’டிஜிட்டல் இந்தியா’- இந்திய மொழிகளில் மத்திய அமைச்சக இணையதளங்கள் விரைவில் அறிமுகம்! 

0

இந்த ஆண்டு மே மாதம், பிரதமர் நரேந்திர மோடி தனது இணையதளத்தை ஆறு பிராந்திய மொழிகளில் (ஆங்கிலம், ஹிந்தி தவிர) வெளியிட்டார். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி தெரியாத இந்திய மக்களையும் டிஜிட்டல் யுகத்தில் இணைக்க அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளின் ஆரம்பமாக இது பார்க்கப்பட்டது. 

பிரதமர், நம் நாட்டை டிஜிட்டலாக்கவேண்டும் என்பதில் கொண்டுள்ள தீவிரம் அவர் எடுத்துவரும் பல நடவடிக்கைகள் வழியே தெளிவாக நமக்கு புலப்படுகிறது. அண்மையில், மத்திய அமைச்சர்கள் அனைவரையும் அவரவர் துறைகளின் இணையதளத்தை எல்லா இந்திய மொழிகளிலும் வெளியிட உத்தரவிட்டுள்ளார் மோடி. 

டைம்ஸ் பேட்டியில் பேசிய அரசு அதிகாரி ஒருவர், “அரசு இணையதளங்கள் ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமல்லாமல் மக்களுக்கு சென்றடையக் கூடிய அவர்களின் மொழிகளில் இருக்கவேண்டும், அப்போதே அவர்களால் எல்லாவித தகவல்களையும் அறிந்து கொள்ளமுடியும் என்பது பிரதமரின் நோக்கம்.”  

நாளிதழ்களின் செய்திகள் படி, 

“இந்த பணி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகத்துக்கு தரப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான உதவிகளை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் மற்றும் CDAC என்ற அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டிங் மையம் வழங்கி வருகிறது.” 

மோடியின் இணையதளம் பெங்காலி, மராத்தி, தமிழ், மலையாளம், குஜராத்தி மற்றும் தெலுங்கில் தற்போது உள்ளது. பிரதமரில் தளம் மட்டுமே தற்போது இந்த மொழிகளில் உள்ளது, அதனால் எல்லா அமைச்சகங்களும் தங்களின் தளங்களை பல இந்திய மொழிகளில் வெளியிடும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

இந்திய ஊரக எல்லைகள் வரை தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவே பிரதமர் மோடி, ரேடியோ மூலம் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தினார். அது 23 இந்திய மொழிகளில் ஒளிப்பரப்பட்டு வருகின்றது. அதே போல் மக்களிடையே நேரடி தொடர்பு கொள்ள அவ்வப்போது சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களையும், பதிவுகளையும் மோடி செய்வதில் தவறுவதில்லை. இவை எல்லாமே தனது அரசு, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முழு பலனை பெறவே என்பதில் சந்தேகமில்லை. 

ஸ்டார்ட்-அப்’ களுக்கு நல்ல செய்தி

இந்த நடவடிக்கைகள் அனைத்துமே ஸ்டார்ட்-அப்’களுக்கு நல்ல ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றே சொல்லவேண்டும். இந்திய மொழிகளை டிஜிட்டல் தளத்தில் கொண்டுவர உழைக்கும் தொடக்க நிறுவனங்களுக்கான அரிய வாய்ப்பு இது. பிராந்திய மொழிகளில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டு பணிபுரியும் 14 ஸ்டார்ட்-அப்களை யுவர்ஸ்டோரி அண்மையில் தனது ‘பாஷா’ விழாவில் அறிமுகப்படுத்தியது. பாஷா விழாவின் மூலம் இந்தியாவை இண்டெர்நெட் நாடாக மாற்ற முற்படும் நிறுவனங்களை ஊக்குவித்தோம். இதன் மூலம் இந்தியர்கள் அனைவரும் எல்லாரிடமும் தகவல்களை பரிமாறிக்கொண்டு, தேவையான சேவைகளையும் பெறமுடியும். யுவர்ஸ்டோரி’யும் கடந்த ஆண்டு ஆங்கிலம் தவிர தனது தளத்தை 12 இந்திய மொழிகளில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.