மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமான ஆடைகள் வடிவமைக்கும் ப்ராண்டை சென்னையில் உருவாக்கிய ஷாலினி விசாகன்!  

0
”எங்காவது பயணம் செல்லவேண்டுமென்றால் சக்கர நாற்காலியில் இருக்கும் என்னுடைய கணவரை தூக்கவேண்டும். அவ்வாறு தூக்கும்போது சில சமயம் தோள்பட்டை மூட்டுகள் விலகிவிடும். எனவே அவரது பாண்டில் கைப்பிடிபோல இரு புறமும் இரண்டு பெல்ட்களை இணைத்துவிட்டேன். இதனால் அவரை சுலபமாக தூக்கமுடிகிறது,”

என்றார் ஷாலினி விசாகன். சுவஸ்திரா டிசைன்ஸ் நிறுவினரான 30 வயது ஷாலினி விசாகன், நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜியில் (NIFT) ஃபேஷன் டிசைனில் பட்டம் பெற்றவர்.

கணவர் விசாகன் உடன் ஷாலினி
கணவர் விசாகன் உடன் ஷாலினி

சந்தையில் கிடைக்கும் ஆடைகள் ஊனமுற்றோருக்கு ஏதுவால இல்லை, குறிப்பாக வீல்சேரில் பயணிக்கும் அவரது கணவருக்கு பொருத்தமாக இல்லை என்பதை உணர்ந்தார் ஷாலினி. அவரை தூக்குவதற்கு வாட்டமாக பெல்ட் அமைத்த பிறகு அவரது ஆடை குறித்து மேலும் ஆராய்ந்து, யாருடைய துணையுமின்றி அவராகவே அணிந்துகொள்ளும் விதத்தில் உடையை வடிவமைத்தார் ஷாலினி.

“என் அத்தையும் சக்கரநாற்காலி துணையுடன் இருப்பதால் எப்போதும் நைட்டிதான் அணிந்துகொள்வார். அவரால் சேலை அணிந்து கோவிலுக்கு செல்ல முடியாது. அவருக்காக ப்ளவுஸ் மற்றும் மடிப்புடனும் கூடிய சேலையை வடிவமைத்தேன்.”

இப்படிப்பட்ட சிறிய தனித்துவமான மாற்றங்களை செயல்படுத்தியது அவரது கணவர் விசாகனுக்கும் அவரது அத்தைக்கும் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததை ஷாலினி உணர்ந்தார். அப்போதுதான் மாற்றுத்திறனாளிக்கான பிரத்யேகமாக ஆடைகளை வடிவமைக்கும் எண்ணம் ஷாலினிக்கு ஏற்பட்டது.

”அதிக உடல் பருமன் உள்ளவர்களுக்கென பிரத்யேகமாக ப்ளஸ் சைஸ் ப்ராண்ட்கள் கிடைக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேகமான ஆடை வடிவமைப்பு இங்கு இல்லை. ஆகவே ஒரு ப்ராண்டை உருவாக்கி ஒரு பொட்டிக் திறக்கவேண்டும் என்று விருப்பப்பட்டேன்.” என்றார் ஷாலினி.

வித்யாசாகர் என்கிற மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் பெற்றோருடன் உரையாடி பல ஆராய்ச்சிகள் மேற்கொண்டார் ஷாலினி. வெவ்வேறு விதமான குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அவர்களுடைய தனிப்பட்ட தேவைக்கேற்றவாறு உடைகளை வடிவமைப்பது அவருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது.

“ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கும். முதுகுத் தண்டுவட பிரச்சனை உள்ளவர்கள் விரலசைப்பது கடினமாக இருக்கும். ஆகவே அவர்களுக்கென வெல்க்ரோவ், மேக்னெடிக் பட்டன்கள், ஜிப் போன்றவற்றை அவர்களது ஆடை வடிவமைப்பில் பயன்படுத்தினேன். என்னுடைய ஆராய்ச்சி இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில் மக்களிடம் பலதரப்பட்ட பிரச்சனைகள் உள்ளன.”

துணி வகைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்கிறார் ஷாலினி. பருத்தி மற்றும் லினென் துணிகளே வசதியாக இருக்கும் என்பதால் அவற்றை பயன்படுதுகிறார். சிலருக்கு டயாப்பர் அணிவிப்பதால் அவர்களது ஆடையில் பிரத்யேகமாக கால்களுக்கு இடையேயான பகுதியின் நீளத்தை அதிகரித்து வடிவமைத்துள்ளார்.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பார்ட்டி ஆடைகளும் அவரது வடிவமைப்பில் உள்ளது. பெண்களுக்காக சேலைகள், ஷ்ரக்ஸ் இணைக்கப்பட்ட சல்வார், க்ராப் டாப்ஸ் ஆகியவையும் ஆண்களுக்காக ஷெர்வானி மற்றும் தோதி பேண்ட் ஆகியவையும் உள்ளது.

இந்த பயணத்தில் மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணியும் விதத்தில் அவர்களுக்கென பிரத்யேகமாக ஷாலினியால் உருவாக்கப்பட்டுள்ள ப்ராண்ட் ’சுவஸ்த்ரா டிசைன்ஸ்’. இதை சமீபத்தில் ஹில்டணில் நடைபெற்ற ட்ரையோஸ் ஃபேஷன் ஷோவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தினார் ஷாலினி. இதில் 10 இந்திய-மேற்கத்திய ஆடை வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஐந்து உடைகள் ஆண்களுக்கானது மற்றும் ஐந்து உடைகள் பெண்களுக்கானது. ஷோவின் மாடல்களுக்கென இந்த உடைகளை வடிவமைத்தார். இதில் நான்கு பெண் மாணவிகள் வித்யாசாகர் அமைப்பைச் சேர்ந்தவர்கள். மூன்று பேர் பணிக்குச் செல்பவர்கள். இதில் கலந்துகொண்ட மற்றொருவர் ஷாலியின் கணவர் விசாகன்.

சுவஸ்த்ரா டிசைன்ஸ் எப்படிப்பட்ட ஆடைகளை வடிவமைத்துள்ளது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கண்காட்சியின் நோக்கம். இதன் பிறகு ஒவ்வொரு நபரின் குறிப்பிட்ட குறைபாடு மற்றும் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் அவர்களுக்கான ஆர்டரை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளார் ஷாலினி.

வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் அவர்களது பிரத்யேக தேவைகளை கலந்தாலோசிக்கவும் ஆடை வடிவமைக்கத் தேவையான அளவுகளை எடுத்துக்கொள்ளவும் அவர்களது இருப்பிடத்திற்கே செல்லவும் தயாராக உள்ளார் ஷாலினி.

சுவஸ்த்ராவில் கிடைக்கும் தனிப்பட்ட வடிவமைப்பு மற்ற ஆடையகங்களிலும் கிடைக்காது என்றார் ஷாலினியின் கணவர் விசாகன். மேலும் “என்னுடைய ஆடை வடிவமைப்பில் ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியதும் என்னால் யாரையும் சார்ந்திராமல் இருக்க முடிகிறது. எந்த ஒரு டெய்லரும் ஆடையில் சிறு திருத்தங்களை செய்து தர முன்வருவதில்லை. ஏனெனில் அதற்காக செலவிடும் நேரத்தில் ஒரு புதிய ஆடையை தைத்துவிடலாம் என்பதே அவர்களது எண்ணமாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட ஒரு ப்ராண்ட் மிகவும் பயனுள்ளதாக அமையும்.” என்றார்.

தன்னுடைய ஆர்வத்தை, சமூகத்தின் தேவைக்கேற்ப பயன்படுத்தி, அதையே தொழிலாக செய்து, பலரின் வாழ்வில் மாற்றத்தையும், உற்சாகத்தையும் கொண்டுவர முயற்சிக்கும் ஷாலினிக்கு நம் வாழ்த்துக்கள்!