இனி நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க தேவையில்லை: 'ஸ்மின்க்' உங்களுக்கு உதவும்!

0

எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புனேயில் சச்சின் பரத்வாஜ் தீப்பெட்டி அளவே உள்ள வீட்டில் தான் தங்கியிருந்தார். அதுவே அலுவலகமாகவும் செயல்பட்டது. இரண்டு ஆண்டுகள் இப்படியே கழித்தார். இது போன்ற நிலையில் பெங்களூரில் இருக்கும் அவரது பெற்றோரை புனேவுக்கு அழைக்க தயக்கமாக இருந்தது. அப்போது தான் 'டேஸ்டிகானா' (Tastykhana) என்ற நிறுவனம் துவங்கப்பட்டிருந்தது.

கைவசம் இருந்த மிகக்குறைவான பணத்தை வைத்தே இந்த தொழிலை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாத வாடகைக்காக தன்னிடமிருந்த ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளெண்டரை 13,000 ரூபாய்க்கு விற்றுவிட்டார்.

அதெல்லாம் ஒரு காலம். இப்போது பி.எம்.டபிள்யூ காரில் சென்றுகொண்டிருக்கிறார் சச்சின். இப்போது இவருக்கு ஒரு மாதக் குழந்தை இருக்கிறது. தனது இரண்டாவது நிறுவனத்திற்கு 'ஸ்மின்க்' (Sminq) என்று பெயரிட்டிருக்கிறார்.

இந்த மாற்றமெல்லாம் கடந்த சில ஆண்டுகளாக தான் நடந்திருக்கிறது. இவரது டேஸ்டிகானா நிறுவனத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஃபுட்பாண்டா நிறுவனம் 120 கோடி ரூபாய்க்கு வாங்கிய பின் ஏற்பட்ட மாற்றமே இது.

ஃபுட்பாண்டா வாங்கிய கதை

கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் தான் டேஸ்டிகானாவை வாங்குவது தொடர்பான பேச்சுகள் துவங்கியது. யாருக்கும் யோசிப்பதற்கு கூட நேரம் இல்லை. அதற்குள் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துவிட்டது. 2011 ஆம் ஆண்டு பெர்லினை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனமான டெலிவரி ஹீரோ என்ற நிறுவனம் 5 மில்லியன் டாலரை டேஸ்டிகானா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது. டேஸ்டிகானாவின் பெரும்பாலான பங்கை இந்த நிறுவனமே கைவசம் வைத்திருந்தாலும் உள்ளூர் குழுவே தங்கள் பணியை மேற்கொண்டு தொடர அனுமதித்தது.

சச்சினுக்கும் ஷெல்டனுக்கும் இறுதி டீல் பெருமகிழ்ச்சியளித்தது, தங்களின் ஆரம்பகால முதலீட்டாளர்களுக்கு அவர்களிடமிருந்து பெற்றதை விட பத்து மடங்கு பணத்தை திருப்பி கொடுத்திருக்கிறார்கள். ஆரம்பக்காலத்தில் தங்களோடு தோள் கொடுத்த குழு உறுப்பினர்களுக்கு சிறப்பான அளவிலான பணத்தை கொடுத்திருக்கிறார்கள்.

ஃபுட்பாண்டா வாங்கி சில மாதங்களுக்கு பிறகு இவர்கள் எதிர்பார்த்தது போல எதுவும் நடக்கவில்லை. இரண்டு நிர்வாகத்திற்கும் இடையே பல்வேறு சிக்கல்கள் எழுந்தது.

சச்சின் அந்த பிரச்சினைகளை பற்றி விரிவாக பேச மறுத்துவிட்டார். ஃபுட்பாண்டாவின் வேலை கலாச்சாரம் மிகவும் கடினமான ஒன்று, கடந்த ஏழு ஆண்டுகளாக டேஸ்டிகானா உருவாக்கி வைத்திருந்த நூறு பேர் கொண்ட குழுவுக்கு அந்த பணிச்சூழல் சிக்கலானதாக இருந்திருக்கிறது.

ஃபுட்பாண்டாவின் நிர்வாகத்தின் மீதோ அவர்களின் செயல்பாட்டை பற்றியோ எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார். “என்னுடைய பாணியில் வேலை பார்ப்பது தான் சரி என அது எனக்கு உணர்த்தியது” என்கிறார்.

மார்ச் மாத துவக்கத்திலேயே அவரும் அவரது நிர்வாக குழுவும் ஃபுட்பாண்டா நிறுவனத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

"எங்களை பொறுத்தவரை நெறிமுறைகளும், கொள்கைகளுமே ஒரு தொழிலை சரியான பாதைக்கு கொண்டு செல்லும். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை. நெறிமுறையற்ற பாதையை தேர்ந்தெடுத்து வேகமாக முன்னேறுவதை காட்டிலும் மெதுவான வளர்ச்சி பரவாயில்லை. நான் போலீஸுக்கு கூட லஞ்சம் கொடுக்க விரும்பாத வகையை சேர்ந்தவன். ஒருமுறை ஒரு பிரச்சினைக்காக என்னுடைய லைசன்ஸ் ஆறு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. ஆனால் நான் லஞ்சம் கொடுத்து அதை சரி செய்ய முயற்சிக்கவில்லை” என்றார் சச்சின்.

“என்னிடம் இப்போது இருப்பதை வைத்துக்கொண்டே சந்தோசப்படுகிறேன். இதற்கு மேல் எதற்கும் ஆசைப்படவில்லை. ESOPS பேப்பர்களை தவறவிட்டபோது நானும் ஷெல்டனும் அந்த பணத்தை எங்கள் சொந்த பணத்திலிருந்து கொடுத்தே சரி செய்தோம். வாழ்க்கை மிகச்சிறியது, நீங்கள் இந்த நிலைக்கு உயர்ந்திருப்பதற்கு காரணமானவர்களை சிரமப்படவைக்கக் கூடாது” என்றார் சச்சின்.

இதை எப்படி பார்க்கிறார்கள்

ஃபுட்பாண்டாவில் இருந்து வெளியே வந்ததும் சச்சின் தன் அடுத்த இலக்கிற்கு தயாரானார். அந்த சமயம் தான் அப்பா என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார். பல்வேறு மகப்பேறு மருத்துவர்களை இதற்காக சந்தித்துக்கொண்டிருந்தார்.

“ஒவ்வொரு இடத்திலும் பலமணிநேரங்கள் செலவிட்ட்டோம். உங்களுக்கே அந்த அனுபவம் இருந்திருக்கும். அந்த காத்திருப்பு தருணங்கள் எவ்வளவு கொடுமையானவை, இந்த காத்திருப்பு நேரங்களை சுலபமாக்குவது எப்படி என்று யோசித்தேன்” என்றார் சச்சின்.

சச்சினும் அவரது மனைவியும் இதற்காக பல்வேறு வகையில் முயற்சித்தார்கள். ஆனால் அவர்களின் அப்பாயின்மென்டை தவறவிட்டது தான் மிச்சம்.

"காத்திருப்பு வரிசைகளை சமாளிக்க இவர்கள் ஏன் முயற்சிக்க கூடாது? தொழில்நுட்பம் நிச்சயமாக இதை சரிசெய்ய முடியும்” என்று ஆச்சரியப்படுகிறார் சச்சின்.

சச்சின், ஷெல்டன்(முன்னாள் இணை இயக்குனர்) மற்றும் சந்தோஷ் (டேஸ்டிகானாவின் முன்னாள் தலைமை விற்பனை பிரதிநிதி) எல்லோரும் இணைந்து 'ஸ்மின்க்' என்ற நிறுவனத்தை துவங்கினார்கள். இதன் மூலம் பூனேவில் உள்ள எட்டு மருத்துவமனைகளை தங்களோடு இணைத்துக்கொண்டு செயலாற்றி இருக்கிறார்கள்.

ஸ்மின்க் எப்படி வேலை செய்கிறது?

ஸ்மின்க் ஒரு மொபைல் அப்ளிகேஷன். இது வாடிக்கையாளர்களை கையாள உதவக்கூடியது. அதாவது வரிசையில் நிற்பவர்களை சமாளிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. உங்களுக்கான தருணம் வரும்போது இது ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பும். எனவே ஒரு வரிசையின் சமகால நகர்வை தெரிந்துகொள்ள முடியும். ரிமோட் மூலமாக இந்த வரிசையில் ஒருவர் இணைய முடியும்.

இதனால் எல்லோருமே நேரடியாக சென்றுகொண்டிருக்க தேவையில்லை. இந்த செயலி மூலமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரிமோட்டில் டாக்டரை புக் செய்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனங்களின் எச்.ஆர் களிடம் நேர்முகத் தேர்வை கையாள்வதற்கு இந்த செயலியை பயன்படுத்துவது தொடர்பாகவும் பேசி வருகிறார்கள்.

இந்த செயலிக்கு மிகப்பெரிய சந்தை இருப்பதாக சச்சின் தெரிவிக்கிறார். மருத்துவமனை, நேர்முக தேர்வுகள், ஆர்டிஓ மற்றும் பாஸ்போர்ட் அலுவலகங்கள், கார் பைக் சர்வீஸ் சென்டர்கள் என பரவலான இடங்களிலும் பயன்படுத்த முடியும்.

இந்த செயலி வாடிக்கையாளர்களை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின் விலை 2000ரூபாய் ஆகும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை பொருத்து விலை கூடும்.

பல்வேறு நிறுவனங்கள் வாடிக்கையாளர் வரிசைகளை கையாளும் தொழில்நுட்பத்தை வழங்குகிறார்கள். ஆனால் இவர்கள் சில குறிப்பிட்ட துறைகளுக்கும், குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கோ, சில உணவகங்களுக்கோ தான் வழங்குகிறார்கள். மைடைம் மற்றும் க்யூ-லெஸ் என்ற இரண்டு நிறுவனங்கள் மட்டுமே பல்வேறு துறைகளுக்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள்.

எதிர்காலம்

"நான் நிறைய யோசித்திருக்கிறேன். ஆனால் நிறைய கற்றுக்கொண்டும் இருக்கிறேன். எனக்கு டேஸ்டிகானா மூலமாக கிடைத்த குழு நிறைவளிக்கிறது. அவர்கள் மூலமாகவே மிகச்சிறப்பாக தொழில் நடத்த முடிந்தது. அதையே இப்போது ஸ்மின்க்கிலும் தொடர்வேன்” என்கிறார் தன்னம்பிக்கையோடு.

இணையதள முகவர் : Sminq

ஆங்கிலத்தில் : APARNA GHOSH | தமிழில்: Swara Vaithee