தமிழக கிராமப்புறங்களில் வலம்வரும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பேருந்து!

ஷாதி கன்ஸ் ’மேமோமொபைல்’ தமிழகத்தில் உள்ள 92 கிராமங்களுக்குச் சென்று ஒரு மாதத்திற்கு 500 மேமோகிராம் பரிசோதனை செய்கிறது.

0

ஷாதி கன்ஸ் என்பவர் அறிவாற்றல் சைக்கோதெரபிஸ்ட் மற்றும் விஞ்ஞானி. அத்துடன் இவர் மார்பக புற்றுநோய் தாக்கி உயிர் பிழைத்தவர். இவர் இந்தியாவின் முதல் முறையாக முழுமையான உபகரணங்களுடன்கூடிய புற்றுநோய் ஸ்க்ரீனிங் பேருந்தை தமிழகத்தில் உருவாக்கியுள்ளார். இந்த பேருந்தில் மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோய் ஸ்கிரீனிங் செய்யப்படுகிறது.

இந்தியாவில் வசித்து வரும் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இவர் கொடையாளி மற்றும் சமகால கலைஞர். இவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்டு உயிர் பிழைத்ததால் தனது ஷாதி கன்ஸ் ஃபவுண்டேஷன் மேமோமொபைல் சாரிடபிள் ட்ரஸ்ட் வாயிலாக புற்றுநோய் குணமாகவேண்டும் என விரும்பியதாக ’தி பெட்டர் இண்டியா’ தெரிவிக்கிறது.

இவர் தாமாகவே இரண்டு கோடி ரூபாய் செலவிட்டு மேமோமொபைல் உருவாக்கினார். இதுவரை தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் 92 கிராமங்களுக்கு இந்தப் பேருந்து சென்றுள்ளது. ஒரு மாதத்திற்கு 500 மேமோகிராம் செய்யப்படுகிறது.

தி இண்டியன் எக்ஸ்பிரஸ் உடனான நேர்காணலில் கன்ஸ் குறிப்பிடுகையில், 

“இந்தியாவில் ஒரு பெண்ணுக்கு புற்றுநோய் இருப்பது தாமதமாகவே கண்டறியப்படுவதால் உதவமுடியாமல் போகிறது. இந்த காரணத்திற்காகவே நான் இந்த ஃபவுண்டேஷனைத் துவங்கினேன். இந்தப் பேருந்து தற்போது தமிழகத்தின் கிராமப்புறங்களுக்குச் செல்கிறது. அங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மேமோமொபைலில் புற்றுநோய்கான ஸ்கிரீனிங் செய்துகொள்ள பெண்களை சம்மதிக்கவைக்கிறோம்,” என்றார். 

இந்தப் பேருந்து வெவ்வேறு பிரிவுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சாதனம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது நோய் இருப்பதைக் கண்டறிந்து உடனடியாக சோதனை முடிவுகளை வழங்கக்கூடியதாகும்.

மேமோகிராஃபி செய்வதற்கான பகுதியும் பரிசோதனை முடிவுகளை பெற்றுக் கொள்வதற்கான கட்டுப்பாட்டு அறையும் உள்ளது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆய்வு செய்வதற்கென பிரத்யேக பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் உடனடியாக சென்னையில் உள்ள தி கேன்சர் இன்ஸ்டிட்யூட்டில் உள்ள மருத்துவக் குழுவால் சரிபார்க்கப்படுகிறது.

கன்ஸ் அவர்களுக்கு சாலைகளின் நிலையே மிகப்பெரிய சவாலாக உள்ளது.

“சாலைகள் மேடுபள்ளத்துடன் காணப்படுவதால் மருத்துவ சாதனங்களை பராமரிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனவே அனலாக் சாதனத்தையே தேர்வு செய்கிறேன். இதில் பரிசோதனை முடிவுகள் சிடியில் சேகரிக்கப்பட்டு கூரியர் அனுப்பப்படுகிறது,” என்றார்.

’இந்தியப் பெண்களில் மார்பக புற்றுநோய் பரவுதல்’ என்கிற தலைப்பு கொண்ட ஒரு கட்டுரையில், “இந்தியப் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் பாதிப்பில் மார்பகப் புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. 1,00,000 பெண்களில் வயது விகிதம் 25.8 உள்ளது. அதேபோல் 1,00,000 பெண்களில் இறப்பு 12.7-ஆக உள்ளது,” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்றும் இந்தியப் பெண்கள், குறிப்பாக கிராமப்புறப் பெண்கள் புற்றுநோய் தாக்கத்திற்கான தீர்வு குறித்து அறிந்திருக்கவில்லை.

மார்பக புற்றுநோய் கண்டறியப்பட்ட பெண்களுக்கு கன்ஸ் அறக்கட்டளை மற்றுமொரு சுயநிதி முயற்சி வாயிலாக நிதி ஆதரவு அளிக்கிறது. அவர் கூறுகையில், “நான் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க முயற்சித்தேன். என்னுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அல்லது எனக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் போனது. எனினும் நகரில் நான் ஏற்பாடு செய்யும் விழிப்புணர்வு திட்டம் வாயிலாக சில பெண்கள் மற்றவர்களின் சிகிச்சைக்கு உதவ முன்வருகின்றனர்,” என்றார்.

ஏன் தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்கிற கேள்விக்கு,

 “இந்தியா அற்புதமான மனிதர்களைக் கொண்ட வலுவான நாடு. ஏன் தமிழ்நாட்டைத் தேர்வுசெய்யக்கூடாது? எங்களது அடுத்த மேமோமொபைல் பெங்களூருவில் செயல்படும் என நம்புகிறேன்,” என்றார்.

கட்டுரை : THINK CHANGE INDIA

Related Stories

Stories by YS TEAM TAMIL