நவீன விக்கிரமாதித்தன் கதைகள் பகுதி- 7

முதலீடு பெறுவதே குறிக்கோள் என்று போராடும் ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒரு நிமிடம் இதை படித்துவிடுவது நல்லது...

1

வென்ச்சர் கேப்பிடலை பற்றி பேசுவதற்கு முன் முதலீடை பற்றி பொதுவான விசயங்களை பார்த்துவிடலாம். நீங்கள் ஒரு முதலீட்டாளர். உங்களிடம் ஒரு பெரும் முதலீடு இருக்கிறது. எதில் முதலீடு செய்வீர்கள். Fixed Deposit, மியுச்சுவல் பண்ட், நிலம், தங்கம், பங்கு சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வீர்கள் சரிதானே. இவற்றில் அதிகபட்சம் எவ்வளவு லாபம் எடுக்க முடியும். சராசரியாக ஓராண்டுக்கு 6% முதல் அதிகபட்சம் 30% வரை எடுக்கலாம். கவனிக்க சதவீதத்தில் தான் லாபம் எடுக்கிறீர்கள். இதே வளர்ந்துவரும் ஒரு தொடக்க நிறுவனத்தில் (Startup) ஆரம்பகட்டத்திலேயே முதலீடு செய்கிறீர்கள். நல்ல ஐடியாவும், சரியான மார்கெட்டிங்கும், திறமையான டீம் இருக்கும் அந்த நிறுவனம் நாலுகால் பாய்ச்சலில் வளரும் போது உங்கள் முதலீடு பல மடங்காக வளரும். கவனிக்க பல மடங்கில் உங்கள் முதலீடு வளருகிறது.

மைக் மார்க்குலா ஆப்பிள் நிறுவனத்தில் 1980 வாக்கில் 80,000 டாலர் முதலீடு மற்றும் 170,000 டாலர்க்கு கடன் கொடுத்தும் உள்ளே வருகிறார். இன்று அவரின் சொத்து மதிப்பு 1.2 பில்லியன் டாலர்கள். இதுவும் கூட இவரின் பங்கை பலமுறை நடுவில் விற்ற பிறகும் உள்ள மதிப்பே. ஒருவேளை வாங்கியபோது இருந்த பங்கை இன்றும் விற்காமல் இருந்திருந்தால் உலகின் எட்டாவது பணக்காரராக இருந்திருப்பார். முப்பத்தேழு வருடத்தில் அவருடைய முதலீட்டின் வளர்ச்சி 15000 மடங்கு. சதவீதத்தில் சொல்வதென்றால் இன்னும் இரண்டு ஜீரோவை சேர்த்துக்கொள்ளலாம். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்திருந்தாலும் அதிகபட்சம் 200 மடங்கு மட்டுமே வளர்ந்திருக்க முடியும்.

இது தான் வென்ச்சர் கேபிட்டலின் யுத்தி. ஏஞ்சல் முதலீட்டாளர் Angel Investor-இல் இருந்து இவர்கள் எங்கே வேறுபடுகிறார்கள் என்றால் VC ஒரு நிறுவனமாக பெரிய முதலீட்டை கொண்டுவந்து கொட்டி பெரிய அளவில் ஸ்டார்ட்ப்பி-அப்பின் பங்குகளை பங்குசந்தைக்கு செல்வதற்கு முன்னமே மொத்தமாக பெற்றுவிடுவார்கள். மேலும் நிறுவனத்தின் மேனேஜ்மென்டிலும் பங்குகொள்வார்கள்.

உண்மையிலேயே உங்கள் நிறுவனத்திற்கு குறுகியகாலத்தில் ஒரு பெரும் முதலீடு தேவைப்பட்டால் மட்டுமே இவர்களை நாடுவது நல்லது. இல்லையென்றால் ஒட்டகம் நுழைந்த கூடாரம் ஆகிவிடும். உங்கள் ஸ்டார்ட்-அப் ஐடியா பலதேசத்திற்கும் பொருந்தக்கூடியதாகவும், மார்கெட்டிங்கிற்கு பெரிய முதலீடு தேவைப்படும் என்றால் VC கண்டிப்பாக தேவைதான்.

முதலீட்டை கோர A,B,C என்று முதலீட்டு தொடர்கள் உண்டு. ஒவ்வொரு தொடரிலும் நிறுவனரின் கணிசமான பங்கும், உரிமையும் குறையும், அதே சமயம் முதலீடு கூடுவதால் நிறுவனர் வைத்திருக்கும் பங்கின் மதிப்பு கூடும். சில நிறுவனங்கள் கிடைக்கும் முதலீட்டை வைத்து சரியான வகையில் மார்கெட்டிங் செய்து, நிறுவனத்தின் சேவையை மேம்படுத்தி லாபத்தை எடுப்பார்கள். நல்ல லாபத்தை ஈட்டும் பட்சத்தில் முதலீட்டை கோராமல் நிறுவனத்தை வளர்ப்பார்கள். மைக்ரோசாப்ட் இதற்கு நல்ல உதாரணம். 

பில்கேட்ஸ் ஆரம்பத்தில் நண்பர்களுடன் தொடங்கியபோது மட்டுமே பங்குகளை விட்டுக்கொடுத்தார். அதன் பிறகு பங்குசந்தையில் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஆகவே தான் இன்றும் Microsoft-இன் பெருவாரியான பங்கு அவர் கையில் இருந்து அவரை உலகின் பெரும் பணக்காரராக வைத்திருக்கிறது. இதற்கு நேர்மாறாக அவர்களை விட பெரிய நிறுவனமான ஆப்பிள் கம்ப்யுட்டர்ஸ்ஸின் பங்குகளை ஸ்டீவ்ஜாப்ஸ் முதலீட்டாளர்களிடம் நிறைய விட்டுக்கொடுத்ததால் இழந்தது அதிகம். 

Venture Capitals உள்ளே வரும்போது அவர்கள் விதிக்கும் விதிமுறைகளில் மிகக் கவனமாக இருக்கவேண்டும். நேரம் எடுத்துக்கொண்டு தகுந்த ஆலோசனைகளுக்கு பிறகு முடிவெடுப்பது அவசியம். இவர்கள் விசயத்தில் மார்க் சுக்கர்பர்க், எலன்மஸ்க், ஸ்டீவ்ஜாப்ஸ் போன்ற திறமையான தொழில்முனைவோர் பலரும் பதவி பறிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டிருகிறார்கள். பிறகு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோல இன்னும் பல கதைகள் இருக்கிறது. தேவைக்கு அதிகமாக முதலீடு கோரும்போது தான் இந்த பிரச்சனை. முதலீடே கோராமல் வளர்ந்த பில்லியன் டாலர் கம்பெனிகளும் உண்டு.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். 

என்று வள்ளுவர் சொல்வது போல தமக்கு எது தேவை எவ்வளவு தேவை என்றறிந்து தம்மால் செய்யமுடியும் செயலையும் அதைச் செய்வதற்கு ஏற்ற ஆற்றலையும் அறிந்து அதையே மனத்துள் சிந்தித்துச் செயல்படுபவர்களுக்கு முடியாதது ஒன்றும் இல்லை.

முதலீட்டு தேடலின் இறுதிப்பகுதி பங்குசந்தை. அதைப்பற்றி அடுத்தவாரம் விரிவாக பார்ப்போம்...

கதை தொடரும்...

(பொறுப்பு துறப்பு: இது விருந்தினர் கட்டுரைப் பகுதி. கட்டுரையில் உள்ள கருத்துக்கள் அவரின் தனிப்பட்ட கருத்துக்கள். யுவர்ஸ்டோரியின் கருத்துக்களை பிரதிபலிப்பவை அல்ல.)