் இதுவரை சுமார் 50 லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளனர். 

இந்த ஆண்டு மேலும் சில ஆரோக்கியம் சார்ந்த தயாரிப்புகளையும் இணை பொருட்களையும் இணைக்க திட்டமிட்டுள்ளனர், என்றார்.

”சீனாவிலிருந்து தரம் குறைவான கார்க் யோகா பாய்கள் சந்தையில் விற்பனையாகி வந்தது. இந்த தயாரிப்புகளிலிருந்து எங்களது பாயை வேறுபடுத்திக் காட்டுவதிலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதிலும் சமீபத்தில் பிரச்சனையை சந்தித்தோம்,” என்றார்.

ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் கீழ் இவர்களுக்கு டிஐபிபி அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

ஆங்கில கட்டுரையாளர் : பிஞ்சல் ஷா