நகரங்களையே வெட்கப்படச் செய்யும் 10 இந்திய கிராமங்கள்!

0

”காடுகள் அழிந்து போனால் இந்தியாவும் அழிந்து போகும்...” என்றார் மஹாத்மா காந்தி. 

இந்தியாவில் சுமார் 6.5 லட்சம் கிராமங்கள் உள்ளன. நாட்டின் மக்கள்தொகையில் சுமார் 68.8 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சிக்கும் செழிப்பிற்கும் கிராமப்புற வளர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

10 தனித்துவமான கிராமங்கள் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுவான நோக்கத்திற்காக குடியிருப்பவர்கள் ஒன்று திரண்டால் சாதிக்கமுடியும் என்பதற்கு இந்த கிராமங்களே சான்றாகும். முழுமையான சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் இந்தியாவின் முதல் கிராமம் முதல் 60 மில்லியனர்களைக் கொண்ட கிராமம் வரை இந்தக் கதைகள் விடாமுயற்சி, கடுமையான உழைப்பு, அடுத்தவர்கள் உணர்வை புரிந்துகொள்ளுதல் ஆகியவை நிரம்பியதாகும்.

1. கதவுகள் இல்லாத கிராமம் – சனி சிங்கப்பூர், மஹாராஷ்டிரா

இந்த கிராமத்தில் வீடுகள் மட்டுமன்றி வங்கிகளுக்கும் கதவுகள் இல்லை. சனி சிங்கப்பூர் மஹாராஷ்டிராவின் அஹமதாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு வசிப்பவர்கள் பாதுகாப்பிற்கான தேவை இல்லை என்று நினைக்கின்றனர். இங்கு இந்துக்களின் கடவுளான சனி பகவானின் கோயில் உள்ளது. இவர் இந்த கிராமத்தை பாதுகாப்பதாக இங்குள்ளவர்கள் நம்புகின்றனர். 

சனி கடவுள் இந்த கிராமவாசி ஒருவரின் கனவில் தோன்றி இங்குள்ள கதவுகளை நீக்கும்படி கூறியிருக்கிறார். இதில் விநோதமான விஷயம் என்னவென்றால் பல நூறாண்டுகளாக இந்த கிராமத்தில் எந்தவித திருட்டு புகாரும் பதிவாகவில்லை. கிராமத்தின் பாரம்பரியத்தைப் பின்பற்றி 2011-ம் ஆண்டு யூகோ வங்கி இந்த கிராமத்தின் பூட்டில்லாத கிளையை திறந்தது. இதுவே நாட்டின் கதவுகளில்லாத முதல் வங்கியாகும்.

2. இந்தியாவின் முதல் சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் கிராமம் – தர்னை, பீஹார்

தர்னை பீஹாரின் ஜெஹனாபாத் மாவட்டத்தில் போத்கயாவிற்கு அருகில் உள்ளது. சமீபத்திய காலம் வரை இங்கு மின்சார வசதி இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு கிராமவாசி ஒருவர் இந்த பிரச்சனையை கையில் எடுத்தார். க்ரீன்பீஸ் உதவியுடன் சூரியஒளி மின் உற்பத்தி செய்யும் மைக்ரோ க்ரிட்டை நிறுவியுள்ளனர். இதனால் 450-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் 50 வணிக நிறுவனங்களுக்கும் 24X7 மின்சாரம் கிடைக்கிறது. 

இந்த கிராமத்தில் உள்ள 2,400 பேர் தங்களது மின்சார தேவைகளை தாங்களாகவே பூர்த்தி செய்துகொள்கின்றனர். தர்னையில் உள்ள குழந்தைகள் பகல் நேரத்தில் மட்டுமே படிக்கமுடியும் என்கிற நிலை தற்போது இல்லை. போதுமான சாலை விளக்குகள் இருப்பதால் பெண்கள் இரவிலும் பயமின்றி வெளியே செல்லலாம். சிறிய தொழிற்சாலைகள் செயல்படத்துவங்கி கிராமம் செழித்து வருகிறது.

3. இந்தியாவில் மூங்கில் சார்ந்த பொருளாதார வளர்ச்சியடைந்த முதல் கிராமம் – மெந்தா லேகா மகாராஷ்டிரா

மெந்தா லேகா மஹாராஷ்டிராவின் கட்சிரோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பழங்குடி கிராமமாகும். ஆறு ஆண்டுகள் சட்டரீதியான போராட்டத்திற்குப் பிறகு இந்த கிராம சமூகத்திற்கு வன உரிமை வழங்கப்பட்டது. இவ்வாறு இந்தியாவில் வன உரிமை வழங்கப்பட்ட முதல் கிராமம் இதுதான். இன்று இந்த கிராமத்தின் பொருளாதாரத்தில் மூங்கில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்த கிராமத்தில் வசிக்கும் 450 பேரில் பெரும்பாலானோர் கோண்ட் பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒன்றிணைந்து பேப்பர் துறைக்கு மூலப்பொருளாக பயன்படுத்த மூங்கில் சாகுபடி செய்கின்றனர். கிராம மக்கள் கோடிகளில் லாபம் ஈட்டுகின்றனர். இவ்வாறு ஈட்டப்படும் பணத்தை பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் சமூல நல நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.

4. அனைவரும் சமஸ்கிருதம் பேசும் கிராமம் – மத்தூர், கர்நாடகா

மத்தூர் கிராமம் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ளது. இந்தியாவிலேயே இந்த பகுதியில்தான் பழமை வாய்ந்த மொழியான சமஸ்கிருதம் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் சுமார் 5,000 கிராமவாசிகள் ஒருவரோடொருவர் சமஸ்கிருத மொழியிலேயே உரையாடுகின்றனர். குழந்தைகள் பத்து வயதிலேயே வேதம் கற்கின்றனர். இங்குள்ள சாலைகளில் செல்லும்போது அனைத்து விதமான உரையாடல்களையும் சமஸ்கிருத மொழியிலேயே பரிமாறிக்கொள்வதைப் பார்க்க முடியும். 

1981-ல் ஒரு நிறுவனம் பயிற்சி பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்தது. இதன் காரணமாக இங்குள்ள கிராமவாசிகள் இந்த மொழியை புதுப்பித்து சமஸ்கிருதத்தை தங்களது பிரதான மொழியாக மாற்ற முயற்சி மேற்கொண்டனர்.

5. இந்தியாவின் ஏழ்மையான கிராமங்களில் ஒன்றாக இருந்து செழிப்பாக மாறிய கிராமம் – அச்சலா, ஒடிசா

அச்சலா கிராமம் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் உள்ளது. முன்னர் இந்தியாவின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக கருதப்பட்டது. பல நேர்மறையான நடவடிக்கைகளால் இந்த கிராமத்தின் நிலை மாறி வருகிறது. இன்று இங்கு முந்திரி வளர்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்து வருகிறது. 

சந்தையில் ஒரு கிலோ முந்திரி 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் கிராமத்தினரின் வருவாய் அதிகரிக்க உதவியுள்ளது. விரைவாக வருவாய் ஈட்டித்தருகிறது. அத்துடன் இதற்கான தண்ணீர் தேவையும் குறைவு. தற்சமயம் 250 குடும்பங்களில் 100 குடும்பங்கள் முந்திரி வளர்க்கின்றனர். இதனால் வருவாய் அதிகரித்து இந்த கிராமம் செழிப்படைந்துள்ளது.

6. உயர்தர வசதிகள் கொண்ட கிராமம் – பன்சாரி, குஜராத்

பன்சாரி கிராமம் குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சிறிய கிராமத்தில் இலவச வைஃபை, சிசிடிவி கேமராக்கள், ஏசி வசதியுடன் கூடிய பள்ளிகள், தண்ணீர் சுத்திகரிப்பு ஆலைகள், பயோமெட்ரிக் இயந்திரங்கள் போன்ற வசதிகள் உள்ளது. மெட்ரோ நகரங்கள்கூட வெட்கப்படும் அளவிற்கு இங்கு உயர்தர வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. பன்சாரியில் இரண்டு ஆரம்பப் பள்ளிகள், ஆரம்ப சுகாதார மையம், முறையான சாலை விளக்குகள், சிறப்பாக செயல்பட்டு வரும் வடிகால் அமைப்பு ஆகியவை உள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி உள்ளது. இவை அனைத்தும் 23 வயதில் கிராமத்தின் தலைவராக ஆன ஹிமான்ஷு படேல் அவர்களால் சாத்தியமாயிற்று. நார்த் குஜராத் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான இவர் அரசாங்க திட்டங்கள் தனது கிராமத்தில் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்தார். கல்வி, சுகாதாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் கூடுதல் கவனம் செலுத்தினார். அப்போதிருந்து இந்த கிராமத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

7. 60 மில்லியனர்களைக் கொண்ட கிராமம் – ஹைவேர் பஜார், மஹாராஷ்டிரா 

ஹைவேர் பஜார் மஹாராஷ்டிராவின் அஹமத்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் பணக்கார கிராமமாகும். இந்த கிராமம் சில ஆண்டுகளுக்கு முன்னர் மஹாராஷ்டிராவிலேயே அதிக வறட்சி பாதிப்பிற்கு ஆளாகும் பகுதியாக கருதப்பட்டது. 1995-ல் தனிநபர் வருமானம் 830 ரூபாயாக இருந்தது. கிட்டத்தட்ட அதே நேரத்தில் கிராமவாசிகளில் ஒரே முதுகலை பட்டதாரியான பொபாட்ராவ் பவர் கிராம பஞ்சாயத்து தேர்தலில் மிகுந்த தயக்கத்துடன் போட்டியிட்டு தலைவரானார். அவர் பொறுப்பேற்றவுடன் கிராமத்தில் இருந்த 22 மதுக்கடைகளை மூட மக்களை சம்மதிக்க வைத்தார். ஏழை விவசாயிகளுக்கு கடன் வழங்க பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா உடன் கிராம் சபா இணைந்து செயல்பட ஏற்பாடு செய்தார். 

35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராலேகான் சித்தியில் அன்னா ஹசாரேவின் பணிகளால் உந்துதலளிக்கப்பட்டு ஹைவேர் பஜாரில் மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு திட்டங்களைத் துவங்கினார். இந்த கிராம மக்கள் 52 மண் அணைகளையும், 32 கல் அணைகளையும் 9 தடுப்பணைகளையும் கட்டினர். சுமார் 300 திறந்தவெளி கிணறுகளையும் தோண்டினர். நிலத்தடி நீர் அதிகரித்து கிராமம் செழிப்பானது. இன்று இந்தியாவிலேயெ அதிக தனிநபர் வருவாய் கொண்ட கிராமமாக மாறியுள்ளது. இந்த கிராமவாசிகளின் சராசரி மாத வருவாய் 30,000 ரூபாய். இதில் உள்ள 235 குடும்பங்களில் 60 குடும்பங்கள் மில்லியனர்களாக உள்ளனர்.

8. ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மவ்லின்னாங், மேகாலயா

மேகாலயா மாநிலத்தில் உள்ள மவ்லின்னாங் ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாகும். 2007-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு வீட்டிலும் முழுமையாக பராமரிக்கப்பட்ட கழிவறைகள் உள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் கழிவுகளை சேகரிக்க மூங்கிலால் ஆன குப்பைத் தொட்டிகள் உள்ளன. இந்த கிராமத்தில் புகை பிடிப்பதும் ப்ளாஸ்டிக் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. குப்பைகள் குழியில் புதைக்கப்பட்டு உரமாக பயன்படுத்தப்படுகிறது. 

கிராம மக்கள் ஒன்று திரண்டு பொது இடங்கள், பள்ளிகள், க்ளினிக் ஆகிய பகுதிகளை சனிக்கிழமைகளில் சுத்தம் செய்கின்றனர். காசி பழங்குடியினர் அதிகம் உள்ள இந்த கிராமத்தில் தாய்வழி ஆட்சி உள்ளது. மேலும் இது நூறு சதவீத கல்வியறிவு பெற்ற கிராமமாகும்.

9. ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடும் கிராமம் – பிப்லான்ட்ரி, ராஹஸ்தான்

பெண் குழந்தையை காப்பாற்றும் உன்னத முயற்சியுடன் சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் இந்த கிராம மக்கள் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகின்றனர். மேலும் பிப்லான்ட்ரி கிராம மக்கள் பெண் குழந்தை வளர்ந்ததும் சிறந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் ஈடும் வருவாய் தொகையை வைப்பு நிதியாக மாற்றுகின்றனர். 

பெண் குழந்தை பிறந்ததும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டு முறையாக பராமரிக்கின்றனர். பல ஆண்டுகளாக கால் மில்லியன் மரங்களை நட்டுள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் கற்றாழை வளர்ப்பிலும் ஈடுபட்டு அவற்றைக் கொண்டு ஜூஸ், ஜெல் ஆகிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக பிப்லான்ட்ரி கிராம மக்கள் இவற்றை பின்பற்றியதால் அவர்களது வாழ்வாதாரத்திற்கான ஒரு வாய்ப்பாகவே இது மாறியுள்ளது.

10. முன்னர் தரிசு நிலமாக இருந்த பகுதி தற்போது சுயசார்பிற்கான மைல்கல்லாகவே மாறியுள்ள கிராமம் – கத்பான்வாடி, மஹாராஷ்டிரா

கத்பான்வாடி மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ளது. முன்பு தரிசு நிலமாக இருந்த இந்தப் பகுதி இந்த கிராமத்தில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியரான பஜந்தாஸ் விட்டல் பவார் அவர்களின் நீர் பாதுகாப்பு முயற்சியால் இன்று சுய சார்புடன் விளங்குகிறது. இந்த கிராமத்திலேயே இளநிலை பட்டம் பெற்ற முதல் நபரான பஜந்தாஸ் 28 ஆண்டுகள் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு தனது பணியைத் துறந்து கிராமத்திஅ மேம்படுத்துவதில் முழு நேரமாக ஈடுபட்டார். 1988-ம் ஆண்டு புனேவில் இருந்து மீண்டும் தனது கிராமத்தில் குடிபுகுந்தார்.

ஆங்கில கட்டுரையாளர் : சௌரவ் ராய் | தமிழில் : ஸ்ரீவித்யா