’மிஸ் வீல்சேர் வேர்ல்ட்’ சென்று சாதனைப் படைத்த ப்ரியாவின் பயணம்!

19 வயதில் லூபஸ் நோய் பாதித்த ப்ரியா, மூன்று முறை மரணத்தின் விளிம்பு வரை சென்று பிழைத்தவர். 

0

ஒரு காலத்தில் ’சக்கரநாற்காலி அழகுப் போட்டி’ என்கிற வார்த்தையில் ’சக்கரநாற்காலி’ ’அழகு’ போன்ற வார்த்தைகளுக்கிடையே முரண்பாடு இருப்பதாகவே கருதினார் ப்ரியா. ஆனால் 'மிஸ் வீல்சேர் வேர்ல்ட் 2017' போட்டியில் உலகெங்கிலுமிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இறுதி போட்டியாளர்களில் இந்தியா சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் இவரும் ஒருவர்.

இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது?

அவர் உற்சாகமாக ஓவியம் தீட்டினார். கற்பித்தார். ஒருவரின் வாழ்க்கையில் நடக்கும் ஒரே ஒரு சம்பவத்துடன் இணைத்துப் பார்த்து ஒருவரை மதிப்பிடக்கூடாது என்று நம்பினார். சுய சந்தேகம், சுய விருப்பம் என இவரது பயணம் இறுதியில் ஒரு உலகளாவிய அரங்கிற்கு இட்டுச்சென்றது.

செப்டம்பர் 29-ம் தேதி முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை போலாந்தில் நடைபெற்ற போட்டி அதுவரை இல்லாத அளவிற்கு நம்பிக்கையை அவருக்கு அளித்தது. இல்லையெனில் அவரால் வெற்றிவாகை சூடி கிரீடத்தை வென்றிருக்கமுடியாது. போலாந்தில் ஒரு பரபரப்பான ஆனால் வாழ்க்கையையே மாற்றியமைத்த பயணத்தை முடித்து திரும்பியுள்ளார். உற்சாகம் நிரம்பிய கதைகளுடன் காணப்படுகிறார். பல்வேறு அனுபவங்களை சேகரித்துள்ளார். அவரது வெற்றி அவரது நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்தது.

போலாந்து பயணம்

அழகுப்போட்டியில் கலந்துகொள்ள தீர்மானித்ததும் தயாரானதும் நொய்டாவைச் சேர்ந்த ப்ரியாவின் உய்யொளியுடன் ஒத்திருந்தது. ப்ரியா ஒரு ஓவியர், எழுத்தாளர், ஆசிரியர். லூபஸ் என்றழைக்கப்படும் சிஸ்டமிக் லூபஸ் எரித்திமாடோசஸ் என்கிற அரிய தீர்க்கமுடியாத நோயால் அவதிப்பட்டார். இந்த நோய் தாக்கத்தால் அவருக்கு தினமும் 10-12 மணிநேர ஓய்வு தேவைப்பட்டது. எனவே அவர் முழுநேர பணியில் ஈடுபட ப்ரியாவின் உடல்நிலை அனுமதிக்கவில்லை. ராணுவ அதிகாரியாக்கும் கேந்திரியா வித்யாலயா ஆசிரியருக்கும் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக பிறந்தவர் ப்ரியா. அவருக்கு 19 வயதிருக்கையில் அவருக்கு இந்நோய் இருப்பது கண்டறியப்பட்டது.

பேராசிரியர் பிரபாத் ரஞ்சன் ப்ரியாவின் முகநூல் நண்பர். மிஸ் வீல்சேர் இந்தியா அழகுப்போட்டி குறித்த செய்தியை அவர் ப்ரியாவிடம் பகிர்ந்துகொண்டார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.

“நான் அவருடன் பேசுவேன். என்னுடைய பொதுவான பிரச்சனைகளை அவருடன் பகிர்ந்துகொள்வேன். அவர்தான் மிஸ் வீல்சேர் இந்தியா அழகுப்போட்டிக்கு விண்ணப்பிக்கத் தூண்டினார்,” என்றார்.

ஆரம்பத்தில் ப்ரியா இது குறித்து தீவிரமாக சிந்திக்கவில்லை. ஏனெனில் அவர் படிப்பில் கவனம் செலுத்தவே விரும்பினார். 2014-ம் ஆண்டு கணினி பயன்பாடுகள் பிரிவில் முதுகலை படிப்பை முடித்தார். 2015-ம் ஆண்டு அமைதியாகவே கடந்தது. 2013-ம் ஆண்டு அழகுப்போட்டியை துவங்கிய சோனக் பேனர்ஜிக்கு தனது புகைப்படத்தையும் சுயவிவரங்களையும் அனுப்பினார் ப்ரியா. அவர் உடனே ப்ரியாவை அழைத்து போட்டியில் பங்கேற்ற ஊக்குவித்தார். 

“நேர்காணல் நடத்தினார். அடுத்ததாக சில கவர்ச்சியான படங்களை அனுப்பச் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அழகு, கவர்ச்சி போன்ற வார்த்தைகளும் குறைபாடு என்கிற வார்த்தையும் ஒன்றாக இணைத்துப்பார்க்கவே முடியாது என்று நம்புபவர்களில் நானும் ஒருவர்,” என்று நினைவுகூர்ந்தார்.

”இதில் தொடரவேண்டாம் என்கிற தீர்மானாத்துடன் ஏதாவது காரணம் சொல்லி பின்வாங்கலாம் என்றிருந்தேன். ஆனால் நான் அவர்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்பே பேராசிரியர் பிரபாத்திடமிருந்து அழைப்பு வந்தது. முன்னணியிலிருந்த ஏழு பேர் அடங்கிய பட்டியலில் என்னுடைய பெயரும் இடம்பெற்றுள்ளதாக பாராட்டினார். மகிழ்ச்சியடைவதற்கு பதிலாக அதிர்ச்சியடைந்தேன். இந்த அருமையான வாய்ப்பை தவறவிட நினைப்பதற்காக கடிந்துகொண்டார். எனவே போட்டியில் பங்கேற்க தீர்மானித்தேன்,” என்று விவரித்தார்.

கடந்து வந்த பாதை...

19 வயதில் லூபஸ் நோய் பாதித்த ப்ரியாவிற்கு எதுவும் எளிதாக கிடைத்துவிடவில்லை. 

“முதலாண்டு பிசியோதெரபி சிகிச்சையில் இருந்தேன். பல சிக்கல்கள் காரணமாக படுக்கையோடு இருக்கும் நிலை ஏற்பட்டது. செயலற்ற அந்த கட்டத்தை கடந்ததும் இறுதியாக சக்கரநாற்காலியை பயன்படுத்தவேண்டும் என்று தெரிவித்தனர்,” என்று நினைவுகூர்ந்தார்.

அவரது படிப்பை நிறுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. பணித்துறை குறித்தும் வாழ்க்கை குறித்தும் தீர்மானிக்கவேண்டிய இளம் பருவத்தில் இந்த குறைபாடு ஏற்பட்ட காரணதால் ப்ரியாவிற்கு மனஅழுத்தம் ஏற்பட்டது. எனினும் சரியான நேரத்தில் நோயை கண்டறிந்தது, முறையான சிகிச்சை, பொழுதுபோக்கில் ஈடுபடுவது, நெருக்கமானவர்களின் ஆதரவு போன்றவை மூன்று மாத காலத்தில் அவர் மீண்டு வர உதவியது.

இருப்பினும் மோசமான காலகட்டம் முடிவுக்கு வரவில்லை. இரண்டாவது முயற்சியாக ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி பிரிவில் டிப்ளோமா சேர்ந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் தீவிரத்தால் தோல் தொற்று ஏற்பட்டது. பல அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. இதை குணப்படுத்துவதற்காக ரத்தம், ப்ளாஸ்மா, ப்ளேட்லெட் போன்றவை உடலுக்குள் செலுத்தப்பட்டது. 

”மூன்று முறை மரணத்தை சந்தித்துள்ளேன். என்னுடைய பட்டப்படிப்பை கைவிடவேண்டிய நிலை ஏற்பட்டது. என்னுடைய நிலைமை தீவிரமாகி மோசமடைந்ததால் ராணுவத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான ஆர் & ஆர் மருத்துவமனைக்கு என்னை மாற்றினர். ரத்த புற்றுநோய், செப்டிசீமியா என பல நோய்கள் இருப்பது அடுத்தடுத்து கண்டறியப்பட்டது. சிறப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்கிற நம்பிக்கையே எனக்கு இல்லை,” என்று நினைவுகூர்ந்தார்.

மிகுந்த கஷ்டத்துடன் ஆனால் மன தைரியத்துடன் கல்வியைத் தொடர்ந்து கணினி பயன்பாட்டுப் பிரிவில் பட்டப்படிப்பையும் முதுகலை பட்டத்தையும் முடித்தார். டியூஷன் எடுப்பதன் மூலமும் ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலமும் படிப்பிற்கான பணத்தேவையை பூர்த்திசெய்துகொண்டார்.

வாழ்க்கையில் ஒரு புதிய உற்சாகம் தோன்றியிருந்தாலும் எதிர்மறை உணர்ச்சிகளும் தோன்றவே செய்தது. “தொடர் மனநிலை மாற்றம், சைனஸ், உடல் மற்றும் மனம் சார்ந்த உழைப்பு காரணமாக ஏற்பட்ட நோய்கள் என பல்வேறு நோய்கள் தாக்கின. ஆனால் நீங்கள் ஒரு சாதனை படைக்கவேண்டும் என்று விரும்பினால் உங்களால் எல்லாவற்றையும் கடந்து வரமுடியும் என்று திடமாக நம்புகிறேன்,” என்றார்.

புதிய முயற்சி

தனது பலவீனத்தையும் குறைபாடுகளையும் முறையாக எதிர்கொண்டு அழகுப்போட்டிக்காக தன்னை தயார்படுத்திக்கொண்டதாக தெரிவித்தார் ப்ரியா. 

”யூட்யூப் வாயிலாக மேக்அப் சாரந்த விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். கண்ணாடி முன் நின்று பேசுவதற்கு பழகினேன். என்னுடைய உடல் எடையை சீராக்கினேன்,” என்றார். 

2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் MWI வென்றார். ஊடகங்களின் கவனம் இவர் பக்கம் திரும்பியதாலும் 2016-ம் ஆண்டு அவர் வென்ற அமெரிக்க பயணத்தாலும் அவரது வாழ்க்கையில் மாற்றமேற்படத் துவங்கியது. அழகுப்போட்டி குழுவினர் விளம்பர வீடியோவிற்காக இவரை அணுகியபோதுதான் அமெரிக்காவில் மிஸ் வீல்சேர் வேர்ல்ட் பற்றி தெரிந்துகொண்டார். மேலும் Quora –வில் அவரை பின்பற்றுவோருடன் தொடர்பில் இருந்தார்.

இதுவும் அவருக்குப் பலனளித்தது. அவரது எழுத்துக்கள் நியூயார்க்கைச் சார்ந்த ’பாப்புலேரியம்’ முதன்மை எடிட்டரை கவர்ந்தது. அத்துடன் ஆன்லைன் பத்திரிக்கையான thecompletewomen.in அவரை பாராட்டியது. இதற்கு ஒரு நேர்காணலும் அளித்தார்.

இரண்டு பதிப்பகங்களும் அவர் எழுத வாய்ப்பளித்தது. ‘ஹோல்டிங் மை டியர்ஸ்’ என்கிற புத்தகத்திற்கு இணை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். மிஸ் வீல்சேர் வேர்ல்ட் போட்டியில் அவர் இந்தியாவின் பிரதிநிதியாக பங்கேற்காலம் என்று இந்த ஆண்டு ஜூன் மாதம் ப்ரியாவிடம் தெரிவிக்கப்பட்டது. இந்திய அரசாங்கம் பெண் தொழில்முனைவோர் சங்கத்துடன் இணைந்து ‘நாரி பிரதிபா புரஸ்கார்’ வழங்கி ப்ரியாவை கௌரவித்தது.

”மக்கள்; பெண்களை பலவீனமானவர்களாக பார்க்கிறார்கள். அதிலும் ஒரு பெண் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவரை மனநலம் குன்றியவராகவே பார்க்கின்றனர். எங்களது கால்கள், பாதம், விரல்கள், கைகள், முகம் அனைத்தையும் உற்று நோக்கி எங்களது உடலில் இருக்கும் குறைபாடுகளை கண்டறிய முற்படுவார்கள். சக்கரநாற்காலியை கண்டபிறகும் லிஃப்டில் ஏற முந்திக்கொண்டு செல்வார்கள். மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறைகள் மோசமான நிலையில் இருக்கும். மருத்துவமனைக்கு செல்கையில் இப்படிப்பட்ட பல்வேறு விநோதமான நடவடிக்கைகளை பலமுறை எதிர்கொண்டுள்ளேன்,” என்றார் ப்ரியா.

”நம் நாடு அனைவரையும் உள்ளடக்கியதாக மாறவேண்டும். மாற்றுத்திறனாளிகளை கேலி செய்பவர்களுக்கும் புண்படுத்துவோருக்கும் கடுமையான தண்டனை வழங்கி அபராதம் விதிக்கவேண்டும். அரசாங்கம் இவற்றை நடைமுறைப்படுத்தினாலொழிய நிலை மாறாது.”

ப்ரியாவின் பயணத்தில் உடல் வலி ஒருபுறமிருக்க உறவினரின் புறக்கணிப்புகளை எதிர்கொள்ளவேண்டியிருந்தது. இவர்கள் இறைவனிடம் மன்னிப்பு கேட்குமாறும் முன்வினை காரணமாகவே இந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, “நான் பாதிக்கப்படவில்லை. சுயாதீனமாக இருக்கிறேன். சம்பாதிக்கிறேன். சேமித்தும்வைக்கிறேன்,” என்றார்.

ஆங்கில கட்டுரையாளர் : பின்ஜல் ஷா