'உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்'- ஒரு டைரிக்குறிப்பின் பின்னே உள்ள கதை! 

ஆட்டிச நிலையாளர் ஐஸ்வரியாவின் கதை!

0

ஏப்ரல் 2ஆம் தேதி - உலக ஆட்டிச விழிப்புணர்வு நாள். 2007 ஆம் ஆண்டு முதல் ஐ.நா.வின் அறிவுறுத்தலின் பேரில் உலகம் முழுவதிலும் இந்தநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அது என்ன ஆட்டிசம்?

ஏ.எஸ்.டி(ASD) என்று சுருக்கமாக சொல்லப்படும் இதன் முழுமையான பெயர் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு. இது ஒருவகையான நரம்பியல் குறைபாடு. இன்ன காரணமாகத்தான் இக்குறைபாடு ஏற்படுகிறது என்பதை இன்னும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், இதற்கு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. உலக அளவில் 68க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் ஒருகோடிக்கும் அதிகமான ஆட்டிசநிலையாளர்கள் இருக்கலாம் என்று சொல்கிறது, ’ஆக்ஷன் பார் ஆட்டிசம்’ என்ற தொண்டு நிறுவனம். 

'பஸில் குவீன்' ஐஸ்வர்யா ஸ்ரீராம்

படம் நன்றி - dtNext
படம் நன்றி - dtNext

ஆட்டிசநிலையில் இருக்கும் ஐஸ்வர்யாவைப் பற்றிய கட்டுரைதான் இது. புதிர்க்கட்டங்கள் எனப்படும் பஸில் அடுக்குவதில் ஐஸ்வர்யா படுஸ்மார்ட். 1000 துண்டுகள் கொண்ட பஸிலையும் எவ்வித சிரமமுமின்றி சரியாக அடுக்கிவிடும் சமத்தர். மூன்று வயதில் தொடங்கிய இவரின் பஸில் ஆர்வம் முப்பதுவயதை தாண்டியபின்னும் தொடர்கிறது. இவரது பஸில் சேர்க்கும் திறனுக்காகவே, இவரை ”பஸில் குவீன்” என்று அழைக்கிறார்கள்.

தான் அடுக்கிய பஸில்களைக்கொண்டு, பல கண்காட்சிகளையும் நடத்தியுள்ளார் ஐஸ்வர்யா. இவரால் சேர்க்கப்பட்ட பஸில் படங்களைக்கொண்டு, ஆண்டுதோறும் காலண்டர் கொண்டுவருகிறார்கள் ஐஸ்வர்யாவின் பெற்றோர்.

அறிவியல் வளர்ச்சியின் ஏணிப்படியில் உச்சியிலிருப்பதாக நாம் நினைத்திருக்கும் இன்றைய நாளில் கூட, ஆட்டிசம் பற்றிய விழிப்புணர்வு பெருகியிருப்பதாகக் கூற முடியாது. எனில், 30 வருடங்களுக்கு முந்தைய நிலை எப்படியிருக்கும் என்று நம்மால் யூகிக்க முடியும். அத்தகைய சூழலில் ஆட்டிசம் என்றால் என்ன என்பதை தங்களது அயராத தேடல் மூலம் புரிந்து கொண்டு, ஐஸ்வர்யாவின் குறை நிறைகளைத் தாண்டி முழுமையாக அவரை ஏற்றுக் கொண்டுள்ளனர் அவரது பெற்றோர்.

இன்னும் ஒரு படி மேலே போய் அவரைப் போன்ற அனைத்துக் குழந்தைகளின் வலியையும் புரிந்து கொள்ளவும், அவர்களுக்கு முடிந்த அளவு உதவவும் வேண்டும் என்ற நோக்கத்தோடு அப்போதே சிறப்புக் கல்வி ஆசிரியை பயிற்சியையும் மேற்கொண்டவர் திருமதி. கிரிஜா. குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஆரம்ப நிலை பயிற்சிகள் (Early Intervention) எனும் துறையில் பத்தாண்டுக்கும் மேல் பணி செய்திருக்கிறார்.

ஆட்டிச நிலையாளர்களுக்கு தினசரி வாழ்வில் அதிக மாற்றமில்லாத அட்டவணை முக்கியம். அதே நேரம் எந்த குறிப்பிட்ட செயலும் இல்லாதிருந்தால் அவர்களின் உலகில் மூழ்கிவிடுவர். எனவே ஐஸ்வர்யாவை காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை என்னென்ன வேலைகள் செய்ய வைப்பது என்று பட்டியல் போட்டு செயல்படுத்துகின்றனர் இப்பெற்றோர். யோகா, சைக்கிளிங், சமையலில் உதவி, பஸில் அடுக்குவது, டைரி எழுதுவது என ஒரு வினாடிப் பொழுதையும் வீணடிக்காது பயனுள்ளதாக்கி விடும் இவர்களது அயராத உழைப்பும், திட்டமிடலும் போற்றுதலுக்குரியது. இளம் ஆட்டிச நிலைக் குழந்தைகளை உடைய பெற்றோருக்கு இவர்கள் சிறந்த ஆதர்சமாவர்.

கடந்த சில வாரங்களுக்கு முன் இவரின் டைரிக்குறிப்புகளை தொகுத்து நூலாக கொண்டுவந்துள்ளனர் இவரது பெற்றோரான ஸ்ரீராமும், கிரிஜா ஸ்ரீராமும்.

அதுபற்றி கிரிஜா ஸ்ரீராம் நம்மிடம் பேசும்போது, 

“அப்பப்போ பழைய சம்பவங்களையெல்லாம் ஐஸி (ஐஸ்வர்யாவின் செல்லப்பெயர்) பேசுவா. தீடீர்னு ஒருநாள் மூணு வயசுல நடந்ததையெல்லாம் நினைவு வச்சுகிட்டு, பேச ஆரம்பிச்சா. எங்களுக்கோ பயங்கரமான வியப்பு. ஏன்னா.. இவ சொல்லுற இடங்கள் எல்லாம் இன்னிக்கு எப்படி எப்படியோ மாறிப்போயிடுச்சு. அந்த சம்பவங்கள் நடக்கிறப்போ இவள் எல்லாவற்றையும் கவனிச்ச மாதிரியும் எங்களுக்கு நினைவில்லை. ஆனால், இவள் சொல்லச்சொல்ல.. பழைய நினைவுகள் எல்லாம் எங்களுக்குள் தோன்ற ஆரம்பித்தது". 

அப்போதான், ஐஸ்வர்யாவோட அப்பாவுக்கு அவரை ஏன் டைரி எழுத வைக்கக்கூடாதுன்னு தோணிச்சு. அடுத்தநாளே டைரியோடு ஐஸி பக்கத்தில் உட்கார்ந்துட்டார், காலையில் இருந்து நடந்த ஒவ்வொரு சம்பவங்களாக நினைவு படுத்திக்கொண்டே வந்தார். அவளும் பதில் சொல்லிக்கிட்டே வந்தா. பதில் போதாது எழுதுன்னு சொன்னோம். ஆரம்பத்தில் கொஞ்சம் முரண்டு பண்ணினாலும்.. போகப்போக ஐஸிக்கு டைரி எழுதுறது பிடிச்சுப்போச்சு. இன்னிக்கு தொடர்ந்து எழுதிக்கிட்டு இருக்கா. அதுலையும் ஒரு ட்விஸ்ட் இருக்கு.

நாம் எல்லாம் எழுதுற மாதிரி விரிவா எழுத மாட்டாள். எல்லாம் குட்டிக்குட்டி வார்த்தைகள் தான். ஆனால் கடலையே கடுகுக்குள் அடக்கினமாதிரி, அந்த வார்த்தைகளை விரித்தால்.. பெரியதாக சம்பவங்கள் எல்லாம் நினைவு வரும்படியான லாவகம் இருந்தது. இன்னொன்றையும் சொல்லியாகவேண்டும். முதல்நாள் சம்பவத்தை எழுதிக்கிட்டு இருக்கிறவளுக்கு திடீர்னு ஐஞ்சுவயது சம்பவம் ஏதாவது நினைவு வந்திடும். அதையும் இதோட சேர்த்து எழுதிடுவா. நாங்களும் அதுக்கு தடை ஏதும் போடலை. இப்படி ஐஞ்சு வருஷத்துக்கு மேலே எழுதிக்கொண்டு வந்ததை எல்லாம் ஒன்று சேர படிக்கிறபோது ஒரு உண்மை பளிச்சுன்னு தெரிஞ்சது.

பொதுவாகவே ஆட்டிசக்குழந்தைகளுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தத்தெரியாதுன்னு சொல்லுவாங்க. ஆனா, ஐஸி தன்னோட எழுத்துல எல்லாவற்றையுமே வெளிப்படுத்தி இருக்கா.

"கோபம், துக்கம், சந்தோஷம், பயம்னு எல்லா விதமான பாவங்களையும் அவளோட டைரியில குறிப்பிடுறா. இதை பார்த்துட்டுத்தான் மைதிலிச்சாரி மேடம், இதை தொகுத்து தனி நூலாகக்கொண்டு வரலாம்னு சொன்னாங்க. முதலில் எனக்கோ என் கணவருக்கோ பெரிய ஆர்வமில்லை. ஆனா மைதிலி மேடம்தான் விடாம, இதைக்கொண்டுவந்தே தீரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. இதோ இப்ப நூலும் கையில் வந்துவிட்டது.” என்று சொல்லும்போதே வினைமுடித்த இனிமை முகத்தில் தெரிகிறது.

"அவளுக்கு என்று ஓர் மனம்" எனப் பெயரிட்டுள்ள இந்த டைரிக்குறிப்பைப் படிக்கும் எந்தவொரு ஆட்டிசநிலைக் குழந்தையின் பெற்றோருக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கும். ஐஸி சொல்லியிருக்கும் சில சம்பவங்களை அவர்களும் வாழ்வில் ஒருமுறையேனும் கடந்துவந்திருப்பார்கள். பேசுவதற்கு சிரமப்படும் குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்றுக்கொடுத்து, பயிற்சிகொடுப்பதன் மூலம் தங்களது தேவைகளை ஆட்டிசநிலையாளர்களால் வெளிக்காட்டிக்கொள்ளமுடியும் என்பதையும் ஐஸ்வர்யா நிரூபித்துள்ளார். இது நிச்சயம் மற்ற பெற்றோருக்கு ஒரு கண்திறப்புதான்.

இந்த நூல் வெளியீட்டு விழாவில் நீதியரசர்(ஓய்வு) திருமதி பிரபா ஸ்ரீதேவன், இயக்குநர் மணிரத்னம் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பேசுவதற்கு சிரமப்படும் ஆட்டிச குழந்தைகளுக்கு எழுத்துக்களை கற்றுக்கொடுத்து, பயிற்சிகொடுப்பதன் மூலம் தங்களது தேவைகளை ஆட்டிசநிலையாளர்களால் வெளிக்காட்டிக்கொள்ளமுடியும் என்பதையும் ஐஸ்வர்யா நிரூபித்துள்ளார். இது நிச்சயம் மற்ற பெற்றோருக்கு ஒரு கண்திறப்புதான்.

ஆட்டிச குறைபாடுடன் பிறந்த குழந்தைகளின் பெற்றோர்கள், மனம் ஒடிந்து போகாமல் ஐஸ்வர்யாவின் பெற்றோரைப் போல, விடாமல் முயன்றால் அக்குழந்தைகளையும் ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவர முடியும் என்பதை, உலக ஆட்டிச விழிப்புணர்வு தினச் செய்தியாக எடுத்துக் கொண்டு செயல்படவேண்டும்.

இது போன்ற சுவாரசியமான கட்டுரைகளை உடனடியாக பெற லைக் செய்யுங்கள் தமிழ் யுவர்ஸ்டோரி முகநூல்