பேச முடியாத பயில்வானின் ஓசையற்ற குரலுக்கு காது கொடுப்பார்களா?

0

சேறும், சகதியும் பூசிய உடலுடன், கண்கள் பளபளக்க, “டேஸி தங்கல்” என்று அழைக்கப்படும் அழுக்குப்படிந்த மல்யுத்த களத்தை மெல்ல வலம் வந்தபடி, தனது பலம்வாய்ந்த எதிராளியை எடை போடுகிறார் வீரேந்திர சிங். பின்னர் ஆச்சர்யப்படத்தக்க ஆற்றலுடன், அந்த பெரிய மல்லருடன் மோதுகிறார். ஒருசில அடிகளில் வீரேந்தர் தனது எதிராளியை வீழ்த்துகிறார். கூடி நிற்கும் கூட்டம் ஓ...வென ஆர்ப்பரிக்கிறது. ஆனால் அந்த ஆரவாரங்கள் எதையும் அவரால் கேட்க முடியாது. மிகப் பெரிய புன்னகையைத் தவிர அவரால் தனது ரசிகர்களுக்கு வேறு வகையில் நன்றி தெரிவிக்கவும் முடியாது. காரணம், இந்த 28 வயது மல்யுத்த வீரருக்கு காது கேட்காது, வாய் பேச முடியாது.

ஆனால் இதை எல்லாம் தாண்டி, அவர் பங்கேற்ற ஐந்து சர்வதேச போட்டிகளில் இந்தியாவிற்காக ஐந்து பதக்கங்களை வென்றிருக்கிறார். 2005ஆம் ஆண்டு மெல்பர்னில் நடைபெற்ற காதுகேளாதோருக்கான டிஃப்லிம்பிக்ஸ்( Deaflympics) போட்டியில் இந்தியாவிற்கான முதல் தங்கப் பதக்கத்தை அவர் பெற்றுத் தந்தார். அதேபோல பல்கேரியாவில் 2013இல் நடந்த Deaflympics போட்டியிலும் தங்கம் வென்றார். இவர்தான் இந்தியாவின் “கூங்கா பயில்வான்” (பேசமுடியாத பயில்வான்).


தங்கம் உள்பட இந்தியாவிற்கு 5 பதக்கங்களை வென்று தந்த காதுகேளாத மல்லர்

காது கேட்கக் கூடிய, வாய் பேசக் கூடிய மல்லர்களுக்கு இவர் சத்தர்சால் மைதானத்தில் பயிற்சி அளிக்கிறார், அவர்களை வீழ்த்தி வெற்றி கொள்கிறார். சுஷீல் குமார் உள்பட மல்யுத்தத்தில் நிறைய ஒலிம்பிக் நம்பிக்கையாளர்களை உருவாக்கி இருக்கிறது இந்த சத்தர்சால் மைதானம். சிறுவர்களாக இருந்தபோது, இவரும் சுஷீலும் மல்யுத்தம் செய்வார்கள். இப்போதும் அவர்கள் ஒன்றாக பயிற்சி செய்கிறார்கள். ஆனால் இந்தியாவில் தரைவிரிப்பில் நடத்தப்படும் அதிகாரப்பூர்வ போட்டிகள் ஒன்றில் கூட வீரேந்தர் இதுவரை பங்கேற்றதில்லை.

பெங்களூரில் நடைபெற்ற India Inclusion Summit-இல் நாம் அவரை சந்தித்தபோது, “ஹலோ, நான்தான் கூங்கா பயில்வான்” என்று சைகை மொழியில், ஒளிவீசும் புன்னகையுடன் சொன்னார் வீரேந்தர். ‘பேசமுடியாத பயில்வான்’ என்ற அர்த்தம்கொண்ட அந்த பட்டப்பெயரை அவர் பெருமையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இத்தனை பதக்கங்களை குவித்தபோதும், இதுவரை எந்த விருதுகளையும், பணமுடிப்புகளையும் பெற்றதில்லை என்று வீரேந்தர் சொன்னபோது, அது நம்மை மிகவும் ஆழமாக சென்று பாதிக்கிறது. தனது அன்றாட வாழ்க்கையை ஓட்ட, அவர் ஹரியானா மின்வாரியத்தில் குமாஸ்தா வேலை பார்க்கிறார். மற்ற நேரங்களில், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகளுக்கு செல்கிறார். 2005,  டிஃப்லிம்பிக்ஸில் பங்கேற்பதற்கு கூட இவர்தான் பணம் கட்ட வேண்டி இருந்தது. இவ்வளவிற்கும், இந்தியாவில் இருந்து சென்றிருந்த ஒரே பயில்வான் இவர்தான். இவர் அந்த போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற போதும், 2008இல் எந்த மாற்றமும் வந்துவிடவில்லை. உலக காது கேளாதோர் மல்யுத்த போட்டியில் (World Deaf Wrestling Championship) பங்கேற்க வழக்கம்போல் இவர்தான் பணம் கட்ட வேண்டியிருந்தது. இறுதியில், நீண்ட இழுபறிக்கு பிறகு, 2013இல் டிஃப்லிம்பிக்ஸ் போட்டியில் இவருக்கான செலவுகளை இந்திய விளையாட்டு ஆணையம் (SAI - Sports Authority of India) ஏற்றுக் கொண்டது.

உடல்திறன்மிக்க விளையாட்டு வீரர்களுக்கான சர்வதேச போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்க வேண்டும் என்பது வீரேந்தரின் கனவு. அவர் மல்யுத்தம் செய்வதை பார்த்த அனைவரும், அவரின் அளப்பரிய ஆற்றலைக் கண்டு வியந்து போயிருக்கிறார்கள். காதுகேளாத வீரர்கள் ஒலிம்பிக்ஸ் உட்பட அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கலாம். சொல்லப் போனால், 2012 லண்டன் போட்டிகளில், அமெரிக்க அணியில் மூன்று காதுகேளாத வீரர்கள் இருந்தனர். ஆனால் இந்திய மல்யுத்த சங்கம் இந்த விஷயத்தில் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறது.

சோர்வுறச் செய்யும் இந்த சூழலில், 20 வயதுகளின் இருக்கும் மூன்று இளம் திரைக் கலைஞர்கள், மித் ஜனி, பிரதீக் குப்தா, விவேக் சவுத்ரி ஆகியோர், வீரேந்தரின் கதையை உலகுக்கு சொல்ல முடிவெடுத்தார்கள். "மிஷன் ரியோ16" (Mission Rio16) என்ற தங்கள் பிராஜெக்டின் பிரதான அம்சமாக ‘கூங்கா பயில்வான்’ என்ற ஒரு மணிநேரம் ஓடக் கூடிய ஆவணப் படத்தை தயாரித்தார்கள். “ரியோவில் நடைபெற உள்ள 2016 ஒலிம்பிக்ஸில் பங்கேற்க வேண்டும் என்ற வீரேந்தரின் கனவை நனவாக்க உதவும் ஒரு சிறிய முயற்சி இது” என மித், பிரதீக் மற்றும் விவேக் ஆகிய மூவரும் யுவர் ஸ்டோரியிடம் சொன்னார்கள்.

“வீரேந்தர் இதுவரை வென்ற பரிசுகளுக்காக ஒருமுறை கூட சன்மானம் பெற்றதில்லை என்பது உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கிறது”, என்கிறார்கள் இவர்கள்.

வீரேந்தர் ஒவ்வொரு ஆண்டும், 20-25 போட்டிகளில் கலந்து கொண்டு, ரூபாய்.5000 முதல் ரூ.100,000 வரை பரிசு வெல்வதாக சொல்கிறார் விவேக். “நாங்கள் பார்த்த அனைத்து போட்டிகளிலும், ஒரே ஒருமுறை தான் அவர் தோல்வியடைந்தார். அதுகூட, நடுவரின் தவறால் நிகழ்ந்தது. அவர் 74 கிலோ எடை இருக்கிறார். ஆனால் 100 கிலோவிற்கும் அதிக எடை உள்ள மல்லர்களுடன் மோதி, அவர்களை தோற்கடிக்கிறார்”, என்கிறார் விவேக்.

இவர்களின் படம் தற்போது பல்வேறு இந்திய நகரங்களில் திரையிடப்பட்டு வருகிறது. இதைப் பார்க்கும் அதிகாரிகள், ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுக்காக நடத்தப்படும் மாநில மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க வீரேந்தருக்கு வாய்ப்பு வழங்குவார்கள் என இவர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.


தற்போதைய செய்தி

கூங்கா பயில்வானுக்காக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்திற்கு முழு ஆதரவு அளிக்கப்பட்டால், கூங்கா பயில்வான் படத்திற்கு தேவையான நிதி உதவி கிடைத்துவிடும். நமது இறுதி லட்சியத்தை அடைய உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை.

பிரச்சார இணையதளத்திற்கு செல்ல: https://www.wishberry.in/campaign/goonga-pehelwan/