செயற்கை மருந்துகள் அல்லாத மூலிகை கோழிப் பண்ணை நிறுவியுள்ள மதுரை பெண் பட்டதாரி!

91

உணவே மருந்து என்கிற காலம் கடந்து, மருந்தே நமக்கு உணவாகி விட்டது...

இயற்கையாகக் கிடைக்கக் கூடிய உணவை எல்லாம் செயற்கை முறையில் விளைவித்து விற்கின்றனர். ஆர்கானிக், இயற்கையான காய் பழம் எல்லாம் அதிக விலை கொடுத்து, ஒரு சில சமூகத்திற்கு மட்டுமே கிடைக்கும் அளவிற்கு அறிதாகிவிட்டது. காய் பழத்திற்கே இந்த நிலைமை என்றால் இறைச்சி மட்டும் எப்படி இயற்கையானதாய் அமையும்.

நாம் அனைவரும் தினமும் ருசித்து உண்ணும் கோழி இறைச்சி பெரிதாக வளர வேண்டும் என ஆண்டிபயாடிக் போன்ற மருந்துகளை கொடுத்து சுகாதாரமற்ற நிலையில் கோழிகளை வளர்கின்றனர். மருந்து அளித்த கோழியை நாம் உணவாய் உண்ணுகிறோம். இதில் இருந்து மாறுபட்டு இயற்கை பண்ணை மூலம் கோழிகளுக்கு மூலிகைகளை உணவாக கொடுத்து பண்ணை நடத்தி வருகிறார் மதுரையைச் சேர்ந்த கார்த்திகா.

சரவணா மூலிகை சிக்கன் நிறுவனர் கார்த்திகா
சரவணா மூலிகை சிக்கன் நிறுவனர் கார்த்திகா
“என் தந்தை கோழி பண்ணை வைத்துள்ளார், நான் பயோ-டெக் முடித்தவுடன் மூன்று வருடம் ஆராய்ச்சி செய்து இந்த மூலிகைக் கோழிப் பண்ணையை நிறுவியுள்ளேன்,”

என தான் தொழில்முனைவரான கதையை பேசத் தொடங்கினார் கார்த்திகா. சரவணா மூலிகை சிக்கன்’ பண்ணையை நடத்தி வருகிறார் இவர். இதில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு 48 வகையான மூலிகைகளை உணவாக அளிக்கின்றனர். மேலும் இதில் எந்த வித ஆண்டிபயாடிக் கலப்படமும் இல்லாத கோழி என நாமக்கலில் இருக்கும் தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சிக்கூடம் சான்றிதழ் அளித்துள்ளது.

தொழில்முனைவரான பயணம்:

கார்த்திகா, 2016-ல் பயோ-டெக் படிப்பை முடித்தார். சிறந்த மாணவியாக நல்ல மதிப்பெண்களோடு படிப்பை முடித்த இவருக்கு, பல பெருநிறுவனங்களிடம் இருந்து வேலை வாய்ப்பு வந்தது. ஆனால் கார்த்திகாவின் எண்ணம் தொழில் மீது தான் இருந்தது.

“எனக்கும் என் தந்தைக்கும் ஒரே எண்ணம் தான், ஏதோ ஒரு வகையில் மக்களுக்கு உதவ வேண்டும். அவர் தந்த ஊக்கத்தால் கல்லூரி படிக்கும்பொழுதே இந்த ஆரய்ச்சி மேற்கொண்டு இன்று இதைத் துவங்கியுள்ளேன். அதிரிஷ்டவசமாக என் கல்வியும் தொழிலும் ஒன்றாக கைக்கோர்த்துள்ளது,” என்கிறார்.
கார்திகா - தந்தை சரவணன் உடன்
கார்திகா - தந்தை சரவணன் உடன்

கார்த்திகாவின் தந்தை சரவணன், ஒய்வு பெற்ற அரசு அதிகாரி ஒரு கோழி பண்ணை வைத்து உள்ளார். கார்த்திகா தன் தந்தையுடன் வணிகம், அரசியல் என அனைத்து பற்றியும் கலந்துரையாடுவார், அப்படிப்பட்ட ஒரு உரையாடலின் போதுதான் இயற்கை முறையில் கோழி பண்ணை வைக்கும் யோசனை புலப்பட்டது.

“பள்ளிப் பருவத்தில் இருந்தே பொருட்கள் மறுசுழற்சி, மரங்களை நடும் பிரச்சாரங்கள் போன்றவற்றில் ஈடுப்படுவேன். அப்பொழுது இருந்தே மக்களுக்கு உதவும் ஏதோ ஒன்று செய்யவேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்தது,” என நினைவு கூறுகிறார்.

தொடக்கத்தில் சந்தித்த சிரமங்கள்:

பொதுவாக ப்ராய்ளர் கோழிகள் என்றால் நாட்டு கோழிகளை விட பலவீனம் ஆனது.  நோயால் அதிகம் ப்ராய்ளர் கோழிகளே பாதிக்கப்படும். அதனால் அதை மருந்துகள் கொடுக்காமல் மூலிகையில் வளர்ப்பது என்பதே ஒரு பெரிய சவாலாக இருந்தது என்கிறார் கார்த்திகா. சொந்த பணத்தில், தன் தாயின் சேமிப்பில் இருந்தே இந்த பண்ணையை துவங்கியுள்ளார் அவர்.

இயற்கை பண்ணைக்கான காரணம்:

அசைவ விரும்பிகளுக்கு குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய மிக சிறந்த புரதம் கோழி இறைச்சி. ஆனால் இதில் அதிக செயற்கை மருந்துகளை பொருத்துவதால் வராத வியாதிகளும் நமக்குள் வந்துவிடுகிறது. நமக்கு பிடித்த இந்த உணவே நம் உடல் நலகேடுக்கு வழி செய்கிறது என தெரியாமல் நாம் உண்ணுகிறோம்.

“கோழிகள் எளிதில் சதை போட நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் செயற்கை வளர்ச்சி ஊக்குவிப்புகளைப் பயன்படுத்கிறார்கள். இதை உண்ணும் குழந்தைகள் இயல்புக்கு மீறிய வளர்ச்சி அடைகிறார்கள், மேலும் பெண்கள் மிக இளம் வயதில் பருவமடைகிறார்கள்,”

என செயற்கை கோழியின் அபாயத்தை விளக்குகிறார் கார்த்திகா.

மூலிகை கோழிப் பண்ணை
மூலிகை கோழிப் பண்ணை

பல கால்நடை ஆராய்ச்சி கூடங்கள் செயற்கை கோழியின் அபாயத்தை வெளியிட்டு தான் வருகிறார்கள். இதை எல்லாம் அதிகம் கவனித்த கார்த்திகா, எந்த பக்க விளைவுகள் இல்லாமல் நல்ல தரமான இறைச்சி வழங்க வேண்டும் என்று முடிவு செய்தார்.

“மூலிகை கோழியின் முன்னோடியான நாங்கள் வேப்பம், கறி இலை, நெல்லிக்காய், கீழாநெல்லி போன்ற 48 மூலிகைகளைக் கொடுத்து கோழிகளை வளர்க்கிறோம்,” என பெருமிதம் கொள்கிறார்.

தன் சொந்த ஊர் ஆன மதுரையில் முதல் கடையை திறந்துள்ளார். அதன் பின் ப்ரான்சைஸ் முறை மூலம் ஐந்து மாவட்டங்களுக்கு சரவணா மூலிகை கோழியை விரிவுப் படுத்தியுள்ளார். இதில் சென்னை, கோயம்புத்தூர், திண்டுக்கல், சிவகாசி மற்றும் காரைக்குடி அடங்கும்.

“மூலிகை கோழியின் தனித்துவமான சுவையை மக்கள் வறவேற்கின்றனர். அவர்களின் நேர்மையான கருத்தே நாங்கள் முன்னேற உதவியாக உள்ளது,”

என முடிக்கிறார் கார்த்திகா. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் இக்காலத்தில், கார்த்திகாவைப் போன்ற இளைய சமுதாயம் வருங்கால சந்ததியில் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு இதுபோன்ற மூயற்சிகளை முன்னெடுப்பது பாராட்டுக்குரியது.  

Related Stories

Stories by Mahmoodha Nowshin